Header Ads

எங்களுக்கான மதிப்பு, மரியாதையை மீண்டும் பெற்றுத்தாருங்கள் ; நெற்கதிர்


(வயி.துசாந்தன்)


வானம் இருண்டோடிக்கிடக்கின்றது வானத்தைப் பார்த்து மிகுந்த சோகத்தில் வரம்பால் நடந்து வரும் விவசாயியை பார்த்து நெற்கதிர் பேசத் தொடங்குகின்றது. விவசாயியே ஏன் தங்கள் முகம் வாடி இருக்கின்றது ஏதோ கவலை போல தெரிகின்றது ஆம் வானத்தைப் பார்க்கின்றபோது மழை வருமோ என் கனவுகள் அழியுமோ வாழ்க்கையை எப்படி கொண்டு செல்வேனோ என்கின்ற மனத்தளரலே இதற்கு காரணம் என்றார்.
உண்மைதான் எனக்கூறி தனது கதையை சொல்லத் தொடங்குகிறது நெற்கதிர், நவீனத்தின் வளர்ச்சியாலும், கலிகாலத்தின் போக்கினாலும் எங்கு பார்த்தாலும் சண்டைகளும், விபத்துக்களும், அழிவுகளும் நாளுக்கு நாள் அதிகரித்தே செல்கின்றது. காரணம் மனிதரிடத்தில் நேர்மை இல்லை, நிதானம் இல்லை, நேர்த்தி இல்லை, ஒற்றுமை இல்லை, ஒழுக்கம் இல்லை, பணிவு இல்லை  எல்லாமே  அழிந்து சீர்கெட்டு இருக்கின்றதாக நான் உணருகின்றேன்.

நாங்கள் மனிதர்கள், விலங்குகள்  வாழ்வதற்கு எங்கள் உயிரைக் கொடுக்கின்றவர்கள், இன்று பிறர் உயிரை எடுக்கின்றவர்களாக மாறிவிட்டோம் என பலர் கதைப்பதை கேட்டதும் நெஞ்சம் உருகுகின்றது. எனது சந்ததி எப்படி வாழ்ந்தது, மகிழ்ச்சியாய்
இருந்தது, மற்றவருக்கு எவ்வளவு பயனாய் இருந்தது. இன்று என்னை வெறுக்கும் அளவுக்கு சமூதாயம் மாறிவிட்டது, இதை மாற்றியதும் அந்த சமூதாயமே, வேண்டாம் என்பதும் அச்சமூதாயமே இதை நினைக்கையில் கண்கள் சிவக்கின்றது கண்ணீர் வடிகின்றது. ஆரம்பகாலத்தில் என்னை சிறந்தவனாக உருவாக்குவதில் விவசாயிகளுக்கு இருந்த ஆர்வம், அதில் உண்டான மகிழ்ச்சி இன்று மறியலாக கிடக்கின்றது. எங்களைப் போன்றவர்களை உருவாக்குவதற்காக பழங்காலத்தில் மாடு கொண்டு வயலை உழுது, எங்களுக்கு உணவாக இயற்கையில் கிடைத்தவற்றை கொடுத்தார்கள் இதனால் நோய்களும் எம் இனத்தவரை பெரிதும் தாக்கவில்லை நாங்களும் ஆரோக்கியமானவர்களாக இருந்தோம். பார்ப்பதற்கு கவர்ச்சியாகவும், அழகாகவும் இருந்தோம். அதனால் அனைவராலும் விரும்பப்பட்டோம். அதுபோன்று எம்மை நெல் நாற்றில் இருந்து பிரித்தெடுப்பதற்காக தாக்கத்தி கொண்டு எமக்கு வருத்தத்தை ஏற்படுத்தாவண்ணம் எம்மை வேறாக்கி அதனை கட்டுக்கட்டி ஓர் இடத்தில் வைத்து மாடுகொண்டு மிதித்து பிரித்தெடுத்தார்கள் இது எங்களுக்கு சுவாத்தியமாக இருந்தது.

இன்றைய விஞ்ஞான உலகில் எல்லாமே மாற்றமடைந்தே செல்கின்றது எங்கு பார்த்தாலும் கணனி உலகம், இயந்திரங்களின் சத்தம், இதனால் மனிதர்களுக்கும் வேலை இல்லை, எங்கு பார்த்தாலும் வேலையில்லா திண்டாட்டம். வீட்டில் கஸ்டம், உணவுத்தட்டுப்பாடு, வரட்சி இவ்வாறான  இயந்திர உலகில் நாங்களும் சிக்கி தவிக்கின்றோம். என்பது வேதனைதருகின்றது. அன்று எம்மை நெல்நாற்றில் இருந்து பிரித்தெடுக்கும் போது சுவாத்தியமாக இருந்தது இன்று சுவாத்தியமற்றுள்ளது காரணம் எம்மை பிரித்தெடுக்க இயந்திரம், அதில் நாம் கசக்கப்பட்டு, அடிப்பட்டு, காயப்பட்டு அரையும், குறையுமாக ஆக பிரித்தெடுக்கப்படுகின்றோம் இதனால் மற்றவர்கள் எம்மை பார்க்கும் போதும் எம்மை பயன்படுத்தும் போதும் தயக்கப்படுகின்றார்கள் இதனால் நாங்களும் வெட்கப்படுகின்றோம். எம்மை வளர்த்தெடுப்பதற்கு இக்காலத்தில் செயற்கையாக செய்தவற்றை உணவாக தருகின்றார்கள் இது எமக்கு சுவையாக இருப்பதும் இல்லை இதனால் பல நோய்களும் ஏற்படுகின்றது. இதை போக்குவதற்கு செயற்கையாக செய்த இரசாயன மருந்துகளை தருகின்றார். இது உடனடியாக நோயைப் போக்கினாலும் அதன் தாக்கம் எம்மை தவிக்க மாத்திரமல்ல எங்களை உட்கொள்பவர்களையும் நோய்வாய்குட்படுத்துகின்றது.



இன்று பிறக்கின்ற குழந்தைகளில் பலர் நோய்வாய்படுகின்றனர் இதற்கு காரணம் நாங்கள் என்று பலர் கூறுகின்றனர் அதை நான் மறுக்கின்றேன் காரணம் இந்நிலைக்கு எம்மை இட்டுச் சென்றவர்கள்  நீங்கள் ஆனால் தற்போது எங்கள்மீது பழியைப் போடுகின்றீர்கள் எமக்கென்று எத்தனையோ இயற்கை உணவுகளும், நோய்ஏற்பட்டால் இயற்கை மருந்துகளும் இருந்தாலும் அதை எமக்கு தருவதில் நீங்கள் தயக்குகின்றீர்கள், பின்னர் செயற்கை உணவுகளையும், மருந்துகளையும் தந்துவிட்டு வெறுக்கின்றீர்கள்;. இந்நிலை மாற வேண்டும் மீண்டும் இவ்வுலகில் அனைவராலும், மதிக்கப்படுகின்றவர்களாகவும், ஆரோக்கியமானவர்களாகவும், நற்பெயர் கொண்டவர்களாகவும் நாங்கள் மாற்றம் பெறவேண்டும் என நினைக்கின்றேன்; இவற்றை உங்களாலேயே மாற்றமுடியும் எனக்கூறியது நெற்கதிர்.


தொடர்ந்தும் கூறிய நெற்கதிர் நீங்கள் கவலைப்படுகின்ற விடயம் எனக்கும்  நன்றாக விளங்குகின்றது. எம்மை உற்பத்தி செய்து எடுக்கும் 03 – 04 மாதங்களும் நீங்கள் படுகின்ற வேதனைகள் கஸ்ரங்கள் எமக்கு புரிகின்றது. எங்களை நம்பி நீங்கள் மனதிலே கட்டுகின்ற கனவுக் கோட்டைகள் எத்தனையோ, அவற்றில் சில, பிள்ளைகளை கல்விகற்க வைக்க வேண்டும். அவர்களுக்குரிய பொருட்கள் அனைத்தும் பெற்றுக் கொடுக்க வேண்டும். வீடுகட்ட வேண்டும், என்னை உற்பத்தி செய்வதற்காக வங்கியில் அடகுவைத்த நகைகளை மீளப்பெற வேண்டும், வாங்கிய கடன்களை அடைக்க வேண்டும். என பல எண்ணிலடங்காத ஆசைகளை நான் அறிவேன்.

அதுபோல பல வேதனைகளை எதிர்கொள்கின்றீர்கள் குறிப்பாக வாங்கிய கடனுக்கு வீட்டில் வருகை தந்து கடன்காரன் பேசும் வார்த்தைகள், பிள்ளைகளுக்கு கஸ்டத்தை உணர்த்தக்கூடாது என்பதற்காக வீட்டிலே கணவனும், மனைவியும் சேர்ந்து தங்கள் துயர்களை பகிர்ந்துகொள்கின்ற விதம், வயலுக்குள் வந்து எம்மை பார்க்கும் போது நாம் நீர், உணவு இன்றி தவிக்கும் போது உங்கள் மனதில் ஏற்படுகின்ற பதபதைப்பு, இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் போது நாங்கள் அழிவதை கண்டு நீங்கள் படும் அவஸ்தை இவ்வாறு பல்வேறு துயரங்களையும் சவால்களையும் எதிர்கொண்டே எம்மை பெற்றெடுக்கின்றீர்கள்.

இவ்வாறு பல்வேறு வேதனைகளையும், சோதனைகளையும் எதிர்கொள்ளும் தங்களை பாரட்டுகின்றோம். இருந்தாலும் இறுதியாக இயற்கை மீது பழியை இட்டு தப்பித்துக்கொள்கின்றீர்கள். இதுதான் எங்கோ இடிக்கின்றது, இது முற்றிலும் தவறு எனக்கருதுக்கின்றேன். உங்களுக்கு முதல் உங்களது தந்தை, அவர் தந்தை என மூன்று, நான்கு தலைமுறையினை சற்று திரும்பிப்பாருங்கள் அப்போது வாழ்ந்தவர்கள் சிறந்த ஆரோக்கியமான, எல்லோராலும், விரும்பப்படுகின்ற எங்களைப் போன்ற அதிகளவானர்களை பெற்று மிகுந்த மகிழ்ச்சியுடனும், சிறந்த வாழ்க்கையுடனும் வாழ்ந்திருக்கின்றனர் இதனால் அவர்களுக்கு கஸ்டம் இருக்கவில்லை, அவர்களும் ஆரோக்கியமாக இருந்திருக்கின்றார்கள் காரணம் அவர்களுக்கு இயற்கை மீதும், இறைவன்மீதும் நம்பிக்கைகள் இருந்திருக்கின்றது. அதனால் இயற்கையை மருந்தாகவும், உணவாகவும் எங்களைப் போன்றோர்களுக்கு கொடுத்திருக்கின்றார்கள். இயற்கை உணவு என்கின்ற போது வைக்கோல், இலைகுழைகள், சாணம் போன்ற இன்னோரன்ன இயற்கை பொருட்களையும், மருந்தாக பால், தயிர், வேப்பம் சாறு போன்ற இன்னும் பல இயற்கை வகை மருந்துகளையும் எமது முன்னோர்களுக்கு வழங்கியதாகவும் அறியமுடிகின்றது.

அக்காலத்தில் எங்களை உற்பத்திக்காக பயன்படுத்திய முதல் நாள் இருந்து இறுதி எங்களை பெறுவது வரைக்கும் எத்தனையோ முகங்களை சந்திப்பதாக எனது முன்னோர்கள் கூறியதை அறிந்திருக்கின்றேன். காரணம் மனிதர்களாலே நிறைய வேலைகளை செய்ய வேண்டி இருந்ததால் நிறையவே மனித பலம் தேவைப்பட்டது. குறிப்பாக எங்களை அறுவடை செய்கின்ற போது, நெல்நாற்றில் இருந்து பிரித்தெடுக்கும் போது(சூடுமிதிப்பு)  நிறையப்பேர் கலந்துகொள்வர். அதனால் அச்சூழல் மிகுந்த மகிழ்ச்சி கொண்ட இடமாக காணப்படுவதுடன், அவ்விடத்திலே உணவுகளையும் உட்கொள்வர், அவ்வேளைகளில் நிறையப் பாடல்கள் மற்றும் சுவாரசியமான கதைகளைக் கூறி மகிழ்வர் இதனைக் கேட்கின்ற போது எங்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும். ஆனால் தற்காலத்தில் மனிதபலத்தின் தேவை குறைவு , பாடலோசை கேட்கவேண்டிய சூழலில் இயந்திர ஓசை கேட்கின்றது இதனால் பயமே ஏற்படுகின்றது.

எம்மை நெல்நாற்றில் இருந்து பிரித்தெடுக்கும் தினம் 01க்குமேல் இருப்பதுடன்  அவ்விடத்திலே உணவு சமைத்து ஒற்றுமையாய் இருந்து உணவு உட்கொண்டு பாடல்கள் பாடி களிப்புற்று வேலை செய்வர்.

ஆனால் தற்காலத்தில் இயந்திரங்களுடன் ஒருவர் அல்லது இருவர் வருவர் ஒரு சில மணித்தியாலங்களில் அறுவடை செய்வர். செய்தவற்றை அவ்விடத்திலே வியாபாரிக்கு கொடுப்பர் அவர் எங்களைப்பார்த்து இவர்கள் ஆரோக்கியம் அற்றவர்கள், அரைகுறையாய் இருக்கின்றார்கள் இதனால் குறைவாகவே பணம் தரமுடியும் எனக்கூறுவார்கள், ஆம் என  நீங்கள் சொல்வீர்கள் அவர்களிடம் விற்றுவிடுவீர்கள் பின் குறைவிலையில் விற்றுவிட்டோம் என்று மனதிற்குள் சஞ்சலப்படுவீர்கள். இதற்கு காரணம் யார் என்று சிந்தித்தீர்களா? அதற்கான மாற்று வழிகளைப்பயன்படுத்தினீர்களா?  இல்லை  ஆனால் எல்லாவற்றையும் வியாபாரிக்கு குறை விலையில் விற்றுவிட்டு பின் கூடிய விலையில் அரிசி கொள்வனவு செய்கின்றீர்கள் பின் வீட்டில் வறுமை என்கின்றீர்கள், இது யார் செய்த பிழை? நீங்கள் ஒவ்வொருவரும் செய்த பிழை சிறந்த ஆரோக்கியமான எங்களைப் போன்றவர்களை நீங்கள் உருவாக்கி இருந்தால் கூடிய விலையில் விற்றிருக்க முடியும், எங்களையும் அவர்கள் ஆரோக்கியமற்றவர்கள், அரைகுறையானவர்கள் என்று கூற மாட்டார்கள். எங்கெளுக்கென்று ஒரு மரியாதை, மதிப்பு இருந்திருக்கும். அவற்றை மீண்டும் பெற்றுத்தரவேண்டிய உங்களது கடமை அவற்றை பெற்றுத்தருவீர்கள் என எண்ணுகின்றேன்.

நீங்கள் ஒவ்வொருவரும் சிந்திக்கக்கூடியவர்கள், சுறுசுறுப்பாய் வேலை செய்யக்கூடியவர்கள், நாகரீக மோகத்தில் மூழ்கி கண்டதும் செய்யாது, மூதாதையரின் வழி நடந்து பழமையைப் போற்றி இரசாயனத்திலிருந்து இயற்கைக்கு மாறி, மரபிழந்து போகும் எம்முயிர்களையும் கட்டிக்காத்து சீரிழிந்து, சீர்கெட்டு புதுபுது நோய்களால் படாதுபாடுபடும் சமூதாயத்தை கட்டியெழுப்ப தலைகுனிந்து சொல்லுகின்றேன் தலைநிமிர்ந்து வாழ்வாய் இதைக்கேட்டு நடந்தால், என்வாய்மொழி திருமொழியாகும்.

கருத்துகள் இல்லை