Header Ads

சமூதாயஅரங்கச் செயற்பாடுகளில் பாரம்பரியக் கலைகளுக்கு பெரும் பங்குண்டு

சமூதாயஅரங்கச் செயற்பாடுகளில் பாரம்பரியக் கலைகளுக்கு பெரும் பங்குண்டு. இன்றைய சூழலில் பரவலாக எல்லா இடங்களிலும் பாரம்பரியக் கலைகளின் இருப்புக்களும் செயற்பாடுகளும் அவற்றின் இன்றியமையாமையும் உணரப்பட்டும் உணர்த்தப்பட்டும் வருகின்ற சூழ்நிலையில் பாரம்பரியக் கலைகள் “அருகிச்செல்கின்றன, இன்றைய சூழலுக்கு ஒத்துவராது” என்பதான சொல்லாடல்களும்
உலாவரவே செய்கின்றன. எல்லாவற்றினையும் தாண்டி பாரம்பரியக் கலைகள் உரிய வீரியத்துடன் தொடர் செயற்பாடுகளாகக் இயங்கிக்கொண்டு வருகின்றமை பலரது உரையாடல்களில் இருந்தும், பலருடனான சந்திப்புக்களில் இருந்தும், தொடர்ச்சியாக இடம்பெறும் அவதானங்களில் இருந்தும் தெரிய வருகின்றது. இன்றைய சூழலில் பாரம்பரியக்கலைகளின் தொடர்செயற்பாடுகள் ஊர்களிலும் ஏனைய இடங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருப்பது கண்முன் உள்ள உண்மையாகும். இதற்கு சிறந்த உதாரணம் வருடாவருடம் மட்டக்களப்பின் பல்பிரதேசங்களிலுள்ள கோயில்கள்,சடங்குகள், விழாக்கள் மற்றும் ஏனைய நிகழ்வுகள் போன்றவைகளில் ஒரு பகுதியாக பாரம்பரியக் கலைகளின் அரங்கேற்ற நிகழ்வு இவ்வருடமும் மட்டக்களப்பின் பலகிராமங்களிலும் இடம்பெற்ற கூத்து நிகழ்வுகள் இதனை மேலும் உறுதிப்படுத்துகின்றது. இப்பின்னணியிலேதான் 2014.06.01 அன்று மட்டக்களப்பின் முனைக்காட்டு கிராமத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்ட பவளக்கொடி வடமோடிக் கூத்து நிகழ்வும் சிறந்த உதாரணமாகின்றது.


இப்பவளக்கொடி வடமோடிக் கூத்து முனைக்காடு நாகசக்தி கலாமன்றத்தின் ஏற்பாட்டில் மிகவும் பிரமாண்டமான முறையில் பெருவிழாவாகப் ஆற்றுகை செய்யப்பட்டிருந்தது. உண்மையில் நான் 1996, 1997காலப்பகுதியில் கதிரவெளிக் கிராமத்தில் வசித்துக் கொண்டிருக்கும் வேளையில்  வாளவீமன், கர்ணன் போர்,18ம் போர், இராமநாடகம்,கீசகன் வதை….போன்ற இன்னும் பல கூத்துக்களை கண்டுகளித்துள்ளேன். அப்போது நான் பொடியன்களுடன் சேர்ந்து வட்டக்களரிக்கு பக்கத்திலிருந்து பார்த்து, கேட்டு, வாய்பார்த்து அனுபவித்த இன்பகரமான, சந்தோசமான, விளையாட்டான வாழ்க்கையை மறுபடியும் உணரச் செய்தது அவ்வரங்கேற்றமாகும். அம்மா,அக்கா,சித்தி போன்றோர்… பன்பாய் தலையணை மற்றும் கச்சான்,சோளன்,தேங்காய்ச் சொட்டு போன்ற தீன்பண்டங்களுடன் போய் வந்த ஞாபகங்கள் எல்லாம் மனதை தொட்டவண்ணம் இருந்தன. இத்தகைய நினைவுகளை மீட்டுப்பார்க்க வைத்த பவளக்கொடி கூத்திற்குபெரும்பங்குள்ளது எனலாம்
படங்கிலிருந்து கச்சான் சாப்பிட்டு நண்பர்களோடு பகிடிபண்ணி,கதைத்து,நித்திரை கொண்டு, சேட்டைகள் பண்ணி இருந்தமையானது என்னை சற்றுபின்னோக்கிப் பார்க்கவைத்ததன் நிமிர்த்தம் நாங்கள் பலவற்றை இழந்தும் மறந்தும் வெறும் புத்தகங்களைப் படிக்கின்ற பூச்சிகளாக இருக்கின்றோம், இருந்திருக்கின்றோம் என்பதை மதிப்பிட உதவும் களத்தினைஅமைத்துத் தந்ததில் அவ்வரங்கேற்றம் முக்கியமாகின்றது. பாரம்பரியக் கூத்துக்கலைகள் மிளிர்கின்ற கிராமத்தில் பிறந்து வாழ்ந்து இன்று கூத்துஅருகி,மருகி,இல்லாமலும் போய் விட்டது, இதுதான் கூத்து, இது கூத்து இல்லை என்பதான சொல்லாடல்களை வாசித்து, கேட்டு அறிந்து கொண்டதன் நிமிர்த்தம் ஏற்பட்ட என்னுடடைய தேடலும் பார்வையும் பலநிலைகளிலும், பலகோணங்களிலும் பயனித்ததன் பின்னணியிலேயே இத்தகைய விடயம் தொடர்பாக கதைக்கவும், தேடலும், எழுதவும் கூடிய மனோபாவமும் தைரியமும் எனக்குள் ஏற்பட்டதாக உணர்கிறேன். அதன் வெளிப்பாடுகளுள் ஒன்றே பவளக்கொடி கூத்துப் பற்றிய இப்பகிர்வு.

பாட்டன், பாட்டி, அம்மா அப்பா, கணவன் மனைவி, அண்ணன் தம்பி, அக்கா தங்கை, பிள்ளை, குட்டி என பல தரப்பட்டவர்களையும் ஒன்றினைப்பதற்கு வரவழைக்கும் களமாக அப்பாரம்பரிய அரங்கேற்ற நிகழ்வு காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். ஏனென்றால்அவ்வரங்கேற்ற வெளியில் காணப்பட்ட சுதந்திரமான வட்டக்களரி, வெளி, ஆற்றுகைச்சூழல் போன்ற பலவற்றை கூறிக்கொள்ள முடிகின்றது. ஆனால் இவ்வாறான சமூக ஒன்றிணைவினை வேறு இடங்களில் ஒன்றிணைப்பதென்பது சாத்தியமற்றது என்பது உணரப்பட்டு கடிதம், சுவரெட்டி, ஒலிபெருக்கிமூலம் அறிவித்தும் கூடசெய்ய முடியாத ஒன்றினை கூத்தரங்கேற்றம், சதங்கையணி போன்ற நிகழ்வுகளால் செய்யமுடிகின்றது என்றால் இதனையா! நம்மவர்கள் எவ்வாறெல்லாம் தூற்றி வைத்திருக்கின்றார்கள் என்பதைஅவ்விடத்தில் சிந்திக்க அவ்வரங்கு தூண்டியது என்பது முக்கியமாகின்றது. ஏனென்றால் கூத்து அரங்கேற்றத்தினை மாத்திரம் பார்த்து ரசிப்பதை தாண்டி பழையநினைவுகள், எண்ணங்கள், செயற்பாடுகள் மற்றும் கதைத்தல், கேட்டல், உறவுகளைச் சந்தித்தல், உணர்வுகளை பகிர்ந்துகொள்ளல் எனசமூக் குழுமத்தின் வரவேற்பு தரும் களமாக பவளக்கொடி அரங்கேற்றச் சூழல்அமையப்பெற்றிருந்தமை சிறப்பம்சமாகும்.

இவ்வகையானத் தன்மைகளையும், பண்புகளையும் கொண்டிருப்பதனால் தான் இன்றும் அம்மக்களின் உறவோடும், வாழ்வோடும், உள்ளத்தோடும், உணர்வோடும். உடலோடும், இழையோடியதன் வெளிப்பாடே பவளக்கொடி அரங்கேற்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற முடிந்துள்ளது. கூத்தரங்கேற்றத்திற்கு சற்றுமுன்னர் நாலாப்புறத்திலிருந்தும் மக்கள் கூட்டம் குவிந்தமை அந்நிகழ்வின் சிறப்பினையும் அதில் குறித்த பிரதேசமக்களின் ஈடுபாட்டினையும் விருப்பினையும் உணர்த்தியது.நாங்கள் 1996,1997 காலப்பகுதியில் ஊர்களில் இடம்பெற்ற கூத்துக்களைப் பார்ப்பதற்கு முதற்சென்று  இடம் பிடிப்பதற்காக ஓடிய அந்த ஞாபகம் அன்று அவ்வரங்கேற்றத்தின் மூலம் எனக்குள் மீட்டப்பட்டன. கூத்து என்றால் அதுதான்,அப்படித்தான் இருக்கம் இதனை விரிவாக விபரிக்கவும் முடியாது சொல்லவும் முடியாது. ஏனென்றால் அவ்விடத்தில், அக்களத்தில் நிற்கின்ற பொழுதுதான் அதன் உயிர்ப்புத்தன்மைதென்படும்.
நான் அவ்வரங்கேற்ற நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்தவேளையில் பல இடங்களில் நின்று, இருந்து பார்த்ததன் நிமிர்த்தம் அவ்வரங்கவெளி பிரமாண்டமான காட்சிப் பின்புலத்தைஉள்ளடக்கியிருந்ததையும் அதை எளிமையாக உணர்த்தி உணர முடிந்தது. இவ்வரங்கேற்றத்தில்  பலதரப்பட்டவர்களின் பங்களிப்பும் வருகையும்,வயது,பால் வேறுபாடுகளின்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எவ்வித வரையறைகளும் இன்றி காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அதாவது அறுபது வயதுகளை எட்டிய பாட்டன்,பாட்டிமார்கள் இரண்டு, மூன்று வயதுடைய பிள்ளைகள்,சிறுவர்கள்,பெண்கள்,ஆண்கள் என பலதரப்பட்டவர்களும் பங்குகொள்ள, ஒண்றிணைக்க சந்தர்ப்பம் கொடுத்ததில் இவ்வரங்கேற்றத்திற்கு பெரும்பங்குண்டு எனலாம். குடும்பசகிதம் அனைவரும் பங்குகொண்டு உண்டு மகிழ்ந்ததும் முக்கியமானது. பல சிறுவர்களை அவதானித்தேன் அவர்கள் கச்சான் விற்கின்றவர்களாகவும் ஆடி ஓடி விளையாடுகின்றவர்களாகவும் களரிக்குப் பக்கத்திலிருந்து கூத்துக்களைப்பார்த்து, கூத்தாடுபவர்களுக்கு காசிமாலை,பூமாலை,கச்சான்மாலை மற்றும் ஏனையமாலைகள் அணிகின்றவர்களாகவும், நித்திரை கொள்கின்றவர்களாகவும் சத்தங்கள் போட்டுக் கொண்டு விளையாடுகின்றவர்களாகவும் காணப்பட்டனர். இது சிறுவர் அரங்கக்கற்றல் கூடமாகவும் விளையாட்டு இடமாகவும் அக்கூத்தரங்கு செயற்பட்டதை உணர்த்தியது.

இங்கு சிறுவர்கள் விளையாடவோ, கூடிச் செயற்பட்டு மகிழவோ உரியவாய்ப்புக்கள்  நமது சூழலில் குறிப்பாககற்றல் செயற்பாடுகளில் எந்தளவிற்கு வழங்கப்படுகின்றது? பாரம்பரியக் கூத்தரங்கு அத்தகைய வாய்ப்பை எவ்வாறு எளிமையாக ஆனால் வளமாக வழங்குகிறது என்பது மிகுந்த கவனிப்பிற்குரியதாகின்றது.

பவளக்கொடி கூத்தரங்கேற்றத்தின் களரியினுடைய அமைப்பும், அலங்காரமுறைமையும், தோரண வடிவமைப்பும் பங்கெடுத்த பலருக்கும் மெச்சத்தக்க வகையில் அமையப்பெற்றிருந்தது. அவ்வரங்கு வெளிப்படுத்திய காட்சிவிதானிப்பும் பார்வையாளர்கள் பலரது கருத்தாடல்களும் இதனை தெளிவாக உணர்த்தின. களரியின் விசாலமும், நேர்த்தியானமுறையில் களரியின் குடையினை ஆக்கப் பயன்படுத்திய சேலைகளைத் தாங்குவதற்காக உள்ளே வலைபோன்றஅமைப்பினால் துணிபின்னப்பட்டு அமைக்கப்பட்ட, வடிமைக்கப்பட்ட முறைமையும் வெளிக்கும், களரி அமைப்பிற்கும் வண்ணமயத்தன்மையை கொடுத்திருந்ததோடு பலர் உள்ளங்களையும் கவர்ந்திருந்தது. மற்றும் களரியில் கட்டியிருந்த சேலைகளின் வர்ணங்கள் காட்சியின் முகப்பொன்றின் கட்டப்பட்டிருந்த மற்றும் தோரணத்தின் அலங்கரிப்பு முறமை, ஆக்க முறைமை என்பன தமிழர்களின் பாரம்பரியக் கட்டிடக் கலையின் தனித்துவ மிக்க அம்சமாக களரியினை கருதவாய்ப்பளித்திருந்தது.

பவளக்கொடி கூத்தின்ஆற்றுகைகளை பார்த்ததன் ஊடாகவும் பங்குபற்றியவர்களுடன் உரையாடியதன் ஊடாகவும் பெற்றுக்கொண்ட அனுபவமானது மிகமுக்கியமானதாகவே அறிகின்றேன்.சுமார் 34 வருடங்களுக்கு பின்னர் இக்கூத்தினை மீண்டும் இப்பொழுதுதான் (2014) ஆடியதாக கூறிய அதேவேளை முதல் ஆடியவர்களில் தற்போது 04 பேர் மாத்திரமே உயிருடன் இருக்கின்றனர் எனவும் அவர்கள் குறித்த அரங்கேற்றத்திற்கு ஆலோசனை வழங்கியதாகவும் குறிப்பிட்டனர். மேலும் தற்போது இக்கூத்தினை ஆடுபவர்கள் சிறுவர்கள்,மாணவர்கள்,பட்டதாரிகள்,ஆசிரியர்கள்ä,பழைய கூத்துக்கலைஞர்கள், இளம் கூத்துக்கலைஞர்கள் என பல்வேறு தரப்பினராகவிருப்பது கவனிப்பிற்குரியதாகின்றது. இது பாரம்பரிய கூத்தரங்கின் முக்கியத்துவத்தினை சமூகத்தின் அனைத்துதரப்பினரும் விளங்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதையே தெளிவுபடுத்துகின்றது.
இப்பவளக்கொடி கூத்தில்அல்லியாக ஆற்றுகை செய்த மூத்த கூத்துக்கலைஞருக்கு எழுதவோ, வாசிக்கவோ முடியாதவர் ஆனால் சிறந்த கூத்துக் கலைஞர். அதேவேளை பாடசாலை, பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் படித்தவர்களாக இருக்கும் கூத்தர்கள் பலர்கூத்துப் பாடல்களை மனனம் செய்வதில் சவால்கள் எதிர்கொள்பவர்களாக இருந்தனர். குறிப்பாக அல்லியாக ஆடியவருக்கு இன்னொருவர் பாடலை சொல்லிக் கொடுக்கும் வேளையில் மனனம் செய்கின்ற திறமை கொண்டவராகக் காணப்பட்ட அதேவேளை பாடசாலை, பல்கலைக்கழகம், கல்லூரி போன்றவைகளில் படித்தவர்கள் பலர் இக்கூத்தில் துண்டுகளை திருப்பி திருப்பி பார்த்துப்படிக்கின்ற, மனனம் செய்கின்ற போக்கினையும் தன்மையினையும் அறியமுடிந்தது இது கவனிப்பிற்குரிய விடயமாகும்.
உண்மையில் இவ்வரங்கேற்றத்திற்கு பின்னால் கவனிக்கப்பட வேண்டியதும், பாராட்டப்படவேண்டியதுமான முக்கிய விடயம் முனைக்காட்டுச் சமூகமே ஒன்றினைந்து இக்கூத்து நிகழ்வை நடத்தியமையாகும்.

ஊர்ப்பெரியார்கள்,கலைஞர்கள், ஆலய முதல்வர்கள், சங்கங்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், பட்டதாரிகள், மாணவர்கள், சிறுவர்கள், ஏனையவர்கள் எனபால்,வயதுவேறுபாடுகள் இன்றிசெயற்பட்டமையின் விளைவாகக் காத்திரமானபடைப்பாக்கம் ஒன்றினைகொடுக்கமுடிந்தது.  இச்சமூக இணைப்பாக்கத்தினூடாகவே  இது சாத்தியமாகின்றது என்பதும் அதுவே இத்தகைய அரங்க முன்னெடுப்புக்களின் தனித்துவம் என்பதும் இங்கு நம் சிந்தனைக்குரியதாக இருந்தது.

பவளக்கொடி கூத்தரங்க  ஆற்றுகை இரவு 8.15 மணியளவில்ஆரம்பித்த கூத்தாற்றுகை அதிகாலை 4.30 மணிவரை மிகச் சிறப்பாக நடைபெற்றது. கூத்துப்பாடல்கள் பார்ப்போரை நித்திரையில் ஆழ்த்தும் அதேவேளை கூத்தாடல்கள் நித்திரையை விழிக்கவும் வைத்தன.
பல்வேறு சிக்கல்களுக்கும் சவால்களுக்கும் மத்தியில் பலமனிதர்களும் சந்திக்கக்கூடிய வாய்ப்புக்களும், நிகழ்த்தக்கூடிய இடமும், சூழலும் சமகாலத்தில் குறைவாகக் காணப்படுகின்ற நிலையில் மனிதர்களை இணைத்து மகிழ்ச்சிகரமாகவும் ஆரோக்கியமாகவும், சந்தோசமாகவும் வாழவைப்பதற்கான சுதந்திரத்தினையும் சூழலையும் இப்பாரம்பரியக்கலைச் செயற்பாடுகள் கொடுத்து வருகின்றது என்பதே பவளக்கொடி கூத்து நிகழ்வை முன்னிறுத்தி உறுதியாகக் கூறிக்கொள்ளமுடிகின்றது.


தொகுப்பு
சரவணமுத்து தரேஸ்வரன்












கருத்துகள் இல்லை