மேஷம்
சீர்திருத்தச் சிந்தனை அதிகமுள்ள நீங்கள், அடித்தட்டு மக்களின் நலனுக்காக அயராது போராடுபவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4ம் வீட்டில் அமர்ந்து உங்களை நாலாபுறமும் பந்தாடியதுடன், எந்த சுகங்களையும் அனுபவிக்க முடியாமல் தடுத்து, பலவிதங்களிலும் இழப்புகளையும், ஏமாற்றங்களையும், வீண் பழிகளையும், ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையையும் தந்ததுடன், தாயாருடன் கசப்புணர்வுகளையும், அவருக்கு மருத்துவச் செலவுகளையும் ஏற்படுத்தி வந்த குருபகவான் 5.7.2015 முதல் 1.8.2016 வரை உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் வீட்டில் அமர்ந்து அள்ளிக் கொடுப்பதுடன், உங்களுடைய வாழ்க்கை தரத்தையும் உயர்த்தப் போகிறார்.
இனி எதிலும் முன்னேறுவீர்கள். குருபகவான் தனது 9ம் பார்வையால் உங்கள் ராசியை பார்ப்பதால் எப்போது பார்த்தாலும் உங்கள் முகத்தில் ஏதோ ஒரு சோகம் இருந்து கொண்டேயிருந்ததே! இனி அழகும் இளமையும் கூடும். குருபகவான் தனது 5ம் பார்வையால் உங்களின் 9ம் வீட்டை பார்ப்பதால் இழுபறியாக இருந்து வந்த வேலைகளெல்லாம் முடிவடையும். புதிய யோசனைகள் உதயமாகும். தொழிலதிபர்கள், அறிஞர்களின் நட்பு கிடைக்கும். உங்களின் லாப வீடான 11ம் வீட்டை குரு தனது 7ம் பார்வையால் பார்ப்பதால் உங்களுடைய தனித் திறமைகளை அதிகரித்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
5.7.2015 முதல் 6.9.2015 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்கால கட்டத்தில் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். சுபச் செலவுகளும் அதிகமாகும். மகம் நட்சத்திரக்காரர்கள் மேற்கண்ட நாட்களில் ஆரோக்யத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அசதி, சோர்வு, செரிமானக் கோளாறு, யூரினரி இன்ஃபெக்சன் வந்து நீங்கும்.
7.9.2015 முதல் 16.11.2015 வரை மற்றும் 20.5.2016 முதல் 9.7.2016 வரை உங்கள் தன-சப்தமாதிபதியான சுக்கிரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பணவரவு உண்டு. இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். மனைவி வழி உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பரணி நட்சத்திரக்காரர்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம். கொஞ்சம் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.
17.11.2015 முதல் 20.12.2015 வரை மற்றும் 10.7.2016 முதல் 1.8.2016 வரை குருபகவான் உங்கள் பூர்வ புண்யாதிபதியான சூரியனின்
நட்சத்திரமான உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால் அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகள்
படிப்பில் முன்னேறுவார்கள்.
21.12.2015 முதல் 19.1.2016 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால் எதிர்ப்புகள் அதிகமாகும். வி.ஐ.பிகளுடன் பகைமை வந்து நீங்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் உங்களைப்பற்றிய விமர்சனங்கள் அதிகரிக்கும். சிறுசிறு விபத்துகள், சளித் தொந்தரவு, காய்ச்சல், கழுத்து வலி, நரம்புச் சுளுக்கு வந்து நீங்கும்.
குருபகவானின் வக்ர கால பயணம்:
20.1.2016 முதல் 6.2.2016 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால் எடுத்த வேலைகளை முடிக்காமல் ஓய மாட்டீர்கள். நண்பர்கள் வீட்டு விசேஷங்களையெல்லாம் நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள்.
7.2.2016 முதல் 7.3.2016 வரையுள்ள காலகட்டத்தில் உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால் முடிவுகள் எடுப்பதில் தயக்கம், தடுமாற்றம் வந்து நீங்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தலைதூக்கும்.
8.3.2016 முதல் 19.05.2016 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால் பழுதாகிக் கிடந்த மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். என்றாலும் கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் பிரிவுகள் வரக்கூடும்.
வியாபாரிகளே! உப்பு விற்கப் போய் மழை பெய்வதும், மாவு விற்கச் சென்றால் காற்றடிப்பதுமாக உங்கள் தொழிலை இயற்கை கூட சோதித்ததே! இனி மாறுபட்ட அணுகுமுறையால் அவற்றையெல்லாம் சரி செய்வீர்கள். உணவு, தங்கும் விடுதி, கமிஷன், பவர் ப்ராஜெக்ட், என்டர்பிரைசஸ், துணி வகைகளால் லாபமடைவீர்கள். நண்பர்கள், உறவினர்களின் உதவியால் புதிய முதலீடுகள் செய்வீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். நீண்ட காலமாக வராமலிருந்த பழைய பாக்கிகளும் வசூலாகும். பிரச்னை தந்த பங்குதாரரை மாற்றிவிட்டு உங்களுடைய கருத்துகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களை பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்வீர்கள். வியாபாரிகள் சங்கத்தில் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
உத்யோகஸ்தர்களே! நாலாபுறமும் பந்தாடப் பட்டீர்களே! கடினமாக உழைத்தும் அவமானங்களையும், அவப்பெயர்களையும் சந்தித்தீர்களே! உங்களைவிட வயதில், அனுபவத்தில் குறைவானவர்களுக்கெல்லாம் கை கட்டி பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டீர்களே! அதிகாரிகளையும் திருப்திபடுத்த முடியாமல் திணறினீர்களே! இனி அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களை குறைகூறிக் கொண்டிருந்தவர்களின் மனசு இனி மாறும். உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். புதுஅதிகாரி உங்களுக்கு பக்கபலமாக இருப்பார். வேலைச்சுமையும் குறையும். சக ஊழியர்களுடனான பிரச்னைகளும் கட்டுப்பாட்டிற்குள் வரும். உங்கள்மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கு, வீண்பழிகளிலிருந்து விடுபடுவீர்கள். நீண்ட காலமாக எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் இனி தடையின்றி கிடைக்கும். பதவி உயர்விற்காக தேர்வெழுதி தேர்ச்சிபெற்று காத்திருந்தவர்களுக்கும் நல்ல நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் புது வாய்ப்புகளும் தேடி வரும். சிலர் உத்யோகம் சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவீர்கள்.
கன்னிப் பெண்களே! காதல் வேறு, நட்பு வேறு என்பதை புரிந்து கொள்வீர்கள். போலிக் காதலை உண்மையென நினைத்து ஏமாந்தீர்களே! அந்த மன உளைச்சலால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து விடுபடுவீர்கள். உயர்கல்வியில் தோல்வியுற்ற பாடத்தில் வெற்றி பெறுவீர்கள். கல்யாணம் தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறதே என்று வருந்தினீர்களே! இனி உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமைந்து திருமணம் சிறப்பாக முடியும். கல்வித் தகுதிக்கேற்ற நல்ல வேலையும் கிடைக்கும். தாயாருடனான மோதல்கள் விலகும்.
மாணவ-மாணவிகளே! கடினமான பாடங்களிலும் அதிக மதிப்பெண் பெறுவீர்கள். கெட்ட நண்பர்களை ஒதுக்கித் தள்ளுங்கள். சக மாணவர்கள் மத்தியில் புகழடைவீர்கள். விளையாட்டு, கலை, கட்டுரைப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு, பாராட்டைப் பெறுவீர்கள். வகுப்பாசிரியர் உறுதுணையாக இருப்பார்.
அரசியல்வாதிகளே! உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் திருந்தி வந்து மன்னிப்பு கேட்பார்கள். மாவட்ட அளவில் பதவிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. தலைமை உங்களை நம்பி சில ரகசிய பொறுப்புகளையெல்லாம் ஒப்படைக்கும்.
கலைத்துறையினரே! வெளியிடப்படாமல் இருந்த உங்களது படைப்புகள் வெளிவரும். மக்கள் மத்தியில் பிரபலமாவீர்கள். ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.
விவசாயிகளே! நிலத் தகராறு, வாய்க்கால் சண்டையெல்லாம் இனி ஓயும். மகசூலை அதிகப்படுத்த நவீனரக உரங்களை பயன்படுத்துவீர்கள். புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பீர்கள். நெல், கரும்பு, கிழங்கு வகைகளால் லாபமடைவீர்கள்.
பரிகாரம்: கும்பகோணத்திற்கு அருகேயுள்ள ஆலங்குடி குருபகவானை தரிசித்து வாருங்கள். ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள்.
Post a Comment