Header Ads

"நாங்க குடிச்சாலும் வெறிச்சாலும் ஒழுங்காட்தான் கூத்தாடினோம்"

-வன்னியசிங்கம் வினோதன்- 
மிழ்நாடு தஞ்சை பல்கலைக்கழக பேராசிரியர் மூ.ராமசாமி அவர்கள் மட்டக்களப்பிற்கு வந்திருந்த போது மட்டக்களப்பு வடமோடி, தென்மோடிக் கூத்து சார்ந்த சமூகத்தினரை சந்திக்க வேண்டும் என்பதற்காக கடந்த 23.11.2013 முனைக்காட்டு கிராமத்திற்கு வந்திருந்தார். ஊரில் உள்ள மூத்த கூத்துக்கலைஞர்கள்,அண்ணாவிமார்கள்,சிறுவர்கள், இளம் கூத்துக்கலைஞர்கள், கலை ஆர்வலர்கள் என ஓர் கூத்தர் பட்டாளமே கூடியிருந்தனர்.


மூ.ராமசாமி ஐயாவுடன் கூத்துக் கலை தொடர்பாக மிகச் சுவாரசியமாக அனைத்துக் கலைஞர்களும் உரையாடிக்கொண்டிருந்தனர். இவ் உரையாடலின் போது நன்கு படித்த ஓர் இளம் கலைஞர் வாயிலாக "பளைய ஆக்கள் குடிச்சித்து கூத்தாடினவங்க" என்கின்ற வார்த்தைப் பிரயோகம் ஒன்று வெளி வந்தது. உடனே கூட்டத்தில் இருந்த மூத்த கூத்துக் கலைஞர் ஒருவர் சடுத்தியாக எழுந்து "நாங்க குடிச்சாலும் வெறிச்சாலும் ஒழுங்காத்தான் கூத்தாடின நாங்க இப்பத்தய மாதிரி அரை குறை கூத்தாடல்ல....." என கூறினார்.



அங்கிருந்த பலருக்கு அவர் பேசிய வார்த்தை கோபத்தில் பேசிய ஓர் சாதாரண வார்த்தையாகவே தென்பட்டிருக்கும். உண்மையிலே பல அர்த்தங்களை தன்னகத்தே கொண்டமைந்த காத்திரமானதும் ,கனகியானதுமான ஓர் சொற் பிரயோகமாகும். "நாங்க குடிச்சாலும் வெறிச்சாலும் ஒழுங்காட்தான் கூத்தாடினோம்" உண்மையிலே யோசிக்க வேண்டிய வார்த்தைப் பிரயோகம். மேலோட்டமாக பார்க்கின்றபோது அதன் பொருள் எமக்குப் புலப்படாதுள்ளது. கூர்ந்து ஆழமாக அவதனிக்கின்ற போது அப் பெரியவரின் ஆதங்கமும், தற்காலத்து கூத்தின் நிலைப்பாட்டையும் அது புலப்படுத்துகின்றது.

மட்டக்களப்பு வடமோடிக் கூத்துக்கள் காலாகலமாக வட்டக்களரியிலேயே ஆடப்பட்டு வந்தன. கூத்துக்கென்றே பிரத்தியோகமான அரங்காக வட்டக்களரி காணப்படுகின்றது. களரியில் ஆடப்படுகின்றகூத்துக்களை பார்க்கின்ற போது மிக அழகாக கணப்படும். இவ்வாறாக பாரம் பரியத்தை பின் பற்றி வந்த கூத்துக்களை இன்றைய தலைமுறையினர் நேரச்சுருக்கம், அது, இது, என்று கூத்தினை கொன்று கொலையறுத்து இன்று மேடையில் ஆடும் அளவிற்கு கூத்தினை கொண்டு வந்துள்ளோம்.

உண்மையிலே அன்று அவர்கள் குடித்தாலும், வெறித்தாலும் கூத்தை கூத்தாகவே உருச் சிதைக்காமல் ஆடியிருக்கின்றார்கள். அந்த பெரியவர் கூறியது போன்று அரைகுறை கூத்துக்களை நாம்தான் ஆடிக்கொண்டிருக்கின்றோம். கூத்தை கூத்தாக வட்டக்களரியில் ஆடிய அவர்கள் குற்றவாளிகள் ஆனால் பட்ச்சட்ட மேடையில் கூத்தாடும் நாங்கள் சுத்தவாளிகள். இது எந்த விததில் நியாயம்? குடித்தாலும் வெறித்தாலும் கூத்தில் எவ்வித சில்மிசங்களையும் அவர்கள் செய்யவில்லையே!!!

" நாங்க குடிச்சாலும் வெறிச்சாலும் ஒழுங்காத்தான் கூத்தாடினோம்.." பளைய கூத்துக்கலைஞர்கள் மீது தவறான மனப்பதிவினை வைத்துள்ள அனைத்து தற்கால சமூகத்தினரின் கன்னத்தில் ஓங்கி விழுந்த அடி இந்த வார்த்தை. இவ் அடி அங்கிருந்த ஓர் சில இளம் கலைஞர்களிற்கும் புத்தி புகட்டியது. காரணம் நானும் என் சார்ந்த கலைஞர்களும்ஓர்சில கூத்துக்களை மேடையில் ஆடியிருந்தோம். அன்றைய நாள் எங்களுக்குள் ஓர் வைராக்கியம் ஏற்பட்டது இனிமேல் கூத்துக்களை மேடையில் ஆடக்கூடது , நமக்குரிய இடம் படச்சட்ட மேடையல்ல வட்டக்களரி என்பதை.

"படித்தவன் பாட்டைக் கெடுத்தான் எழுதத்தெரிந்தவன் ஏட்டக்கெடுத்தான் " என்பதற்கிணங்க படித்த நாம்தாம் கூத்தைக் கெடுக்கின்றோம். அன்றைய கலந்துரையாடலில் கூட பளைய கலைஞர்களை குறை கூறியதும் ஓர் படித்த மனிதர்தான். இவர்மட்டுமல்ல இவர் போன்று பளைய கலைஞர்கள் பற்றி தவறான மனப்பதிவுடன் எம்மில் பலர் இன்று வரைக்கும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். நான்கெழுத்துப் படித்து
விட்டோம் என்பதற்காகவும் த்ம்மை நான்கு பேர் திரும்பிப் பார்க்கவேண்டும் என்பதற்காகவும் எதை வேண்டுமானாலும் கூறிவிட முடியாது.

பளைய கூத்துக் கலைஞர்கள் குடித்தார்கள் வெறித்தார்கள் என்று சொல்கின்றோமே உலகத்தில் எவரும் செய்யாத காரியத்தையா அவர்கள் செய்தார்கள்?. அல்லது இன்று அவர்களை விமர்சிக்கின்ற படித்த வர்க்கம் இப்படியொரு காரியத்தை செய்யவில்லையா?. உலகமே இன்று தலைமேல்வைத்துக் கொள்ளும் கவியரசர். கண்ணதாசன் கூட குடிப்பழக்கம் இருந்திருக்கின்றது குடித்தால்தான் தனக்கு கவிதை வரும் என்பதை அவர் வாயிலாகஅவரே கூறியிருக்கின்றார். இந்த விடயம் எத்தனை பேருக்குத்தெரியும்? ஆனால் இன்று வரைக்கும் அவரது மறு முகத்தை பற்றி எவரும் பேசுவத்தில்லையே அவரது கவித்துவ வல்லமை, எழுத்தாற்றல்களைத்தானே பேசுகின்றோம். அவ்வாரிருக்க கூத்துக் கலைஞர்களை மட்டும் ஏன் நாம் இவ்வாறு குறை கூற வேண்டும்.

குடிப்பதோ குடிக்காமல் இருப்பதோ அது அப்பால் பட்ட விடயம் ஆனால் கூத்தைக் கூத்தாகவே ஆடியிருக்கின்றனர். அதுவே தமிழ் கலையுலகத்திற்கு கிடைத்த பெரும் வெற்றி. ஆனால் குடிக்காதவர்கள், படித்தவர்கள் என்கின்ற போர்வையின் கீழ் இருந்து கூத்தினை மேடையில் ஆடி அதன் அடிப்படை அம்சங்களை மாற்றி போலியான ஓர் வடிவத்தை கூத்தென்று கூறுவது சரியா?........தயவு செய்து தற்கால இளம் சமூகத்தினரிடம் மன்றாடிக் கேட்கின்றேன் கூத்தை கூத்தாக ஆடுங்கள் நாகரீக வலைக்குள் புகுத்தி எமது பாரம்பரிய கலை வடிவத்தை உருச்சிதைத்து விடாதீர்கள்அடுத்து வருகின்ற எமது சந்ததியினருக்கு இதுதான் கூத்தென்று கூறுவதற்கு கூத்திருக்காது அதன் எச்சம்தான் மிஞ்சியிருக்கும்.





கருத்துகள் இல்லை