இது யாரிற்கான அடையாளம்?.....

மனிதன் தனது அடையாளத்தினை தக்கவைத்துக் கொள்வதற்கும், அவற்றினை ஏனையவர்களுக்கு காட்டிக்கொள்வதற்கும், அடுத்து வருகின்ற தலைமுறையினரிடத்தில் தனது அடையாளத்தினை நிலை நாட்டிக்கொள்வதற்கும் தன்னை அடையாளப்படுத்த விரும்புகின்றான். இம் மனநிலையின் தாக்கம் பல்வேறு பரிமானங்களில் தன்னை சமூகத்திற்கு இனங்காட்டத் தூண்டுகின்றது. தன் அடையாள அம்சங்களை தன்னோடு மாத்திரம் நிறுத்தி விடாது மறைமுகமாக தன்னை சுற்றியுள்ள சுற்றுப்புற உயிருள்ள, உயிரற்ற ஜடப்பொருட்கள் ஊடாகவும் இனங்காட்டிக்கொள்ள விரும்புகின்றான்

மட்டக்களப்பு சமூகம் விவசாயம், மந்தைவளர்ப்பு என்பவற்றை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். இது தனது மந்தைகள் என இனம் கண்டு கொள்வதற்கு “குறிசுடுதல்” என்கின்ற மரபுவழிச் செயற்பாடு இடம்பெறுவது வழக்கம். குறிசுடுதல் என்பது இரும்புக் கம்பியை கொழு போன்று வளைத்து அதனை நன்கு எரிகின்ற தீயில் இட்டு கம்பி பழுத்து பொன்நிறமான பின் அதனை நான்கு கால்களையும் இறுககட்டி பாடத்தில் வீழ்த்தப்பட்டிருக்கும் மாட்டின் உடம்பில் சுட்டு புண்ணாக்கி தழும்புகளை உண்டு பண்ணி அடையாளப்படுத்துவதையே குறி சுடுதல் என்பர்.
இச் செயற்பாட்டினை “மாட்டிற்கு குறிசுடுதல்” என்றே கூறுவர். ஆனால் இங்கு மறைமுகமாக மனிதன் தனது அடிப்படைவாத சாதியல் சிந்தனைகள், குடி, மதம், இனம், இடம், பெயர் என முழுக்க முழுக்க தன்னைப்பற்றியதான அடையாள அம்சங்களை வாயில்லா ஜீவன்கள்; மீது திணிக்கின்றான். மாட்டிற்கு குறி சுடுகின்றோம் என்கின்ற வழுவான மாயக்கருத்தினை கவசமாக முன்நிறுத்தி மாட்டிற்கான அடையாளம் என கூறி தன்னை அடையாளப்படுத்திக் கொள்கின்றான்.

உதாரணமாக ஒருவர் தனது மாட்டிற்கு குறிசுடும்போது தனது பெயர் அல்லது தனது குடும்பத்தில் ஒருவரது பெயரின் முதல் எழுத்து அல்லது இரண்டு எழுத்தினை மாட்டின் வயிற்றின் நடுப்பகுதியில் மிகப்பெரிதாக சுட்டு அடையாளமிடுவர். இது ஆங்கிலத்திலோ தமிழிலோ இடம்பெறலாம். பெரும்பாலும் தமிழிலே எழுதப்படுகின்றன. இதனூடாக தான் யார் என்பதனையும், தன் என்ன இனம் என்பதனையும் காட்டிக்கொள்கின்றான்.
இத்தோடு மாத்திரம் நிறுத்திவிடாது அடுத்த கட்டமாக தான் என்ன குடி, சாதி என்பதை அடையாளங் காட்டிக்கொள்ள விரும்புகின்றான் இதன்பொருட்டு தனது குடி,சாதி மரபிற்குரிய குறியீட்டினை சுடுகின்றான். பொதுவாக மட்டக்களப்பில் சாதிகள் ஒன்றாக இருந்தாலும் குடி முறைகள் இடத்துக்கு இடம் வேறுபட்டதாக காணப்படுகின்றன இருந்தபோதிலும் அனைத்து குடிகளுக்கும், சதிகளுக்குமென வரலாற்றுரீதியான தனித்துவமான குறியீட்டடையாளங்கள் உள்ளன. (உ-ம் கலிங்;ககுலம்-வாளும் கேடயமும், உலகிப்போடிகுலம் - எட்டுக்கால், வேடுவர் -வில்அம்பு, அம்பட்டர்-கத்தரிகோல்) இவற்றினை மாட்டின் பின்காலிலோ அல்லது முன்கால் சந்திலோ படமாக வரைந்து விடுவர்.

அடுத்து தான் எந்தப் பிரதேச சபைக்குள் வசிக்கின்றானோ அதனையும் அடையாளப்படுத்திக் கொள்ளும் பொருட்டு குறித்த பிரதேசத்தின் முதல் எழுத்தினை சுட்டு விடுவர் (உ-ம் மண்முனை தென்மேற்கு எனின் “ம” குறி இடுவர்). சில சமயங்களில் தம் வசிக்கும் ஊரின் முதல் எழுத்தினையும் அடையாளப்படுத்துவர். இதனை குடி அடையாளத்தின் சற்று மேல் அல்லது குடி அடையாளத்துடன் இணைத்து எழுதுவர். அடுத்தகட்டமாக தான் என்ன மதம் என்பதனை வெளிப்படுத்தும் வகையில் மூன்று விரல்களால் விபூதி சாற்றுவது போன்று மூன்று கோடுகளை மாட்டின் மலவாயிலுக்கு சற்று கீழாக இருகால் தொடைகளையும் இணைத்து சுடுவர். இதற்கு வேறுவகையான பல காரணங்கள் கூறப்படுகின்றன இருந்தபோதிலும் சிலரது கருத்தின் பிரகாரம் இந்து என்பதனை அடையாளங்காட்டுவதாக அமைகின்றது.

இவ்வாறாக மனிதன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்காகவும், தனது சௌகரீயத்துக்காகவும் விலங்குகளை பகடைகளாக்குகின்றான். சாதி, மத பேதமின்றி வாழ்கின்ற விலங்கினங்களுக்கு எதற்கு குடி, சாதி அடையாளங்கள்? மாட்டிற்கு குறிசுடுகின்றோம் என்று சொல்கின்றார்களே தவிர மாட்டில் தன் அடையாள அம்சங்களைப் பொறிக்கின்றோம் என எவரும் உணர்வதில்லை. எமது மரபுவழி சார்ந்த ஓர் விடயமாக இவை காணப்பட்டாலும் தற்காலத்துக்கு முரணான விடயங்களாகவே இவை காணப்படுகின்றன. இன்றைய தொழிநுட்ப வளர்ச்சியின் பிரகாரம் விலங்குகளை அடையாளப்படுத்திக்கொள்ள பல வழிகள் உள்ளன. அவற்றினை விடுத்து வாயில்லா ஜீவன்கள் மீது தமது அடையாள அம்சங்களை பொறிப்பதென்பது நியாயமற்ற ஓர் செயறபாடாகும். உண்மையில் ஐந்தறிவுள்ள ஜீவன்கள் அவையல்ல நாம்தான். ஆறாவது அறிவான பகுத்தாய்கின்ற அறிவினை இறைவன் எமக்கு தந்திருந்தாலும் இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக தம்மை மிருகங்கள் என இன்னுமோர் பார்வையில் அடையாளப்படுத்திக் கொள்கின்றோம்.
வன்னியசிங்கம் - வினோதன்
(முனைக்காடு)



Post a Comment