84ல் முனைக்காடு கிராமத்தில் உருவான கல்விக் கழகம்
முனைக்காடு கிராமத்தில் 1984ம் ஆண்டு சித்திரை மாதம் 15ம் திகதி 'கல்விக் கழகம்" எனும் அமைப்பொன்று தோற்றம் பெற்றிருக்கின்றது.
அப்போதைய காலத்தில் கிராமத்தில் எழுந்த பல்வேறு பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றிற்கான தீர்வுகளுக்கு வழிசமைக்கும் நோக்கில் இவ்வமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இக்கல்விக் கழகத்தின் தலைவராக அ.உமாபதிசிவம், செயலாளராக சி.மோகன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.
பிரதேசத்தில், முனைக்காடு கிராமத்திலேயே அதிகளவான கல்விமான்கள் உருவாகிய அக்காலத்தில், தொடர்ச்சியாக கிராமத்தினை வளர்ச்சிப்போக்குடையதாக கொண்டு செல்லும் வகையில், தூரநோக்கு சிந்தனையில் இவ்வமைப்பு உருவாக்கப்பட்டிருக்கின்றது என்பதனை அறியமுடிகின்றது.
கிராம மக்களின் கல்வி அறிவினை அதிகரிக்கச் செய்தல், விவசாயத்தில் முன்னேற்றமடைதல், தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதிலும் ஆர்வத்தினை செலுத்துதல். போன்ற நோக்கங்களின் அடிப்படையில்தான் இவ்வமைப்பு உருவாக்கப்பட்டிருக்கின்றது.
தற்காலத்திலும், இவ்வாறான தேவைப்பாடுகள், வளர்ச்சிப் போக்கு அவசியமான சூழலில், 1984ல் எழுந்த சிந்தனையின் வெளிப்பாடு, கல்வி ரீதியாக பல்திசையிலும் பரந்திருக்கின்ற அன்னைமண் பிறப்புக்களின் பட்டம், பதவிகள் நிருபணமாக்கி நிற்கின்றன.
நான்கு பிரதான நோக்கங்களின் அடிப்படையில் அவ்வமைப்பினால் அக்காலத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
1.பாடசாலைக்கு சேரவேண்டிய வயதுவந்தும் சேர்க்கப்படாத குழந்தைகள், படிப்பை இடையில் விட்டோர், அவர்களது பிரச்சினைகள்.
2. உப உணவுப் பயிர்ச்செய்கை
3. தொழில் வாய்ப்புக்களும், அவற்றில் ஈடுபடுவோரும்
4. இக்கிராமத்தின் வரலாறு
போன்ற விடயங்கள் தொடர்பிலான ஆய்வினை இவ்வமைப்பு மேற்கொண்டுள்ளது. ஆய்வுகளின் அடிப்படையில், தமது செயற்பாடுகளை முன்னெடுக்க செயற்பட்டமை இக்கிராமம் ஒரு கட்டத்தில் சிறந்த வளர்ச்சியை பெறுவதற்கு வழிகோலியிருக்கின்றதெனலாம்.
இவ்வாய்வு முயற்சிகளை மேற்பார்வை செய்பவராகவும், ஆலோசனை வழங்குபவராகவும் தா.சிதம்பரப்பிள்ளை செயற்பட்டிருக்கின்றார்.
ஒவ்வொரு பூரணை தினத்தன்றும் இவ்வமைப்பின் ஒன்றுகூடல் இடம்பெற்றுள்ளது.
தற்காலத்திலும், ஆய்வுகளை மேற்கொண்டு அதனூடாக கிராமங்களை வளர்ச்சிப் போக்கிற்கு இட்டுச் செல்லவேண்டிய தேவை உள்ளது.
- வ.துசாந்தன் -



Post a Comment