துலாம்
இதயத்தால் பேசும் நீங்கள், எல்லா வேலைகளையும் எடுத்துக்கட்டி செய்பவர்கள். நிர்ப்பந்தங்களுக்கும், அடக்குமுறைகளுக்கும் அடிபணிய மாட்டீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானமான 10ம் வீட்டில் அமர்ந்து கொண்டு எந்த வியாபாரத்தை தொடங்கினாலும் அதில் நஷ்டத்தையும், கடனையும் ஏற்படுத்தினாரோ! அடுக்கடுக்கான வேலைகளை தந்து மனஉளைச்சலுக்கு ஆளாக்கினாரோ! குருபகவான் இப்போது 5.7.2015 முதல் 1.8.2016 வரை உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11ம் வீட்டில் அமர்வதால் பட்டுப்போன மரம் மீண்டும் துளிர்ப்பதுபோல இனி தொட்ட காரியங்களெல்லாம் துலங்கும். உங்களின் 3ம் வீட்டை குரு பார்ப்பதால் திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். வழக்கு சாதகமாகும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.
பெரிய பதவியில், நல்ல நிலையில் இருக்கும் நண்பர்களாலும் உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. குரு ஐந்தாம் வீட்டை பார்ப்பதால் உங்களுடைய அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளின் திருமணத்தை சீரும், சிறப்புமாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த குடும்பத்திலிருந்து நல்ல பெண் அமையும். அவருக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் புது வேலையும் கிடைக்கும். குலதெய்வக் கோயிலுக்கு நன்கொடை வழங்குவீர்கள். பூர்வீக சொத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை புரிந்து கொள்வீர்கள். குரு தனது 7ம் வீட்டைப் பார்ப்பதால் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்
5.7.2015 முதல் 6.9.2015 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலகட்டத்தில் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். சமாளிக்க முடியாத பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். சின்னச் சின்ன விவாதங்கள், வீண் சண்டைகளையெல்லாம் ஒதுக்குவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வேற்றுமதத்தை சேர்ந்தவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள். பணப்பற்றாக்குறை தீரும். நவீனரக வாகனம் வாங்குவீர்கள்.
7.9.2015 முதல் 16.11.2015 வரை மற்றும் 20.5.2016 முதல் 9.7.2016 வரை உங்கள் ராசியாதிபதி-அஷ்டமாதிபதியான சுக்கிரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் நோய்கள் அகலும்.
17.11.2015 முதல் 20.12.2015 வரை மற்றும் 10.7.2016 முதல் 1.8.2016 வரை குருபகவான் உங்கள் லாபாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். சமூகத்தில் ஒருபடி அந்தஸ்து உயரும். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ ப்ளான் அப்ரூவல் கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும்.
21.12.2015 முதல் 19.1.2016 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால் திடீர் பயணங்கள் உண்டு. உறவினர், நண்பர்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். அவ்வப்போது தூக்கம் குறையும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பழைய கடன், பகையை நினைத்து கலங்குவீர்கள்.
குருபகவானின் வக்ர கால பயணம்
20.1.2016 முதல் 6.2.2016 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால் பல வேலைகளையும் முழு மூச்சுடன் முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். உற்றார், உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
7.2.2016 முதல் 7.3.2016 வரை உள்ள கால கட்டத்தில் உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால் அடிவயிற்றில் வலி, வேலைச்சுமை, வீண் பிடிவாதம், முன்கோபம் வந்து செல்லும். அரசு விவகாரங்களில் அலட்சியப் போக்கு வேண்டாம். உங்களைப் பற்றிய விமர்சனங்களை சிலர் பரப்புவார்கள். தங்க ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள்.
8.3.2016 முதல் 19.5.2016 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ரகதியில் செல்வதால் உங்கள் ரசனை மாறும். எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். ஆரோக்யம் சீராகும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும். விபத்துகளிலிருந்து மீள்வீர்கள். நேர்மறை எண்ணங்கள் தோன்றும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பழைய இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். சுற்றுலா தலங்களுக்குச் சென்று வருவீர்கள். தேமல், அலர்ஜி நீங்கும்.
வியாபாரிகளே! போட்ட பணத்தை வட்டியும் முதலுமாக எடுத்துவிடலாம் என்று பலமுறை பெருந்தொகை போட்டு மாட்டிக் கொண்டீர்களே! அந்த அவலநிலை மாறும். பற்று வரவு உயரும். புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். சந்தை நிலவரத்தையும், வாடிக்கையாளர்களின் ரசனைகளையும் புரிந்துகொண்டு சலுகைத் திட்டங்களை அறிவித்து லாபம் ஈட்டுவீர்கள். வர்த்தகர்கள் சங்கம், இயக்கம் இவற்றில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். புதிய பொறுப்புகள், பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தள்ளிப்போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். கண்ணாடி, அழகு சாதனப் பொருட்கள், ஹோட்டல், ஹார்டுவேர்ஸ் வகைகளால் லாபமடைவீர்கள்.
உத்யோகஸ்தர்களே! சூழ்ச்சியாலும், மறைமுக எதிரிகளாலும் அவமானத்தை சந்தித்தீர்களே! இனி உங்கள் கை ஓங்கும். உங்களைவிட வயதில், தகுதியில் குறைவானவர்களுக்கெல்லாம் பதவி உயர்வு கிடைத்ததே! இனி அந்த நிலை மாறும். பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்தபடி கிடைக்கும். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். வேலைச்சுமை குறையும். தலைமைப் பொறுப்புகள் தேடி வரும். அதிகாரிகளுக்கு ஆலோசனை தருமளவிற்கு நெருக்கமாவீர்கள். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமைத் தருவார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
கன்னிப் பெண்களே! பகற் கனவுகள் கண்டு கொண்டிருந்த நீங்கள் இனி அதை நிறைவேற்றுவதற்கான வேலைகளில் இறங்குவீர்கள். காதலும் இனிக்கும், கல்வியும் இனிக்கும். கல்யாணமும் கூடி வரும். உங்கள் ரசனைக்கேற்றபடி நல்ல கணவர் அமைவார். கை, காலெல்லாம் சில நேரம் மரத்துப் போனதே! இனி உடலில் புது ரத்தம் பாயும். உற்சாகம் தங்கும். புது வேலை அமையும். பெற்றோரின் ஆலோசனையை ஏற்பீர்கள்.
மாணவ-மாணவிகளே! படிப்பிலிருந்த மந்தநிலை மாறும். உயர்கல்வியில் அதிக மதிப்பெண்ணுடன் வெற்றி பெறுவீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் பரிசு பெற்று, ஆசிரியர்களின் அன்பை பெறுவீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.
அரசியவாதிகளே! தலைமை உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்கும். கட்சிக்குள் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சகாக்கள் மத்தியில் ஆதரவு பெருகும்.
கலைத்துறையினரே! திறமையிருந்தும் வாய்ப்பு கள் நழுவிக் கொண்டே போனதே! அந்த நிலை மாறும். பொது விழாக்களுக்கு தலைமை தாங்குமளவிற்கு பிரபலமாவீர்கள். வருமானம் உயரும்.
விவசாயிகளே! வயலில் எலித் தொல்லை, பூச்சித் தொல்லை குறையும். வழக்கமான நெல், கம்பு, சோளத்தை விட புதிய பயிர்களை பயிரிடுங்கள். மூலிகை, கோழி வளர்ப்பு, செங்கல் சூளை இவற்றின் மூலம் பணவரவு அதிகரிக்கும்.
பரிகாரம்: கும்பகோணத்திற்கு அருகேயுள்ள தேப்பெருமாநல்லூர் சிவாலயத்திற்குள் அருளும் அன்னதான தட்சிணாமூர்த்தியை தரிசித்து வாருங்கள்.




Post a Comment