Header Ads

முனைக்காடுகிராமத்தின் கல்விக்கு உரம் கொடுத்த கல்வி வட்டம் எங்கே?

மண்முனை தென்மேற்கு பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியில் முன்னிலைவகுத்த கிராமமாக முனைக்காடு கிராமம் விளங்கியது. இக்கிராமத்தில் இருந்த இளைஞர்களின் அயராத உழைப்பு, செயற்பாடு கல்வியின் வளர்ச்சிக்கு உரம் சேர்ந்தது. 

இந்நிலையில் படுவான்கரைப்பகுதியை முன்னிலைப்படுத்தி ஒளிக்கல்லூரி அமைப்பு உருவாக்கப்பட்டு பல உன்னத சேவையை வழங்கி இருந்தது. அதே நேரத்தில் முனைக்காடு கிராமத்தில் உள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உரம் சேர்க்கும் வகையில் 1984ம் ஆண்டு உதயமானது கல்வி வட்டம், இதனை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தவர் அமரத்துவடைந்த ஆசிரியர் தங்கத்துரை ஆவார். 


உருவாக்கப்பட்ட கல்வி வட்டமானது தரம் -06 தொடக்கம் தரம் - 09வரையான மாணவர்களுக்கு சனி, ஞாயிறு தினங்களில் காலை 08மணி தொடக்கம் மாலை 12மணி வரை இலவச வகுப்புக்களை நடாத்தியது. அதேபோன்று பாடசாலை தவணைப்பரீட்சைகளுக்கு ஏற்றவகையிலான முன்னாயித்தப்பரீட்சை, மீட்டல் கருத்தரங்குகள் போன்ற சேவைகளையும் வழங்கியது. இதில் முனைக்காடு, முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை ஆகிய பாடசாலைகளை சேர்ந்த மாணவர்களும் கல்வி பயின்றனர்.

கல்வி வட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளை கொண்டு செல்வதற்காக தேவைப்பட்ட நிதிகளை பெற்றுக்கொள்ளும் வழிமூலமாக திரைப்படங்கள் காண்பிக்கப்பட்டு அவற்றில் இருந்து பெற்ற பணத்தினை கொண்டு கல்வி வட்டத்தின் செயற்பாட்டிற்காக செலவு செய்யப்பட்டது.

கல்வி வட்டத்தின் மூலமாக 1993ம் ஆண்டு காலப்பகுதியில் நூலகம் அமைக்கப்பட்டது. இந்நூலகத்திற்கு தினமுரசு போன்ற பத்திரிகைகளும் வாசிப்பதற்காக வைக்கப்பட்டிருந்தன. நூலகத்தின் பயன்பாடு மிகவும் அவசியமாக அக்காலத்தில் இருந்ததையும் அறியமுடிகிறது. நூலகத்தினை பயன்படுத்துவதற்கு ஊக்கப்படுத்தியவர்களுள் செ.முருகப்பிள்ளை ஆசிரியர், கந்தசாமி ஆசிரியர் என்பவர்களும் முக்கியம்பெறுகின்றானர். மாணவர்களிடையே வினாவிடைகளையும், பொது அறிவுசார்ந்த வினாக்களையும் கேட்பதுடன், அவர்களிடையே போட்டிகளையும் நடாத்தியமையினால் நூலகத்தினை அதிகம் பயன்படுத்தவேண்டிய தேவை அன்றைய மாணவர்களிடம் காணப்பட்டதாகவும், இவ்வாறான செயற்பாட்டின் பயனாகதான் இன்று பலர் அன்று பயின்றவர்கள் உயர்ந்த பதவிகளில் இருந்துகொண்டிருக்கின்றனர்.

கல்வியை வளர்ப்பதில் அதிகம் அக்கறை கொண்டு செயற்பட்ட கல்வி வட்டத்தின் நிருவாகங்கள் தொடர்ச்சியாக கொண்டு சில காலங்கள் நடாத்தியிருந்தாலும், பத்து வருடங்களுக்கு மேலாக அதனது செயற்பாடு இல்லாமல் சென்றதினால் கல்வி வட்டம் எங்கே? என்று தெரியாமல் தேடவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்த முனைமண்ணின் சொந்தங்கள் அனைவருக்கும் எமது முனைமண்ணின் மனப்பூர்வமான வாழ்த்துக்களும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.  

கல்வி வட்டத்தின் சேவை குறித்து இதைவிட தெரிந்தவர்கள் எமது மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் :- munaiman0@gmail.com