Header Ads

சிம்மம்

தாய்மொழி, தாய்நாடு மீது அதிக அக்கறை கொண்ட நீங்கள், மாளிகையில் இருந்தாலும் மண்ணை நேசிப்பவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 12வது வீட்டில் அமர்ந்து கொண்டு கைமீறிய செலவுகளையும், வீண்பழி, பகை, மன உளைச்சல், கடன் பிரச்னைகள், தூக்கமின்மை என அடுக்கடுக்காக சிக்கல்களை தந்து உங்கள் நிம்மதியை சீர் குலைத்துக் கொண்டிருந்த குருபகவான் இப்பொழுது 5.7.2015 முதல் 1.8.2016 வரை உங்கள் ராசிக்குள் அமர்ந்து ஜென்ம குருவாக தொடர இருப்பதால் பொறுப்புகளும், வேலைச்சுமையையும் அதிகரிக்கத்தான் செய்யும். ‘‘ஜென்மத்தில் ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்ததும்’’ என்ற பழைய பாடல்படி கணவன்-மனைவிக்குள் வீண் விவாதம், சண்டை சச்சரவுகளால் பிரிவுகள் வரக்கூடும்.


குருபகவான் தனது 5ம் பார்வையால் உங்களின் 5ம் வீட்டை பார்ப்பதால் பிள்ளைகளின் வருங்காலம் குறித்து புது முயற்சிகள் மேற்கொள்வீர்கள். புத்திர பாக்யம் கிடைக்கும். மகளின் கோபம் குறையும். குரு பகவான் ஏழாம் பார்வையால் உங்கள் ராசிக்கு 7ம் வீட்டை பார்ப்பதால் செயற்கரிய காரியங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் சின்னச் சின்ன விவாதங்கள் வந்தாலும் அன்பு குறையாது. உங்களின் பாக்ய வீடான 9ம் வீட்டின் மீது குருபகவானின் பார்வை விழுவதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். தந்தையாருக்கு அடிக்கடி மருத்துவச் செலவுகள் வந்து போனதே! இனி ஆரோக்யம் மேம்படும். அவருடனான மோதல்கள் விலகும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

5.7.2015 முதல் 6.9.2015 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலகட்டத்தில் மகம் நட்சத்திரக்காரர்கள் மேற்கண்ட நாட்களில் ஒருவித வெறுப்பு, சலிப்பு, வீண் டென்ஷன், பண இழப்பு, எதிர்பார்ப்பில் ஏமாற்றம், வீண்பழி, வி.ஐ.பிகளுடன் கருத்து மோதல் வந்து நீங்கும்.

7.9.2015 முதல் 16.11.2015 வரை மற்றும் 20.5.2016 முதல் 9.7.2016 வரை உங்கள் சேவகாதிபதியும் ஜீவனாதிபதியுமான சுக்கிரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை, சிறுசிறு விபத்துகள், பொருள் இழப்புகள், வீண் அலைச்சல் வந்துபோகும். குடும்பத்தில் குழப்பமும், ஒருவருக்கொருவர் சந்தேகமும் வந்துபோகும். வாகனம் அடிக்கடி பழுதாகி சரியாகும். 

17.11.2015 முதல் 20.12.2015 வரை மற்றும் 10.7.2016 முதல் 1.8.2016 வரை குருபகவான் உங்கள் ராசிநாதனான சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1ம் பாதம் உங்கள் ராசியில் அமர்வதால் அடிவயிற்றில் வலி, மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, வேனல் கட்டி, வீண் பகை, மனஇறுக்கம் வந்துசெல்லும்.             

21.12.2015 முதல் 19.1.2016 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால் திடீர் யோகம், பணவரவு, மகிழ்ச்சியெல்லாம் உண்டாகும். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். உடல் ஆரோக்யம் சீராகும்.

குருபகவானின் வக்ர காலப் பயணம்

20.1.2016 முதல் 6.2.2016 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால் பணப்பற்றாக்குறை தீரும். 

7.2.2016 முதல் 7.3.2016 வரையுள்ள காலகட்டத்தில் உத்திரம் 1ம் பாதம் உங்கள் ராசியிலேயே குரு வக்ரமடைவதால் பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை  கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு.

8.3.2016 முதல் 19.5.2016 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால் பிரபலங்களின் உதவியுடன் தள்ளிப்போன காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். பழுதான டி.வி., ஃப்ரிட்ஜ், மைக்ரோ ஓவனை மாற்றி புதுசு வாங்குவீர்கள்.

வியாபாரிகளே! நெருக்கடிகள் இருக்கும். தொடர்ந்து லாபம் பெற முடியவில்லையே என்ற கவலைகளும் இருக்கும். புது முதலீடுகளோ, முயற்சிகளோ வேண்டாம். அன்றாட சந்தை நிலவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். முன்பின் அனுபவமில்லாத தொழிலில் சிலரின் தவறான அறிவுரையால் முதலீடு செய்து நஷ்டப்பட வேண்டாம். வேலையாட்களால் நிம்மதி குறையும். அதிக வேலையிருக்கும் நாட்களில் பணியாட்கள் விடுப்பில் செல்வார்கள். பல நேரங்களில் நீங்களே முதலாளி, நீங்களே தொழிலாளி என்ற வகையில் வேலை பார்க்க வேண்டியது வரும். அதிக சம்பளம் கொடுத்தும், சலுகைகள் கொடுத்தும் எந்த பிரயோஜனமும் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். திடீரென்று அறிமுகமாகி கொஞ்ச காலம் பழகியவர்களை பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டாம். போர்டிங், லாட்ஜிங், ரியல் எஸ்டேட், ஏற்றுமதி-இறக்குமதி, கமிஷன் வகைகளால் ஆதாயம் அதிகரிக்கும்.

உத்யோகஸ்தர்களே! ஓய்வெடுக்க முடியாதபடி எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்ய வேண்டியது வரும். இதனால் வீட்டிற்கு தாமதமாகத்தான் வர வேண்டியிருக்கும். உங்களிடம் ஆலோசனை கேட்டுவிட்டு அதை தாங்கள் யோசித்ததாக மூத்த அதிகாரிகளிடம் சிலர் நல்ல பெயர் வாங்கிக் கொள்வார்கள். உங்கள் திறமைகளை நேரடியாக மூத்த அதிகாரிகளிடம் சிலர் கொண்டு செல்ல மறுப்பார்கள். வேலையில் நீடிப்போமோ, நீடிக்க மாட்டோமோ என்ற அச்சம் தினந்தோறும் எழும். சக ஊழியர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்காதீர்கள். சிலர் கட்டாய விடுப்பில் செல்ல வேண்டியிருக்கும். மூத்த அதிகாரிகளைப் பற்றிய ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். மறைமுக எதிர்ப்புகளையும், இடமாற்றங்களையும் சந்திக்க வேண்டியது வரும்.

கன்னிப் பெண்களே! அன்பாக பேசுபவர்களையெல்லாம் நல்லவர்கள் என்று நினைத்து ஏமாற வேண்டாம். மனதை அலைபாயவிடாமல் ஒருநிலைப்படுத்துங்கள். புதிதாக அறிமுகமாகுபவர்களிடம் கொஞ்சம் தள்ளியிருங்கள். நேரம் தவறி சாப்பிட வேண்டியிருக்கும். அசிடிட்டி தொந்தரவு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். போட்டித் தேர்வுகளை கவனமாக எழுதுங்கள். பெற்றோருக்கு தெரியாமல் எந்த நட்பும் வேண்டாம்.

மாணவ-மாணவிகளே! பொழுது போக்குகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம். படிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தலாமே! வகுப்பறையில் அரட்டை அடிக்க வேண்டாம். கூச்சமும், தயக்கமும் இல்லாமல் சந்தேகங்களை கேளுங்கள். கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்க்கப் பாருங்கள்.

அரசியல்வாதிகளே! வழக்கால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சுற்றியிருப்பவர்களில் யாரை நம்புவது, யாரை தவிர்ப்பது என்பது புரியாமல் தவிப்பீர்கள். சிலர் உங்களைப் பற்றி தவறான வதந்திகளை மேலிடத்திற்கு கொண்டு செல்லக்கூடும். விழிப்புடன் இருங்கள்.

கலைத்துறையினரே! உங்களுக்கு எதிராக விமர்சனங்கள் வந்த வண்ணம்தான் இருக்கும். அதற்காக அஞ்ச வேண்டாம். கிடைக்கின்ற வாய்ப்பு எதுவானாலும் சரியாக பயன்படுத்தப் பாருங்கள். பழைய சம்பள பாக்கி கைக்கு வரும்.

விவசாயிகளே! அதிகம் உழைக்க வேண்டி வரும். விளைச்சல் கொஞ்சம் மந்தமாக இருக்கும். ஒரே வகையான பயிறு வகைகளை சாகுபடி செய்யாமல் மாற்றுப் பயிரிட திட்டமிடுங்கள். தண்ணீர் வரத்து அதிகரிக்கும்.

பரிகாரம்: தேனி-மதுரை வழியில் 1 கி.மீ. தூரத்தில் உள்ள அரண்மனைப் புதூரில் இறங்கி, அங்கிருந்து வயல்பட்டி செல்லும் பாதையில் 2 கி.மீ. சென்றால் வேதபுரியை அடையலாம். இங்கு பிரக்ஞா தட்சிணாமூர்த்தி 9 அடி உயரத்தில் தெற்கு நோக்கி அருள்பாலித்து வருகிறார். சென்று தரிசித்து வாருங்கள்.

கருத்துகள் இல்லை