கன்னி
எதிர்மறை எண்ணங்களுடன் வருபவர்களை ஆற்றுப்படுத்தி நேர்வழியில் கொண்டு
செல்பவர்களே! பனியா, வெயிலா என்று பார்க்காமல் என்கடன் பணி செய்து கிடப்பதே
என்று இடைவிடாமல் உழைப்பவர்களே! பிரபலங்களின் அறிமுகத்தையும் கொடுத்து
வந்த குருபகவான் 5.7.2015 முதல் 1.8.2016 வரை உங்களின் விரய வீடான 12ம்
வீட்டில் அமர்வதால் உங்கள் முன்னேற்றம் பெரிதாகத் தடைபடாது. குருபகவான்
தனது 5ம் பார்வையால் உங்கள் சுகஸ்தானத்தை பார்ப்பதால் தாயாருக்கு இருந்த
நோய் குணமாகும். அவரைப் புரிந்து கொள்வீர்கள். உங்களது 6ம் வீட்டை குரு
தனது 7ம் பார்வையால் பார்ப்பதால் மறைமுக எதிரிகளை இனங்கண்டு
ஒதுக்குவீர்கள். சில சமயங்களில் எதிரிகளால் ஆதாயம் உண்டாகும். தினந்தோறும்
எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும்.
மூட்டுவலி, இடுப்பு வலி தீரும். இழுபறியாக இருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். குரு தனது 9ம் பார்வையால் 8ம் வீட்டைப் பார்ப்பதால் உங்களது பலம் பலவீனத்தை உணர்ந்து செயல்படத் தொடங்குவீர்கள். கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பிலிருந்து விடுபடுவீர்கள். பெரிய பொறுப்புகள் தேடிவரும் என்றாலும் யோசித்து முடிவெடுக்கப் பாருங்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். சகோதர, சகோதரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். ஷேர் மூலமாக பணம் வரும். அக்கம்பக்க வீட்டாரிடம் குடும்ப விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்
5.7.2015 முதல் 6.9.2015 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலகட்டத்தில் எதிலும் நாட்டமின்மை, வீண் சந்தேகம், இழப்புகள், ஏமாற்றங்கள், திடீர் பயணங்கள், மருத்துவச் செலவுகள் வந்துபோகும். மகான்கள், சித்தர்களின் அறிமுகம் கிடைக்கும்.
7.9.2015 முதல் 16.11.2015 வரை மற்றும் 20.5.2016 முதல் 9.7.2016 வரை உங்கள் தனபாக்யாதிபதியான சுக்கிரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். வெள்ளி சாமான்கள் வாங்குவீர்கள். தடைபட்ட கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நிகழும்.
17.11.2015 முதல் 20.12.2015 வரை மற்றும் 10.7.2016 முதல் 1.8.2016 வரை குருபகவான் உங்கள் விரயாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால் அறிவுபூர்வமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடிப்பீர்கள். ஆனாலும் பெற்றோருக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவீர்கள்.
21.12.2015 முதல் 19.1.2016 வரை உத்திரம் 2ம் பாதம் உங்கள் ராசிக்குள் குருபகவான் நுழைவதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஒருவித படபடப்பு, வீண் பிடிவாதம், தலைச்சுற்றல், வயிற்றுக் கோளாறு, சிறுநீர் பாதையில் அழற்சி வந்து நீங்கும். சட்டத்திற்கு புறம்பான வகையில் செயல்படுபவர்களுடன் எந்த நட்பும் வேண்டாம். குடும்பத்திலும் பிரிவுகள் உண்டாகும். உடலில் சிறுசிறு கொழுப்புக் கட்டிகள் தோன்றி மறையும்.
குருபகவானின் வக்ர கால பயணம்:
20.1.2016 முதல் 6.2.2016 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் உங்கள் ராசியில் வக்ர கதியில் செல்வதால் ஆரோக்யம் சீராகும். மனஇறுக்கங்கள் விலகும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். உறவினர் வீட்டு கல்யாணத்தை திறம்பட எடுத்து நடத்துவீர்கள். வீண் செலவுகளை குறைக்க முயல்வீர்கள்.
7.2.2016 முதல் 7.3.2016 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால் பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். அரசு காரியங்கள் தடைபட்டு முடியும். பயணங்களால் உற்சாகமடைவீர்கள். தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள்.
8.3.2016 முதல் 19.5.2016 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால் கொஞ்சம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் பழுதாகும். தைராய்டை பரிசோதித்துக் கொள்ளுங்கள். தந்தையாருடன் மோதல்கள் வரும். அவர்வழி உறவினர்களால் அலைச்சல் அதிகமாகும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்துபோகும். ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள்.
வியாபாரிகளே! அறிவுபூர்வமாகவும், அனுபவ பூர்வமாகவும் முடிவெடுக்கப் பாருங்கள். விளம்பர யுக்திகளை கையாண்டு லாபம் ஈட்டப் பாருங்கள். கடன் வாங்கி புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். நவீனமாக்குவீர்கள். தரமான சரக்குகளை விற்பதன் மூலமாக வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். டிராவல்ஸ், மருந்து, உரம், கம்ப்யூட்டர் உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள். வேற்று மாநிலம், வெளிநாட்டில் இருப்பவர்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். பங்குதாரர்களுடன் வளைந்து கொடுத்துப் போங்கள்.
உத்யோகஸ்தர்களே! மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தந்தாலும் இரண்டாம் கட்ட அதிகாரியால் சில நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். அலட்சியம் வேண்டாம். பல வேலைகளை இழுத்துப்போட்டு செய்தாலும், உங்களை குறை கூறத்தான் செய்வார்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கப் பாருங்கள். உங்கள் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று அவ்வப்போது வருந்துவீர்கள். நீங்கள் விருப்பப்பட்ட இடத்திற்கே இடமாற்றம் உண்டு. சில சலுகைகள் கிடைக்கும். முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுவதற்கு முன்பாக நிதானிப்பது நல்லது.
கன்னிப் பெண்களே! உங்களின் நட்பு வட்டம் விரியும். சிலர் தடைபட்ட உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு வரும். வேலை நிமித்தம் காரணமாக பெற்றோரை விட்டு பிரிந்து வெளிநாடு செல்வீர்கள். கூடுதல் மொழி கற்பீர்கள். வருடப் பிற்பகுதியில் கெட்டிமேளச்சத்தம் வீட்டில் கேட்கும். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
மாணவ, மாணவிகளே! ஏதோ படித்தோம் பரீட்சையில் பாசாகிவிடுவோம் என்று கனவு காணாதீர்கள். மொழிப் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். விடைகளை எழுதிப் பாருங்கள். தெரியாதவற்றை ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.
அரசியல்வாதிகளே! தலைமையைப் பற்றி விமர்சனம் செய்து கொண்டிருக்காமல், தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யப் பாருங்கள். புதுப் பதவிக்கு ஆசைப்பட வேண்டாம். சகாக்களில் ஒருசாரர் உங்களுக்கு ஆதரவாகவும், மற்றொரு சாரார் உங்களுக்கு எதிராகவும் செயல்படுவார்கள். போலி புகழ்ச்சிக்கு மயங்காதீர்கள்.
கலைத்துறையினரே! வீண் வதந்திகள், கிசுகிசுக்கள் என மன உளைச்சலுக்கு ஆளானீர்களே! இனி துளிர்த்தெழுவீர்கள். என்றாலும் மூத்த கலைஞர்களைப்பற்றி விமர்சித்துப் பேச வேண்டாம். உங்களுடைய படைப்புத் திறன் வளரும்.
விவசாயிகளே! வாய்க்கால், வரப்புச் சண்டை என்று நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்காதீர்கள். விளைச்சலில் கவனம் செலுத்தப்பாருங்கள். காய்கறி, பூ வகைகளால் ஆதாயமடைவீர்கள். புதிய கடன் வாங்கி பழைய கடனை பைசல் செய்வீர்கள். மோட்டார் பம்பு செட்டை மாற்றுவீர்கள்.
பரிகாரம்: தஞ்சாவூர்-திருக்கருகாவூர் வழியில் தென்குடித்திட்டை உள்ளது. தட்சிணாமூர்த்தி நின்ற நிலையில் ராஜகுருவாக அருள்பாலிக்கும் தலத்தை தரிசித்து வாருங்கள்.
Post a Comment