Header Ads

படுவான்கரையில் கரைந்து செல்லும் விவசாயம்.

  மட்டக்களப்பு தமிழகம் கிழக்கு மேற்காக நீண்டு போய்க்கிடக்கின்ற வாவியினால் இரண்டாகப் பிரிக்கப்பட்டு இருப்பதனால் கிழக்கை அண்டிய பிரதேசம் எழுவான்கரை என்றும் மேற்குத்திசையினை உட்படுத்திய பிரதேசம் படுவான்கரை என்றும் வழங்கப்பட்டு வருகின்றது. படுவான், எழுவான் என்கின்ற சொற்பதங்கள் மட்டக்களப்பு தமிழர்களிடையே காணப்படுகின்ற பேச்சிவழக்குச் சொல்லாகும். சூரியன் எழுகின்றபகுதி எழுவான்கரை என்றும் அது படுகின்ற (அஸ்தமிக்கின்ற) பகுதி படுவான்கரை என்றும் அழைக்கப்படுவது மரபாகும். வயலும் வயல்சார்ந்த மருதநிலத்தினையும், காடும் காடுகள்சார்ந்த முல்லை நிலப்பகுதியினையும் ,மலையும் மலைசார்ந்த குறிஞ்சி நிலப்பகுதியையும் தன்னகத்தே கொண்டதாக படுவான்கரையின் நிலப்பரப்பு காணப்படுகின்றது.


படுவான்கரை என்றாலே அனைவரதுமனக்கண்ணிலும் வந்துதிப்பது வயல்நிலங்கள், நீர்,சேறு, காடு,விவசாயிகள் என்பனவாகும் ஏன்எனில் பல்லாயிரக்கணக்கான விளைநிலப்பகுதிகளை கொண்டமைந்துள்ள இந்நிலப்பகுதியில் வாழ்கின்ற மக்கள் விவசாயத்தையே தமது ஜீவனோபாயத் தொழிலாக நம்பி வாழ்கின்றனர் சேற்றுமண்வாசனையுடன் உழுதுண்டு வாழ்கின்ற உழவர் சமூகத்தின் அயராத உழைப்பினால் அரிசிக்கோ , சோற்றுக்கோ பஞ்சமில்லாது வந்தாரை வாழவைத்து அள்ளி அள்ளிக் கொடுத்த பூமி இது. அன்று எழுவான்கரைக்கு தேவையான அரிசி , நெல் என்பன படுவான்கரையில் இருந்தே எடுத்துச் செல்லப்பட்டன ஆனால் இன்று அந்நிலை மாறி  தலைகீழாக நிற்கின்றன  எழுவான்கரையில் இருந்து அரிசி வாங்கி உணவு உண்கின்ற அபர்த்த நிலைக்கு படுவான்கரை பிரதேசம் தள்ளப்பட்டுள்ளதைக் காணமுடிகின்றது.

சில வருடங்களுக்கு முன்னர் படுவான்கரை மண்ணில் அரிசிக்கடைகள் , அரிசி வியாபாரம் என்பன உருவானதாக சரித்திரமில்லை அவ்வாறு அரிசி தேவைப்பட்டால் பண்டமாற்று முறையில் தமக்குள்ளே மாற்றி பெற்றுக் கொண்டதாக இச் சமூகம் காணப்பட்டது. காரணம் அன்று விவசாயத்துக்கு பஞ்சமேயில்லை  ஆனால் இன்று தெருவுக்கு தெரு அரிசிக்கடைகள் மிகத்தீவிரமான முறையில் உருவாகுவது வேடிக்கையாக உள்ளன. தற்காலத்தில் படுவான் கரையில் வருவாயீட்டுகின்ற தொழிலாக அரிசி வியாபாரம் காணப்படுகின்றது. இதற்கான காரணங்கள் என்ன என ஆராய்ந்து பார்க்கின்றபோது  விவசாயசெய்கை பண்ணலின் வீதம் குறைவடைற்திருப்பதேயாகும் என அனுமானிக்க முடிகின்றது.

ஒருகாலத்தில் படுவான்கரை பிரதேசத்தில் விவசாயம் கொடிகட்டிப் பறந்தது எங்குபார்த்தாலும் பயிர்கள் பச்சைப்பசேல் என நிரம்பிக்காணப்பட்டன ஆனால் சமகாலங்களாக அநேகமான விளை நிலங்கள் வெறுமையாகக் கிடக்கின்ற துர்ப்பாக்கிய நிலைகளைக் கண்டுகொள்ள முடிகின்றது. தரிசி நிலங்களை விவசாயபூமியாக எமது முன்னோர்கள் இயந்திரமயமாக்கம் இல்லாத காலப்பகுதியில் மிகக் கடினப்பட்டு மாற்றி எமது கைகளில் ஒப்படைத்தனர் ஆனால் அதனை நாம் விவசாயத்துக்கு பயன்படுத்தாது வெறுமையாக விடுவதோடுமட்டுமல்லாது, வீடுகள் அமைப்பதற்குமான காணிகளாகவும் விளைநிலங்களை மூடி நம் தலைமேல் நாமே மண்ணை அள்ளிப்போட்டுக் கொள்கின்றோம். இந்த வருடக்கணக்கெடுப்பின்படி அரைவாசி விளைநிலங்கள் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படாமல் வெறுமையாகக் கிடக்கின்றன. இந் நிலைக்கு எமது விவசாயநிலை பின் தள்ளப்பட்டமைக்கான காரணங்கள் என்ன?...

இவ்வினாவினை எழுப்பியபோது “ நெல்லின் விலைக்குறைவு “ “பருவகாலமழைகள் நேரத்துக்கு பெய்யாமை” என்பதாகும். இதில் பெரும்பாலான விவசாயிகளிடத்தில் இருந்துவந்த ஒருமித்த பதில் நெல்லின் விலைக்குறைவு என்பதாகும். நெல்லின் விலையைத் தீர்மானிக்கின்ற சக்திகளாக யாரோ ஓர் முதலாளித்துவம் காணப்படுகின்றது . மழையிலும் வெயிலிலும் இராப்பகலாக பாடுபட்டு அறுவடை செய்த விளைச்சலின் விலையை எம்மைத்தவிர்ந்த ஓர் சக்தி தீர்மானிப்பதென்பதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறான செயற்பாடுகளே விவசாயத்துக்கும்,விவசாயிகளுக்கும் முட்டுக்கட்டைகளாக இருக்கின்றன.

இருந்தபோதிலும் நெல்லின் விலைக்குறைவுக்கு முற்று முழுதாக முதலாளித்துவத்தினை குறை கூறிவிட முடியாது. இதில் எமது சில அசமந்தப்போக்குகளும் தாக்கம்செலுத்துகின்றன. எங்கோ இருக்கின்ற முதலாளிமார் தமது விளைச்சலின் விலையைத் தீர்மானிப்பதற்கு இடம் கொடுத்தது யார் குற்றம்? எமது குற்றம். அறுவடைசெய்த நெல்லை உடனே விற்று விடவேண்டும் எனநினைக்கின்றமே தவிர அதனை உலரவைத்து பேணி பாதுகாத்து விலை உயர்கின்றபோது எம்மால் கொடுக்கமுடியாதா? ஐந்தாறு மாதங்களாக பொறுமையை கடைப்பிடித்து வேளாண்மை செய்த எம்மால் அறுவடையின் பின்னனான நெல் விற்பனையின்போது அப் பொறுமையினை ஏன் கடைப்பிடிக்கமுடியாதுள்ளது? எமது முன்னோர்கள் இயற்கை ஒளியில் நெல்லை உலரவைத்து நெற்பட்டறைகள் (நெற்களஞ்சியம்) அமைத்து பாதுகாத்து நல்ல விலைக்கு கொடுக்கவில்லையா?

 அதுமட்டுமல்லாது இடைத்தரகர்களாக இருக்கின்ற எம்மில் சிலபேர் தமது சுயஇலாபத்துக்காக எம் கண்ணைக்கட்டி சாக்கடைக்குள் இழுத்துச் செல்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகளும் எமது நட்டத்திற்கு காரணமாக அமைகின்றன. இடைத்தரகர்களை எம்மில் ஒருவனாகவும், உறவுக்காரணாகவும் ஊர்க்காரனாகவும் பார்க்கின்றமே தவிர அவன் தன் சுயஇலாபத்துக்காக நம்மை பாதகநிலைக்கு கொண்டு செல்கின்றான் என்பதை எவரும் உணர்ந்து கொள்வதில்லை. இவ்வாறான அசமந்தபோக்கில் நாம் இருந்தால் நெல்லின் விலையினை எம்மைத் தவிர்ந்த வேறு ஓர் காரணிகள்தான் தீர்மானிக்கும். இன்னும் சொல்லப்போனால் விலை குறைவுக்கு நாங்களே வழியமைத்துக் கொடுக்கின்றோம். இதன் பின் நெல்லின் விலை குறைந்து விட்டதென்று விளை நிலங்களை வெறுமையாக விட்டுவிடுகின்றோம் பின்னர் உணவிற்கான அரிசியை பெற அரிசிக்கடைககு போய் வெட்கித் தலைகுனிந்து நிற்பதோடு அந்த இடத்தில் கூடியளவு பணம் கொடுத்து அரிசி வாங்குகின்றோம்.

வெட்டு இயந்திங்களின் வருகை பல விவசாயிகளின் வயிற்றில் அடிக்கப்பட்டது. வேளாண்மை வெட்டுவதையே தமது தொழிலாக கொண்ட பல தொழிலாளிகள் இம்மண்ணில் செறிந்து காணப்படுகின்றனர் இதனால் வேளாண்மை வெட்டுவதையே தொளிலாகக் கொண்ட ஏழை மக்களின் வருவாய்கள் தடைப்படுகின்றன வேளாண்மை செய்யாத விவசாயிகளே வேளாண்மை வெட்டும் தொழில் செய்து தமது உணவுக்கு தேவையான நெல்லினை பெற்றுக் கொள்கின்றனர் ஆனால் வெட்டு இயந்திரத்தின் வருகையால் இவர்கள் தமக்கு தேiவான அரிசி இல்லமல் அரிசிக்கடைகளை நாடவேண்டிய நிர்ப்பந்தங்களுக்குள்ளாகின்றனர். இதற்கு இவைகளும் ஓர்வகையில் காரணமாக அமைகின்றன. வெட்டு இயந்திரத்தின் வருகையால் அறுவடையின்போதான காலம் , நேரம் , பொருளாதார செலவுகள் என்பன மிச்சமாக இருந்தாலும் வெட்டு இயந்திரத்தின் மூலம் அறுவடைசெய்யப்படுகின்ற நெல் முளைதிறனற்றவையாக காணப்படுகின்றன அடுத்தவருடம் விதைப்பதற்கு விதை நெற்கள் இல்லாமல் மீண்டும் அந்த முதலாளித்துவத்தினையே நாடுகின்றோம். இயந்திரங்களால் அறுவடை செய்யப்பட்ட நெல் ஈரப்பதன் கூடியவை, பதறுகள் நிறைந்தவை, அடிகட்டைகள் நிறைந்தவை, முளைதிறனற்றவை என பல நொண்டிச் சாட்டுக்களை சொல்லி விலையை குறைக்கின்றனர். வெட்டுஇயந்திரங்களை அனுப்பிய முதலாளிகளே நெல்வாங்குவதற்கும் வருகின்றனர் இவை தெரிந்தும் , இவற்றினால் பலமுறை பாதிக்கப்பட்டும் திரும்பத் திரும்ப வெட்டு இயந்திரத்தினுள்ளே தமது தலையை மாட்டிக்கொள்கின்றோம்.

மட்டக்களப்பின் ஏனைய பாகங்களுக்கு தேவையான அரிசிகளை வழங்கிய படுவான்கரை மண் ஏனையவர்களிடத்தில் கையேந்தும் அவலநிலைக்கு உள்ளாகிருப்பது வேதனைக்குரிய விடையமாகும். இந்த மண்ணுக்கென்றே இறைவனால் விசேடமாக வழங்கப்பட்ட அருட்கொடையே விவசாயம் அதனை மழுங்காது பாதுகாக்கவேண்டியது எமது தலையாய கடமையாகும் எமது முன்னோர்களால் இதுவரை கட்டிக் காப்பாற்றுப்பட்ட விவசாயத்துக்கான விளை நிலங்களை வீடுகள் அமைப்பதற்காகவும்,வெறுமையாக போடுவதனையும் தவிர்த்துக் கொள்ளவேண்டும். விவசாயம் செய்யாமைக்கு காரணம் நெல்லின் விலைக்குறைவு என்று சொல்கின்றமே தவிர அதன் பின்புலத்தினை நாம் பார்ப்பதில்லை. எம்மிடத்தில் உள்ள அசமந்தப்போக்கும், ஒற்றுமையின்மையுமே இதற்கு காரணமாகும். நாம் அனைவரும் ஒன்றினைந்து ஒருமித்த சிந்தனையுடன் இருப்போமானால் வேறு எந்தக் காரணியும் எமது விளைச்சலுக்கான விலையினை தீர்மானிக்க முடியாது. எமது விளைச்சலுக்கான விலையை நிர்ணயிக்கின்ற உரிமையை எம்மால் நிலைநாட்ட முடியும்…
  
                 ஆக்கம்
வன்னியசிங்கம் - வினோதன்
          முனைக்காடு






Munaiman..

கருத்துகள் இல்லை