Header Ads

தனுசு

மனிதநேயமும் மண்ணாளும் யோகமும் தவறுகளை தட்டிக் கேட்கும் நெஞ்சுரமும் கொண்டவர்களே! உறவினர்கள், நண்பர்களுக்காக ஓடிஓடி உழைத்தும் இறுதியில் விமர்சனத்திற்கு உள்ளாகுபவர்களே! நேர்மையால் எதையும் சாதிப்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு மறைவு ஸ்தானமான 8ம் வீட்டில் அமர்ந்து மனப் போராட்டத்தையும், வீண் விரயங்களையும், பணப் பற்றாக்குறையையும், வீண் அலைக்கழிப்புகளையும் கொடுத்து வந்த உங்கள் ராசிநாதன் குருபகவான் இப்பொழுது 5.7.2015 முதல் 1.8.2016 வரை உங்கள் ராசிக்கு பாக்யஸ்தானமான 9ம் வீட்டில் நுழைவதால் புதிய வியூகங்களை அமைத்து வாழ்வில் முன்னேறுவீர்கள். ‘ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் வீட்டில் குரு’ என்ற பழமொழிக்கேற்ப இனி எதையும் திட்டமிட்டு செய்வீர்கள்.


உங்கள் கல்வித் தகுதிக்கேற்ற வேலையில்லாமல் தவித்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். தந்தைக்கு இருந்த நோய் குணமாகும். அவருடனான மோதல்கள் விலகும். குருபகவான் தனது 5ம் பார்வையால் உங்கள் ராசியை பார்ப்பதால் வருங்காலம் குறித்து சில முக்கிய திட்டங்கள் தீட்டுவீர்கள். துவண்டிருந்த உங்கள் முகம் இனி பிரகாசிக்கும். எவ்வளவு காசு வந்தாலும் அவசரத்திற்கு எதுவும் இல்லாமல் தவித்தீர்களே! இனி நாலு காசு எடுத்து வைக்கும் அளவுக்கு வருமானம் கூடும். உங்கள் ராசிக்கு 3ம் வீட்டை குரு தனது 7ம் பார்வையால் பார்ப்பதால் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். சின்னச் சின்ன வேலையை தொட்டால் கூட தடங்கலானதே! இனி முதல் முயற்சியிலேயே முடிப்பீர்கள்.

இளைய சகோதர, சகோதரி வகையில் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். பாசமழை பொழிவார்கள். பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நின்றீர்களே! இனி ஒய்யாரமாக செல்வீர்கள். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு புதிய வாகனத்தில் வலம் வருவீர்கள். குரு தனது 9ம் பார்வையால் உங்களின் 5ம் வீட்டை பார்ப்பதால் எவ்வளவோ மருத்துவ சோதனைகள் செய்தும், மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் வீட்டில் துள்ளி விளையாட ஒரு பிள்ளை இல்லையே என ஏங்கித் தவித்தவர்களுக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். பிள்ளைகள் நல்ல வழிக்குத் திரும்புவார்கள். பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். பூர்வீகச் சொத்து, பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வழக்கில் இருந்து வந்த இழுபறிநிலை மாறும். வேற்று மதம், மொழியினரால் ஆதாயமடைவீர்கள்.  

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

5.7.2015 முதல் 6.9.2015 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலகட்டத்தில் வேலைச்சுமை, சற்றே உடல் நலக்குறைவு வந்து நீங்கும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பார்த்தவை தாமதமானாலும், எதிர்பாராத சில வேலைகள் முடியும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை உணர்வீர்கள். சிலர் சொந்தத் தொழில் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். ஒரு சொத்தை விற்று சில பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள்.

7.9.2015 முதல் 16.11.2015 வரை மற்றும் 20.5.2016 முதல் 9.7.2016 வரை உங்கள் சஷ்டமாதிபதியும் லாபாதிபதியுமான சுக்கிரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் உங்கள் செயலில் வேகம் கூடும். எதிரிகளை வீழ்த்துவீர்கள். பழைய கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். வீடு, வாகன வசதி பெருகும். பணப்புழக்கம் அதிகமாகும்.

17.11.2015 முதல் 20.12.2015 வரை மற்றும் 10.7.2016 முதல் 1.8.2016 வரை குருபகவான் உங்கள் பாக்யாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால் உங்களுடைய நிர்வாகத் திறமை, ஆளுமைத் திறமை அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வேலை கிடைக்கும்.

21.12.2015 முதல் 19.1.2016 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால் புதுத் தெம்பு பிறக்கும். என்றாலும் காலநேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும்.

குருபகவானின் வக்ர கால பயணம்

20.1.2016 முதல் 6.2.2016 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால் அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். புது பொறுப்புகள் தேடி வரும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயமடைவீர்கள். சிலர் வெளிநாடு சென்று வருவீர்கள்.

7.2.2016 முதல் 7.3.2016 வரை உள்ள கால கட்டத்தில் உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால் எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஊர் பொது காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பிலிருந்து விலகுவீர்கள்.

8.3.2016 முதல் 19.5.2016 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால் தொண்டை வலி, கணவன்-மனைவிக்குள் பிரிவு, வீண் வாக்குவாதம், வாகனப் பழுது, பணப் பற்றாக்குறை வந்து செல்லும். வெளிவட்டாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். புது பதவிகளை யோசித்து ஏற்பது நல்லது.

வியாபாரிகளே! சோர்ந்திருந்த நீங்கள் இப்போது புத்துயிர் பெறுவீர்கள். தொழிலில் ஆர்வம் பிறக்கும். பெரிதாக முதலீடு செய்து போட்டியாளர்களை திகைக்கச் செய்வீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். பெட்ரோகெமிக்கல், டிராவல்ஸ், கட்டிட உதிரி பாகங்களால் ஆதாயமடைவீர்கள். பிரச்னை கொடுத்து வந்த பங்குதாரரை மாற்றுவீர்கள். உங்களுடைய கருத்துகளுக்கு ஏற்ற பங்குதாரரை சேர்த்துக் கொள்வீர்கள்.   

உத்யோகஸ்தர்களே! காலநேரம் பார்க்காமல் உழைத்தும் அதற்கான பலனையும், பாராட்டையும் வேறொருவர் தட்டிச் சென்றாரே! இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உயரதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். பணி நிரந்தரமாகும். திணறிக் கொண்டிருந்த உங்கள் மனசு தெளிவடையும். சக தோழிகளுக்கெல்லாம் திருமணமாகி விட்டதே என்று வருந்தினீர்களே! கவலை வேண்டாம். கெட்டிமேளச் சத்தம் கேட்கும். முகப்பரு, தேமல் நீங்கி முகம் ஜொலிக்கும். தடைபட்ட படிப்பை முடித்து நல்ல வேலையில் அமர்வீர்கள். கசந்த காதல் இனிக்கும்.

மாணவ, மாணவிகளே! ஆசிரியர்கள் உங்களை மட்டம் தட்டி பேசினார்களே! அவர்களே வியக்கும்படி அதிக மதிப்பெண் பெற்று உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். சக மாணவர்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். கலை, கட்டுரை, கவிதைப் போட்டிகளில் பரிசும், பாராட்டும் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளே! வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. தலைமையின் சொந்த விஷயங்களில் தலையிடும் அளவிற்கு நெருக்கமாவீர்கள்.

கலைத்துறையினரே! கிசுகிசுக்கள் ஓயும். ரசிகர்கள் கூட்டம் அதிகமாகும். திரையிடப்படாமல் தடைப்பட்டிருந்த உங்களது படைப்பு வெளியாகும். பழைய நிறுவனங்களில் இருந்து புதிய வாய்ப்புகள் வரும்.

விவசாயிகளே! விளைச்சல் குறைந்ததால் கடனாளியாக்கப்பட்டீர்களே! இனி இயற்கை உரங்களால் மகசூலை பெருக்குவீர்கள். வருமானம் உயரும். அடகிலிருந்த பத்திரங்களை மீட்பீர்கள். ஊரில் மதிப்பும், மரியாதையும் கூடும்.

பரிகாரம்: சென்னை-திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலயத்திற்கு முன் தட்சிணாமூர்த்திக்கு தனிக் கோயில் உள்ளது. சுமார் 10 அடி உயரத்தில் அற்புதமான வடிவழகோடு அருள் ததும்பும் திருமுகத்தோடு வீற்றிருக்கிறார். இவரை இயன்றபோதெல்லாம் தரிசித்து வாருங்கள்.

கருத்துகள் இல்லை