Header Ads

இப்படியும் ஓர் சமூகமா?

 - வயிரமுத்து துசாந்தன் -    ஒரு நாடு அபிவிருத்தி காணுகின்ற போதுதான் அந்நாடு செழிபுற்று விளங்கும். நாடு செழிப்பாக இருக்க வேண்டுமானால் அனைத்து துறைகளும் வளர வேண்டும். இதற்காகத்தான் பலரும் உழைக்கின்றனர். பலவாறு சிந்திக்கின்றனர்.


ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது வாழ்வாதாரம் முக்கியம் பெறுகின்றது. அவனது வாழ்வாதாரத்தைக் கொண்டுதான் ஒவ்வொரு விடயமும் மாற்றம் பெறுகின்றது. வாழ்வாதாரம் ஒழுங்கில்லை என்றால் அங்கு மற்றயொன்றும் ஒழுங்கில்லாமல் இருக்கும். இதற்காக வேண்டித்தான் அரச, அரசசார்பற்ற திணைக்களங்கள், நிறுவனங்கள்  ஒவ்வொரு பிரதேசத்திலும் அங்கு வாழ்கின்ற மக்கள் தொடர்பாகவும், அவர்களது தேவைகள் தொடர்பாகவும், வாழ்க்கை முன்னேற்றங்கள் பற்றியும் பல நாட்கள், பலர் சேர்ந்து, பல இலட்ச பணத்தினை செலவழித்து ஆய்வினை நடாத்தி அதற்கான பரிகாரங்களாக பல செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றனர்.

நாட்டின் பல அதிகஸ்ட பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள் தங்களது அன்றாட தேவைகளை கூட நிறைவேற்ற முடியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பாடசாலை செல்ல வேண்டிய பிள்ளைகளை இடையில் நிறுத்தி வேலைக்கு அமர்த்துகின்றனர், பாடசாலை செல்வதற்கு பாடசாலை உபகரணப் பொருட்கள் இல்லை, பாதணி இல்லை இதற்கு காரணம் வறுமை, நாங்கள் உண்ணுவதற்கு கூட உணவு இல்லாமல் இருக்கி;ன்றோம் இந்நிலையில் எவ்வாறு பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்புவது என பல பாகங்களிலும், பல குரல்கள் எழுந்தன அதனை முதலில் நிவர்த்தி செய்ய வேண்டும் இதனால் எத்தனையோ வைத்தியர், பொறியிலாளர், ஆசிரியர் என வரவேண்டியவர்கள் இன்று எல்லாமே இழந்து நிற்கின்றதே என்று சிந்தித்த அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள், திணைக்களங்கள், சிறுவர்கள் தொடர்பாக கூடிய அக்கரை காட்ட எண்ணி பல்வேறு சட்டங்களையும், திட்டங்களையும் தீட்டி, செயற்படுத்தினர். செயற்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

அதுபோன்றுதான் வாழ்வாதாரத்தை உயர்த்திவிட்டால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும், பிள்ளைகள் பாடசாலைக்கு செல்வார்கள், கல்விமட்டம் உயரும், அதன் விளைவாக சகல துறையும் வளர்ந்து மிளிரும் என எண்ணி இன்று வரையும் சுயதொழிலுக்கான உதவிகள் பல நிறுவனங்களாலும், அரச திணைகளங்கலாலும் வழங்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. இன்னும் வழங்கப்படவும் உள்ளது.

இத்திட்டங்களின் கீழ்தான் மிகவும் யுத்தினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு,  சிறுகடைகள், அரிசி குற்றி விற்றல், மாகுத்தி விற்றல், மிளகாய்த்தூள் இடித்து விற்றல், தையல் இயந்திரங்கள் என எண்ணிலடங்காத உதவிகளை அவர்களது தொழிலுக்கு ஏற்ற வகையில் வழங்கியிருக்கின்றனர். அது அவர்களுக்கு வழங்க வேண்டிய ஒன்றுதான். இவ்வுதவிகளை பெறுவதில் அம்மக்கள் காட்டுகின்ற அக்கரை அளப்பெரியது, அதை பெற்று உரியமுறையில் பயன்படுத்துவது பாரட்டத்தக்க விடயமாகும்.

ஆனாலும் ஒரு சிலர் எல்லா விடயங்களையும் சரிவர செய்தாலும் ஒருசில விடயத்தில் தவறிழைக்கின்றனர். குறிப்பாக ஒரு பிரதேசத்தில் சுய தொழிலுக்காக அண்மையில் ஆடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் ஆடு வழங்கப்பட்டது. அவ் ஆடுகளை பெற்ற உரிய பயனாளிகள் அவ் ஆடுகளை பராமரிப்பதற்காக பாடசாலை செல்கின்ற தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாமல் பாடசாலை நேரங்களில் ஆடுமேய்பதற்கு அனுப்பவதை காணக்கூடியதாகவும் அறியக்கூடியதாகவும் இருந்தது. இதனை நினைக்கின்ற போது மனம் வேதனை அடைகின்றது, வெட்கித்து தலைகுனிய வேண்டியுள்ளது. தந்தை  வேலைக்கு சென்றால், தாய் வீட்டு வேலையை செய்தால், பிள்ளை ஆடு மேய்கின்ற சூழல் உருவாகியுள்ளது. இதனால் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பிள்ளையின் கனவு சீரழிக்கப்படுவதுடன், எந்த நோக்கத்தின் அடிப்படையில் உரிய சுயதொழில் வாய்ப்பு வழங்கப்பட்டதோ அந்த நோக்கமும் நிறைவேற்றப்படாமல் போயிருக்கின்றது. நவீனத்துவமான இவ்வுலகில் கல்வியில் பல போட்டிகளும், தொழிநுட்ப வளர்ச்சியும் ஏற்பட்டுள்ள போதிலும் உரிய வளர்ச்சி தொடர்பாகவும் சமூகத்தின் நிலை தொடர்பாகவும் அப்பிள்ளை அறியாத சூழலுக்கு இழுத்துச் செல்லப்படுகின்றது. கல்விகற்காவிட்டால் வாழமுடியுமா? என்கின்ற கேள்வி இருக்கின்ற இக்காலத்திலும், கல்வி கற்காமல் இவ்வாறு ஆடு மேய்க்க இப்பிள்ளைகள் சென்றால் இவர்களது எதிர்காலம் எவ்வாறு அமையப் போகிறது? மாற்றங்கள் பல ஏற்பட்டாலும் இவ்வாறான மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்படதா? என்கின்ற பயமும் ஏற்படுகின்றது.

ஆகவே “கல்வியை முன்னேற்ற குடும்பத்தற்கு வழங்கப்பட்ட சுயதொழிலால் பிள்ளையின் கல்வி சீரழியும் என யார் நினைத்தது?  இதனை உரிய பயனாளிகளுக்கு வழங்குவதற்காக உழைத்த உழைப்பு, செலவு, நோக்கம் எங்கே? யாரிடம் கேட்பது? என்ன செய்வது? ………………. சிந்தியுங்கள்!

           


கருத்துகள் இல்லை