கூவான் கோழியும் கொட்டைப்பாக்கான் குருவியும் - சொன்னது என்ன?
'ஒளி" சஞ்சிகையில் வெளிவந்த ஏனைய ஆக்கங்களில் இருந்து சற்று வேறுபட்ட வகையில் அமைந்ததாக கூவான் கோழியும் கொட்டைப்பாக்கான் குருவியும் என்ற ஆக்கத்தினைப் பார்;க்க முடியும்.
1984ல்ஆரம்பித்த முதலாவது ஒளி சஞ்சிகையில் இருந்து, 1986ம் ஆண்டு வரை வெளிவந்த 5வது ஒளி சஞ்சிகை வரை இவ்வாக்கம் இடம்பிடித்திருக்கின்றது. ஒவ்வொரு சஞ்சிகையிலும், சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளையும், அம்மக்கள் எதிர்கொள்ளும் துன்பவியல்களையும் வெளிக்கொண்டு வருவதாக் அமையப்பெற்றுள்ளது. படுவான்கரை மக்களைபேசுபொருளாக கொண்டு, இரண்டு ஐந்தறிவுள்ள உயிர்கள் உரையாடுவது போன்ற விதத்தில் இதனை ஆசிரியர் கொண்டு சென்றிருக்கின்றார். ஒளி சஞ்சிகையின் ஆசிரியராக இருந்த சி.வரதசீலன் என்பவரே இதனை எழுதியிருக்கின்றார்.
மட்டக்களப்பு மாவட்டத்தினை இருபெரும் பகுதிகளாக பிரித்துக்கூறுவதுண்டு. அதாவது, எழுவான்கரை, படுவான்கரை எனக்கூறுவர். சூரியன் உதிக்கும் பகுதியை எழுவான்கரை என்றும், சூரியன் மறையும் பகுதியை படுவான்கரை என அழைப்பதும் மரபு. இருபகுதிகளையும் பிரிக்கும் வகையில் மட்டக்களப்பின் நீளமான ஆறு இயற்கையாக அமைந்துள்ளது. இருபகுதிக்குமான போக்குவரத்து ஆரம்பத்தில் நீர்வழி போக்குவரத்தாகவே இருந்தது. தற்காலம் ஆறுகளுக்கு குறுக்கே பாலங்கள் அமைக்கப்பட்டமையினால், நீர் வழிபோக்குவரத்துக்கள் குறைவடைந்திருக்கின்றன.
நீர்வழி போக்குவரத்து நிலவிய இடங்களில் மண்முனைதுறை ஊடான போக்குவரத்தும் பிரபல்யமாகவிருந்தது. மண்முனை துறையின் ஊடாக அதிகமான மக்கள் பயணம் செய்வதுண்டு. இவ்வாற்றினை கடப்பதற்கு தோணியையும், பின்னர் பாதை என்று கூறுகின்ற படகு போக்குவரத்தினையும் பயன்படுத்தினர். அதன் பின்னர் 2014ல் பாலம் அமைக்கப்பட்டமையினால் நீர்வழிப் போக்குவரத்து இதனூடாக இல்லாமல்போனது.
நீர்வழி போக்குவரத்து நிலவிய நெருக்கடியான சூழலில்தான் ஒளி சஞ்சிகை வெளிவந்தது. அச்சஞ்சிகை வெளிவந்த காலத்தில் இருந்த பிரச்சினைகள் பற்றி, மண்முனைத்துறையில் உள்ள பற்றைக்காடுகளில் இருந்துகொண்டு கூவான்கோழியும், கொட்டைப்பாக்கான் குருவியும் பேசிய சமூகசார் பிரச்சினைகள்தான் இதில் இடம்பிடித்திருக்கின்றது. இன்றும் இப்பற்றைக்காடுகள் உள்ளன. ஆனாலும் முற்காலத்தில் இருந்த காடுகள் இப்போது இல்லை.
சமூக பிரச்சினைகள் இலகுவாக உரியவர்களுக்கும், ஏனையோருக்கும் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். வாசகர்களை ஆர்வத்துடன் வாசிக்க தூண்டுதல் வேண்டும். என்ற நோக்கில் இதனை உரையாடல்பாங்கில், ஐந்தறிவுள்ள ஜீவன்கள் பேசும்பாணியில் கொண்டு சென்றிருக்கின்றமை சிறப்புக்குரியது. இது ஆசிரியருக்குள்ளத் தனித்திறமை என்றே குறிப்பிட வேண்டும். அதே போன்று, இதில் கையாளப்பட்டுள்ள மொழிநடையும், எல்லோருக்கும் விளங்கும் வகையில் எளிய நடையில் கையாளப்பட்டுள்ளமையுடன், பேச்சுவழக்கு சொற்கள் அதிகளவில் கையாளப்பட்டுள்ளன. இது இன்னமும், உரிய பிரதேசத்தவர்களுக்கு விரைவாக விளங்ககூடியதாக அமையும். இதேவேளை கூறவந்தவிடயத்திற்கு அதிக விளக்கங்கள் கொடுக்காமல் நேரடியாகவே குறைந்த சொற்களைக் கையாண்டு கூறியிருக்கின்றமையும் சிறப்புக்குரியதே.
ஒளி வெளிவந்த காலத்திலே வாசித்த சிறுவர்கள், மண்முனைத் துறையால் செல்கின்ற போது, கூவான்கோழியையும், கொட்டைப்பாக்கான் குருவியையும் தேடியதாகக் கூறுகின்றனர். எனின் இவ்வாக்கம் வாசகர்களின் மனங்களில்; இடம்பிடித்துள்ள விதத்தினை விளங்கிக்கொள்ள முடிகிறது. இதேவேளை, இரண்டு பறவைகளையும் காண்கின்றபோது ஆசிரியரின் ஞாபகமே மனதில் தோன்றுவதாக தமது அனுபவத்தினையும் சிலர் பகிர்ந்து கொண்டனர். அவ்வாறெனின் இவ்வாக்கத்திற்கு அதிக வரவேற்பு இருந்திருக்கின்றதென்பது தெளிவு.
வெளிவந்த முதலாவது ஒளியில், மாணவர்கள் பரீட்சைக்கு செல்கின்ற போது, எதிர்நோக்குகின்ற சவால்கள், சிரமங்கள் பற்றியே இரு பறவைகளும் கூறி கவலையுறுகின்றன. 1984ல் பரீட்சை நிலையம் படுவான்கரையில் அமைய வேண்டும் என கவலையுற்று இரு பறவைகளும் பேசினாலும் அவர்களது எண்ணம் வீணாகாத வகையில், வருடங்கள் பின்சென்றாலும், படுவான்கரைப்பிரதேசத்தில் உள்ள பல பாடசாலைகள் இன்று பரீட்சை நிலையங்களாக மாறியிருக்கின்றன.
இரண்டாவது ஒளியில், எழுவான்கரையில் மின்சாரம் இல்லை. படுவான்கரைப்பகுதியில் மின்சாரம் கொண்டுவருவதற்கு மின்கம்பங்கள் நடப்பட்டாலும் இன்னமும் மின்கம்பங்கள் இழுக்கப்பட்டு மின்சாரம் கொண்டுவரப்படவில்லை எனக்கூறி இரு பறவைகளும் வேதனையுற்றன. ஆனால் உடன் நடந்தேறவிட்டாலும், காலம் கடந்தாவது, எல்லா இடங்களுக்கும் மின்சாரம் கிடைத்துள்ளன. இதனால் குப்பி விளக்கினை அனேகமான படுவான்கரை மக்கள் இன்று மறந்திருக்கின்றனர்.
மூன்றாவது ஒளியில், எழுவான்கரையில் உள்ள பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள், பாதையை கடந்ததும் அங்குள்ள ஒரு பேரூந்தில்தான் மாணவர்களும், மக்களும் செல்ல வேண்டும். இதனால் மாணவர்கள் பேரூந்தில் நசிபட்டு, உடைகள் அழுக்கடைந்து செல்ல வேண்டி உள்ளதெனக் கூறி இரு பறவைகளும் பரிதாபப்பட்டன. மாணவர்களுக்கு வேறாக, மக்களுக்கு வேறாக பேரூந்து இருந்தால் இவ்வாறான நெரிசல்கள், துன்பங்கள் ஏற்படாதென இருபறவைகளும் கூறின. தற்காலத்தில் பல பேரூந்துக்கள் பயணம் செய்கின்றன. ஆனாலும் 6மணிக்கு பின்னராக பேரூந்து போக்குவரத்து படுவான்கரைக்கு இன்றும் இல்லை.
நான்காவது ஒளியில், மண்முனை துறை ஊடாக பயணிக்கும் பாதையின் இயந்திரம் இல்லாமல் போனதால், மக்கள் தோணியில் பயணம் செய்யநேரிட்டு மரணம் சம்பவித்துள்ளது. பாதையின் இயந்திரம் இருந்திருந்தால் மரணம் சம்பவித்திருக்காது எனக்கூறி இரு பறவைகளும் மிக வேதனையுற்று நின்றன.
பாதை வழியான போக்குவரத்தின் போது, அதிக வெள்ளம் ஏற்பட்டால் பாதை போக்குவரத்து செய்யாது, அதிக காற்றுவீசினால் பயணிக்காது, பாதை சென்றுகொண்டிருக்கும் போது, இயந்திரம் பழுதடைந்தால் எங்கோ ஒரு திசைக்கு பாதையை கொண்டு செல்லும், பாதையில் ஏறும் போதும், இறங்கும் போதும் அவதானமாக நிற்க வேண்டும். அனுபவமில்லாதவர்கள் ஏறிச்செல்வது அச்சத்தினைக் கொடுக்கும். போக்குவரத்தில் ஆற்றில் வீழ்ந்து இறந்தவர்கள் பலர், வாகனங்களும் நீரில் மூழ்கியிருக்கின்றன. இவ்வாறான துன்பவியல் சம்பவங்கள் தொடர்ந்தும் நீடிக்ககூடாதென்ற பலரின் கோரிக்கைதான் 2014ல் பாலம் அமைக்கப்பட்டு போக்குவரத்து இலகுவாக்கப்பட்டது. இன்று எந்நேரத்திலும் பயணம் செய்யக்கூடிய நிலை உள்ளது.
ஐந்தாவது ஒளியில், வலையிறவு பாலம் திறந்தமையினால் கொஞ்சனாள் போக்குவரத்து செய்ய முடிந்தது. இப்போ அதுக்கும் வழியில்லாமப் போயிற்று. எனக்கூறி இரு பறவைகளும் கவலையுற்றன. யாழ்ப்பாணத்தில் மக்கள் வங்கில ஈடு வைச்ச நகைகளை அங்கேயே கொண்டு போய் குடுத்தாங்க. மட்டக்களப்பில்; வச்ச ஆக்களையெல்லாம் ஈடு எடுக்க கொழும்புக்கு வரச்சொன்னாங்களே, என்றும் இரு பறவைகளும் பேசிக்கொண்டன.
ஒளியில் வெளிவந்த ஐந்து, சமூக பிரச்சினைகளும் இன்று நிறைவேறியிருக்கின்றன. இதனை எ;ண்ணி மண்முனைத் துறையில் உள்ள கூவான்கோழியும், கொட்டைப்பாக்கான் குருவியும் மகிழ்ச்சி கொள்ளும். ஆனாலும் இன்னும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அவை எண்ணியும் இரண்டும் கவலையுறுங்கள், மண்முனைக் சென்றால் இரண்டின் புறுபுறுப்பையும் இன்றும் கேட்கலாம்.
- வ.துசாந்தன் -
Post a Comment