ரிஷபம்
ஆயிரம் காசு உள்ளவன் அமைதியாய் இருப்பான், அரைக்காசு உள்ளவன் ஆடித் துள்ளுவான் என்பதை அறிந்த நீங்கள், பணம் வந்தபின்பும் பகட்டாக வாழத் தெரியாதவர்கள். குடும்பத்திலும் நிம்மதியில்லால் எப்போது பார்த்தாலும் உங்களை புலம்பித் தவிக்க வைத்தாரே! அப்படிப்பட்ட குருபகவான் இப்போது 5.7.2015 முதல் 1.8.2016 வரை உள்ள காலகட்டத்தில் 4வது வீட்டில் அமர்ந்து பலன் தரப் போகிறார். இதுவரை இருந்து வந்த காரியத் தடைகள் நீங்கும். உங்கள் அஷ்டமாதிபதியும், லாபாதிபதியுமான குருபகவான் 4ல் கேந்திர தோஷம் பெற்று அமர்வதால் உங்களின் அடிப்படை நற்குணங்களும், நடத்தை கோலங்களும் மாறாமல் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள். உத்யோகத்தின் பொருட்டு அல்லது கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், சச்சரவுகளால் பிரிவுகள் ஏற்படக்கூடும். டிரைவிங் லைசன்ஸ், இன்சூரன்ஸ் எல்லாம் சரியாக இருக்கிறதா. அவற்றையெல்லாம் புதுப்பித்து விட்டீர்களா என பார்த்துக் கொள்ளுங்கள்.
குருபகவான் தனது 5ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 8ம் வீட்டை பார்ப்பதால் வேற்றுமொழி, மதத்தினரால் ஆதாயமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் எல்லோரும் உங்களை மதிப்பார்கள். எதிர்த்துப் பேசியவர்கள், வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். நீங்கள் சொத்து வாங்குவதாக இருந்தாலும் தாய் பத்திரம், பட்டா, வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்து வாங்குவது நல்லது. சிலர், நீங்கள் இருக்கும் இடத்தை விட்டு வெளியூரில் அல்லது எல்லைப் பகுதியில் இடம் வாங்கி வைத்திருந்தால் அவ்வப்போது சென்று கண்காணித்து வருவது நல்லது. உங்களின் உத்யோக ஸ்தானமான 10ம் வீட்டை குரு தனது 7ம் பார்வையால் பார்ப்பதால் உத்யோகத்தில் இருந்து வந்த பிரச்னைகள் வெகுவாகக் குறையும். மகிழ்ச்சி உண்டாகும். புது வேலை அமையும். கௌரவப் பதவிகள் தேடி வரும். வி.ஐ.பிகள் அறிமுகமாவர்கள். குருபகவான் தனது 9ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 12ம் வீட்டை பார்ப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்
5.7.2015 முதல் 6.9.2015 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் சேமிக்க முடியாதபடி அடுத்தடுத்த செலவுகள் இருந்து கொண்டேயிருக்கும். சிலர் காரியம் ஆகும்வரை உங்களை பயன்படுத்திக்கொண்டு, காரியம் ஆனபிறகு கறிவேப்பிலையாக தூக்கி எறிகிறார்கள் என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். சிலர், உங்களுடைய உழைப்பை பயன்படுத்தி முன்னேறுவார்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஊர் பொது விவகாரங்களில் விட்டுக் கொடுத்துப் போங்கள். வங்கிக் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு காசோலையைத் தருவது நல்லது. சிலர் வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும்.
7.9.2015 முதல் 16.11.2015 வரை மற்றும் 20.5.2016 முதல் 9.7.2016 வரை உங்கள் ராசிநாதனும் சஷ்டமாதிபதியுமான சுக்கிரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு.
17.11.2015 முதல் 20.12.2015 வரை மற்றும் 10.7.2016 முதல் 1.8.2016 வரை குருபகவான் உங்கள் பூர்வ புண்யாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால் எதிர்ப்புகள் இருந்தாலும் வெற்றி பெறுவீர்கள்.
21.12.2015 முதல் 19.1.2016 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால் மனஇறுக்கங்கள் குறையும். குடும்பத்திலும் அமைதி உண்டாகும்.
குருபகவானின் வக்ர கால பயணம்
20.1.2016 முதல் 6.2.2016 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துபோகும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.
7.2.2016 முதல் 7.3.2016 வரையுள்ள காலகட்டத்தில் உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால் மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். பெற்றோருடனான மனவருத்தம் நீங்கும்.
8.3.2016 முதல் 19.5.2016 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ரகதியில் செல்வதால் நீண்ட நாட்களாக தடைபட்டு, தள்ளிப்போன காரியங்களெல்லாம் முடிவடையும்.
வியாபாரிகளே! கண்டபடி கடன் வாங்கி தொழிலை விரிவுபடுத்திக் கொண்டிருக்க வேண்டாம். விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும் என்பார்களே! அதுபோல இருக்கிற வியாபாரத்தை ஓரளவு பெருக்கப் பாருங்கள். யாராக இருந்தாலும் கையில் காசு, வாயில் தோசை என்று கறாராக இருங்கள். இவர் சொல்கிறார், அவர் சொல்கிறார் என்று அடுத்தவர்கள் பேச்சைக் கேட்டு அனுபவமில்லாத தொழிலில் முதலீடு செய்து சிக்கிக் கொள்ளாதீர்கள். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். புதிய நிறுவனங்களின் ஒப்பந்தங்களில் யோசித்து சட்ட நிபுணர்களை கலந்தாலோசித்து பிறகு கையொப்பமிடுவது நல்லது. ஹோட்டல், கெமிக்கல், எண்ணெய், மூலிகை, கமிஷன் வகைகளால் ஆதாயமுண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் முரண்பாடாகப் பேசுவார்கள். நீங்கள் கொஞ்சம் வளைந்து கொடுத்துப் போங்கள். புதிதாக அறிமுகமாகும் நபர்களையெல்லாம் பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்ளாதீர்கள். பற்று வரவு சுமாராக இருக்கும்.
உத்யோகஸ்தர்களே! காலநேரம் பார்க்காமல் உழைக்க வேண்டியது வரும். மூத்த அதிகாரிகள் உங்களை புரிந்து கொண்டாலும், நேரடி உயரதிகாரி உங்களைப்பற்றி குறை கூறிக் கொண்டிருப்பார். உங்கள் உழைப்பிற்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். குருபகவான் 10ம் வீட்டை பார்ப்பதால் சவால்களை சமாளிப்பீர்கள். உங்களுக்கு எதிராக சிலர் செயல்பட்டாலும், அவற்றை முறியடித்து விடுவீர்கள்.
கன்னிப் பெண்களே! மதில்மேல் பூனையாக இருந்த நிலை மாறி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். காதல் விவகாரத்தில் தள்ளியிருங்கள். உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். உங்கள் ரசனைக்கேற்ற மணமகன் வந்தமைவார். கல்யாணம் சிறப்பாக முடியும்.
மாணவ-மாணவிகளே! சமயோஜித புத்தியை பயன்படுத்துங்கள். வகுப்பறையில் வீண் அரட்டையடிக்காமல் பாடத்தில் கவனம் செலுத்துங்கள். வீண் சந்தேகங்களையெல்லாம் ஆசிரியரிடம் கேட்கத் தயங்க வேண்டாம். உங்களுடைய மொழியறிவுத் திறன், பொது அறிவுத் திறமையை வளர்த்துக் கொள்ளப் பாருங்கள்.
அரசியல்வாதிகளே! தலைமைக்கும் உங்களுக்கும் உள்ள நெருக்கத்தை பார்த்து சிலர் உங்களைப் பற்றிய தவறான வதந்திகளையெல்லாம் கட்சிக்குள் பரப்புவார்கள். தொகுதி மக்களுடன் நெருங்கிப் பழகுங்கள். சகாக்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும்.
கலைத்துறையினரே! வீண் வதந்திகளால் மனம் தளர்ந்து விடாதீர்கள். உங்களுடைய படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். புதிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் சற்று தள்ளிப் போகும். வேற்றுமொழி வாய்ப்புகளால் பிரபலமாவீர்கள்.
விவசாயிகளே! விளைச்சலை அதிகப்படுத்த இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்துங்கள். தண்ணீர் வரத்து அதிகரிக்கும். பம்பு செட் பழுதாகி சரியாகும். வாய்க்கால், வரப்புச் சண்டை என்று நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்காதீர்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது நிம்மதியிழப்பீர்கள். அரசாங்க வரிகளை தாமதமின்றி செலுத்தப்பாருங்கள்.
பரிகாரம்: காஞ்சிபுரம்-அரக்கோணம் பேருந்து வழியில் கம்மவார்பாளையம் நிறுத்தத்தில் இறங்கி அகரம் கோவிந்தவாடி கோயிலுக்குச் சென்று குருபகவானை தரிசித்து வாருங்கள்.
Post a Comment