Header Ads

மனித இனத் தோற்றம்

 

மனித இனத்தோற்றம்

மனித இனம் எப்போது தோன்றியது என்பது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. வாலிலா மனிதக் குரங்குகள் நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றின என்றும் பத்துலட்சம் ஆண்டுகளுக்கு முன் பெரியமூளையையும், கூர்மையான கண்களையும், திறமையான கைகளையும் கொண்ட ஆதி மனிதன் தோன்றினான் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

தொல்பொருள் ஆய்வுகள்

  • பதினான்கு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் தாடை எலும்புகள் இந்தியாவில் சிவாலிக் குன்றுகளிலும் வடமேற்கு கென்யா நாட்டிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • சுமார் 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனித இனச் சன்றுகள் ஜாவா தீவிலுள்ள சோலோ நதிக் கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • ருடால்ஃப் மனிதன் ( Rudolph man) சுமார் மூன்று மில்லியன் ஆண்டுகட்கு முன் வாழ்ந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • கற்களால் ஆன ஆயுதங்களைப் பயன்படுத்திய மனித இனச் சான்றுகள் தென் ஆப்பிரிக்காவின் ட்ரான்ஸ்வால் பகுதியில் கிடைத்துள்லன.
  • நன்கு நிமிர்ந்து நடந்த ஹோமோ எரெக்டஸ் ( Homoerectus) என்னும் மனித இனச் சான்றுகள் ஜாவா தீவில் கிடைத்துள்லன.
  • ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் நியான்டர்தால் மனிதனின் எஞ்சிய அழிவுச் சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இம்மனித இனம் குகைகளில் வாழ்ந்ததாகவும், தோல் ஆடைகளை உடுத்தியதாகவும், தீயால் சமைக்கத் தெரிந்ததாகவும் அறிந்து கொள்ள முடிகிறது.
  • நியான்டர்தால் மனித இனம் அழிந்த பின் தோன்றிய இனம் தான் இன்றைய மனிதனின் மூதாதை எனக் கருதப்படும் குரோமன்யான் மனிதன் ஆவான்.
  • கற்கருவிகளைப் பயன்படுத்திய குரோமன்யான் மனிதன் வேட்டையாடிய பழைய கற்கால மனிதன் ஆவான்.
  • குரோமன்யான் மனிதனுக்குப் பின் தோன்றியவனே புதிய கற்கால மனிதன் (நியோ லித்திக் ). இவனே மனித நாகரிக இனத்தின் தொடக்கமாகக் கருதப்படுபவன்.
  • செக்கோஸ்லேவாகியா நாட்டின் லார்ச் நகருக்கு அருகில் உள்ள ஒரு குகையில் 35,000 ஆண்டுகட்குமுன் வாழ்ந்த இன்றைய மனிதத் தோற்றத்தை ஒத்த மனித எலும்புக் கூடொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்றைக்கு சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன் முழுமையான நாகரிகமடைந்த மனிதன் தோன்றி வாழ்ந்தான் என்று புதைபொருள் வரலாற்றறிஞர்கள் உறுதிபடக் கூறுகின்றனர்.

மனித இனப் பாகுபாடு

மனிதனின் உடல் தோல், தலைமயிர் அமைப்பு, கண்களின் நிறம், மண்டையோட்டு அமைப்பு, இரத்தத் தொகுதி ஆகியவற்றின் அடிப்படையில் மனித இனம் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை
  1. மங்கோலிய இனம் (Mongoloids)
  2. காக்கேசியஸ் இனம் (Caucasoid)
  3. நீக்ரோ இனம் (Negroids)

மங்கோலிய இனம்

மஞ்சள் நிறமுடையவர்கள் இந்த இனத்தைச் செர்ந்தவர்கள். சீனர்கள், ஜப்பானியர்கள், அமெரிக்க இந்தியர்கள், மங்கோலியர் மற்றும் எஸ்கிமோக்கள் இவ்வகையைச் சேர்ந்தவர்கள்.

காக்கேசிய இனம்

வெள்ளை நிறமுடையவர்கள் இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள். ஐரோப்பியர், அரேபியர், இந்தோ-திராவிட இனத்தவர் எல்லோரும் இவ்வகையில் அடங்குவர்.

நீக்ரோ இனம்

கறுப்பு நிறமுடையவர்கள் இவ்வினத்தில் அடங்குவர். ஆப்பிரிக்காவிலும்,பசிபிக்தீவுப் பகுதிகளிலும் வாழும் மக்கள் இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள்.
மேற்கண்டவாறு மனித இனப்பாகுபாடு இருப்பினும், தற்காலத்தில் இனக்கலப்பு ஏற்பட்டுள்ளது. இனத்துக்கு இனம் கண், வாய், மூக்கு ஆகியவற்றின் அமைப்பு மாறுபட்டு உள்ளது. தலை அமைப்பும் மயிரிழை அமைப்பும் கூட வேறுபட்டுள்ளன.

கருத்துகள் இல்லை