Header Ads

வாழ்நாளில் 3000பேருக்கு மேல் வைத்தியம் பார்த்த பொன்னம்பலம்.

தற்போதைய நவீன வைத்தியமுறை செல்வாக்கு பெறாத காலத்தில் நாட்டு வைத்திய முறையினைக் கற்று தம்பிரதேசத்தினைச் சேர்ந்த 3000க்கும் மேற்பட்டவர்களுக்கு வைத்தியம் செய்தவர்தான் குமாரசாமிப்போடி பொன்னம்பலம்.


பழம்பெரும் கிராமமாகிய முனைக்காடு கிராமத்தில் 1928ல் பிறந்த இவர், ஏழு பிள்ளைகளுக்கு தந்தையாகவும் இருந்தார். விசக்கடி, வலிப்பு, காய்ச்சல் என பலநோய்களுக்கு நாட்டு மருத்துவம் செய்வதில் கைதேர்ந்தவராக விளங்கியுள்ளார். தனது வீட்டிலே மூலிகைத்தோட்டத்தினை அமைத்து, நாட்டு மருந்துகளை தயாரிப்பதற்கென தனி இடத்தினையும் அமைத்து, அதற்குள்ளே இறைவனை வணங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து, தன்னை நம்பி நாடி வருபவர்களுக்கு இலவச மருத்துவத்தினை செய்திருக்கின்றார்.

மாரியம்மன், நரசிங்கன் ஆகிய தெய்வங்களின் ஊடாகவே மருத்துவத்தினைச் செய்த இவர், முனைக்காடு வீரபத்திரர் ஆலயம், பன்சேனை மாரியம்மன் ஆலயங்களிலும் சடங்குகளையும் செய்திருக்கின்றார்.

படுவான்கரைப்பிரதேசத்தில் உள்ள மக்கள் தமது வீடுகளிலும் சடங்குகளை செய்து வருகின்றமையும் மரபே. அதற்கமைய இவரும் பல வீடுகளில் நடைபெறும் மாரியம்மாள், காத்தான் போன்ற தெய்வங்களுக்கான சடங்குகளை செய்தும் வந்துள்ளார். வேதாதிகளை ஆடச்செய்வதிலும் இவருக்கு பங்குண்டு. திருநீறு போடுதல், பஞ்சாங்கம் பார்த்தல், சூதன் குறி சொல்லுதல், கைநாடி பார்த்தல் போன்றவற்றிலும் தேர்ச்சியான இவர், தலையிடி தொடக்கம் சகலவிதமான நோய்களுக்கு மருத்துவம் செய்து பலரின் நோய்களை போக்கியிருக்கின்றார்.

சிறுகடை வைத்தும், மட்டை இழைத்தும், சட்டிப்பானை விற்றும் தனது குடும்ப வருமானத்தினை ஈடுசெய்து, தனது பிள்ளைகளையும் வளர்த்தெடுத்த இவர், வைத்திய சேவைக்கென பணம் கேட்கவில்லை. இலவசமாகவே செய்தார். விரும்பியவர்கள் விரும்பிய அன்பளிப்புக்களை செய்திருக்கின்றனர்.

முனைக்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் கண்ணகி அம்மன் ஆலயத்தோடு நெருங்கிய தொடர்பினைப் பேணிய இவர், இவ்வாலய நிருவாக சபையுடன் இணைந்து நிருவாக உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார். கண்ணகி அம்மனுக்கான வருடாந்த சடங்கின் போது, கல்யாணக்காலை அலங்கரிப்பதில் இவரின் பங்கு அளப்பெரியதாகவிருந்திருக்கின்றது.

66வருடங்கள் மண்ணிலே வாழ்ந்த இவர், 40வருடங்களுக்கு மேலாக நாட்டுவைத்திய துறையில் பிரகாசித்துள்ளார்.

நவீனத்துவம், நாகரீகம் செல்வாக்கு பெறும் தற்காலத்தில், வைத்திய துறைகளும் புதிய புதிய உபகரணங்களுடனும், மருந்துகளுடனும் உருவாகி வருகின்ற நிலையில், வெறுமனே கடவுள் நம்பிக்கையினையும், மூலிகைகளையும் வைத்துக்கொண்டு இலவச வைத்தியசேவையினை வழங்கிய நம்மூர் வைத்தியர்களை இலகுவில் தூக்கி எறிந்துவிட முடியாது. அந்நிலையில் எமது முனைமண்ணின் வைத்திய வாரிசு குமாரசாமிப்போடி பொன்னம்பலம் அவர்களின் சேவையினை  முணைமண் தளம் ஆவணப்படுத்துகின்றது.

ஏடுகளைக் கற்றும் பரிசாரி பாலிப்போடி அவர்களைக் குருவாக கொண்டும் நாட்டுவைத்திய துறையை கற்று, சேவையாற்றி 1994.03.01ல் மரணமடைந்த பொன்னம்பலம் அவர்களின் சேவைக்காக முனைமண் 'வைத்தியமாமணி" பட்டத்தினையும் வழங்கி கௌரவிக்கின்றது. மறைந்தாலும் பொன்னம்பலத்தின் சேவை மறையாது.

மீண்டும் ஒரு தேடலில் முனைமண் வாசகர்களை சந்திக்கும்......



கருத்துகள் இல்லை