Header Ads

கடகம்

எங்கும் எதிலும் முதலிடத்தை பிடிக்க நினைக்கும் நீங்கள், காலம் கனியும் வரை காத்திருப்பவர்கள். இதுவரையில் உங்கள் ராசிக்குள் ஜென்ம குருவாக அமர்ந்து உங்களுக்கு வார்த்தைகளால் வடிக்க முடியாத அளவிற்கு ஏகப்பட்ட மனஉளைச்சல்களையும், கஷ்ட, நஷ்டங்களையும், டென்ஷனையும் தந்து, எதிலும் ஈடுபாடு இல்லாமல் செய்தாரே! எதிர்காலம் என்னவாகுமோ என்றெல்லாம் அச்சுறுத்திய குருபகவான் 5.7.2015 முதல் 1.8.2016 வரையுள்ள காலகட்டங்களில் உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2ம் வீட்டில் அமர்வதால் அடிமனதிலிருந்த போராட்டங்கள் நீங்கும். சோர்ந்திருந்த நீங்கள் இனி உற்சாகமடைவீர்கள். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் வீட்டில் சந்தோஷம் குடி கொள்ளும்.

குரு பகவான் தனது 5ம் பார்வையால் ஆறாவது வீட்டை பார்ப்பதால் எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். வழக்கால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். உங்களது எட்டாவது வீட்டை குரு தனது 7ம் பார்வையால் பார்ப்பதால் பழைய சொந்தங்கள் தேடி வரும். திட்டமிட்டபடி அயல்நாடுப் பயணங்கள் அமையும். விசா பெறுவதில் தடையிருக்காது. மூச்சுத் திணறல், மூச்சுப் பிடிப்பு, சளித் தொந்தரவுகள் நீங்கும். குலதெய்வக் கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். குருபகவான் தனது 9ம் பார்வையால் உங்களது பத்தாவது வீட்டை பார்ப்பதால் வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஆன்மிக காரியங்களில் அதிக நாட்டம் பிறக்கும். 

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

5.7.2015 முதல் 6.9.2015 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலகட்டத்தில் திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். புது முதலீடுகள் செய்து சொந்தமாக தொழில் தொடங்குவீர்கள்.

7.9.2015 முதல் 16.11.2015 வரை மற்றும் 20.5.2016 முதல் 9.7.2016 வரை உங்களின் சுகாதிபதியும்-லாபாதிபதியுமான சுக்கிரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் தாயாரின் உடல்நிலை சீராகும். தாய்வழிச் சொத்துகள் கைக்கு வரும்.

17.11.2015 முதல் 20.12.2015 வரை மற்றும் 10.7.2016 முதல் 1.8.2016 வரை குருபகவான் உங்கள் தனாதிபதி சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால் எதிர்பார்த்த வகையில் பணவரவு உண்டு என்றாலும் செலவுகள் அதிகரிக்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.

21.12.2015 முதல் 19.1.2016 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துபோகும். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். நட்பு வட்டத்தில் கவனமாகப் பழகுவது நல்லது.

குருபகவானின் வக்ர கால பயணம்

20.1.2016 முதல் 6.2.2016 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால் இக்காலகட்டத்தில் தன்னம்பிக்கை பிறக்கும். இளைய சகோதர வகையில் மதிப்பு கூடும். சொத்து சேர்க்கை உண்டாகும். பேச்சில் கம்பீரம் பிறக்கும்.

7.2.2016 முதல் 7.3.2016 வரை உள்ள காலகட்டத்தில் உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால் அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு.

8.3.2016 முதல் 19.5.2016 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் வீண் அலைச்சல், தர்ம சங்கடமான சூழ்நிலைகள், தாயாருக்கு தைராய்டு, முதுகுத் தண்டில் வலி வந்துபோகும்.

வியாபாரிகளே! தொடர் தோல்விகளையும், இழப்புகளையும் சந்தித்து ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைபட்டீர்களே! இரவு பகலாக உழைத்தும், ஆதாயம் பார்க்க முடியாமல் தவித்தீர்களே! இனி தொலைநோக்குச் சிந்தனையால் லாபம் கூடும். அவசரப்பட்டு பெரிய முதலீடுகளால் கையை சுட்டுக் கொண்டீர்களே! கொடுக்கல்-வாங்கலில் பிரச்னைகள் வெடித்ததே! அந்த அவல நிலையெல்லாம் மாறும். தேங்கிக் கிடந்த சரக்குகளை புதிய சலுகைகளை அறிவித்து விற்றுத் தீர்ப்பீர்கள். கடையை பிரபலமான இடத்திற்கு மாற்றுவது, விரிவுபடுத்துவது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும்.

அடிக்கடி விடுமுறையில் சென்று வேலையாட்கள் உங்களை நிலை குலைய வைத்தார்களே! இனி பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். தள்ளிப்போன ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும். கூட்டுத் தொழிலில் பிரச்னை தந்த பங்குதாரரை நீக்கி விட்டு உங்களுக்கு தகுந்தாற் போல் நல்ல பங்குதாரரை சேர்ப்பீர்கள். அரசு கெடுபிடிகள் தளரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். கெமிக்கல், கல்வி நிறுவனங்கள், ஸ்டேஷனரி, துரித உணவகம், கமிஷன் வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்யோகஸ்தர்களே! மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டி வந்ததே! இரவு பகலாக உழைத்தும் பலனில்லையே! உங்களுடைய திறமையையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறினார்களே! இனி அந்த நிலை மாறும். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். உங்களை குறைகூறிக் கொண்டிருந்த உயரதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு உங்களை மதிக்கும் புது அதிகாரி வந்தமைவார். ஓரங்கட்டி ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உங்கள் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். எதிர்பார்த்த சம்பள உயர்வு, புது வாய்ப்புகளெல்லாம் இனி கிடைக்கும். பதவி உயர்விற்காக தேர்வெழுதி காத்திருந்தவர்களுக்கு இனி பதவி உயர்வு தடையின்றி கிட்டும். பணியும் நிரந்தரமாகும். உத்யோகம் சம்பந்தமாக சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள்.

கன்னிப் பெண்களே! மதில்மேல் பூனையாக நின்ற நிலை மாறும். காதல் தோல்வியால் துவண்டு போனீர்களே! அதிலிருந்து மீள்வீர்கள். உண்மையான காதல் எது என்பதை உணருவீர்கள். அலர்ஜி, வயிற்று வலி விலகும். ஆடை அணிகலன்கள் சேரும். தன்னுடன் படித்தவர்களுக்கெல்லாம் திருமணம் முடிந்து விட்டதே! நமக்கு எப்போது முடியும் என கலங்க வேண்டாம். விரைவிலேயே கெட்டி மேளம் உண்டு. பெற்றோரின் ஆதரவு கிட்டும். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். விடுபட்ட பாடத்தை மீண்டும் எழுதி வெற்றி பெறுவீர்கள்.

மாணவ-மாணவிகளே! நினைவாற்றல் கூடும். சக மாணவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைக்குமளவிற்கு வகுப்பறையில் மதிப்பு கூடும். ஆசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். உயர்கல்வியில் கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். விளையாட்டில் பதக்கம் வெல்வீர்கள்.

அரசியல்வாதிகளே! முற்போக்குச் சிந்தனையால் மக்களின் பாராட்டைப் பெறுவீர்கள். கட்சியில் புது பதவிகள் கிடைக்கும். தலைமையின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள்.

கலைத்துறையினரே! கிசுகிசுக்கள் ஓயும். தனித் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு தேடி வரும். பழைய நிறுவனங்களிலிருந்து நல்ல வாய்ப்புகள் வரும். சம்பளப் பிரச்னை தீரும். உங்களின் படைப்புகளுக்கு பட்டிதொட்டியெங்கும் பாராட்டிப் பேசப்படும். 

விவசாயிகளே! மகசூலை பெருக்குவதாக நினைத்து கண்ட உரங்களை போட்டு நிலத்தை பாழடித்தீர்களே! இனி இயற்கை உரங்களை பயன்படுத்துவீர்கள். கடனை பைசல் செய்ய வழி, வகைப் பிறக்கும். தானியம், கரும்பு, நெல் சாகுபடியால் லாபமடைவீர்கள்.

பரிகாரம்: ஆந்திர மாநில எல்லையில் உள்ளது, சுருட்டப்பள்ளி நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம். சென்னையிலிருந்து ஊத்துக்கோட்டைக்குச் சென்றால் இத்தலத்தை அடையலாம். குரு பகவான், தாம்பத்ய தட்சிணாமூர்த்தியாக இங்கு அருள்கிறார். அவரை தரிசித்து வாருங்கள்.

கருத்துகள் இல்லை