Header Ads

மகரம்

அழுத்தமான கொள்கை கோட்பாடுகளை கொண்டவர்களே! கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் அமர்ந்து கௌரவத்தையும், செல்வாக்கையும், ஓரளவு பணவரவையும், குடும்பத்தில் சந்தோஷத்தையும் தந்த குருபகவான் 5.7.2015 முதல் 1.8.2016 வரை உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் மறைவதால் சவால்களை சந்திக்க வேண்டியது வரும். மற்றவர்களை சார்ந்திருக்காமல் உங்கள் சொந்த முயற்சியில் என்ன முடியுமோ அதை மட்டும் செய்து முன்னேறப் பாருங்கள். சின்னச் சின்ன பிரச்னைகளையெல்லாம் பெரிதாக்கிக் கொள்ளாதீர்கள். உணர்ச்சிவசப்படாமல் அறிவுப் பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள்.


குருபகவான் தனது 7ம் பார்வையால் உங்களது 2ம் வீட்டை பார்ப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பழைய காலி இடத்தை விற்று புதிதாக வீடு வாங்கும் யோகம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். அழகு, ஆரோக்யம் கூடும். வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள். குருபகவான் தனது 9ம் பார்வையால் உங்களது சுக ஸ்தானமான 4ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாருடனான மோதல்கள் விலகும். அவருக்கு இருந்து வந்த மருத்துவச் செலவுகள் குறையும். வீட்டில் கூடுதல் அறை அல்லது தளம் அமைப்பது போன்ற முயற்சிகள் பலிதமாகும்.

தாய்மாமன் வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடன் பிரச்னையை தீர்க்க புதுவழி யோசிப்பீர்கள். குரு 12ம் வீட்டை பார்ப்பதால் புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வெகுநாட்களாக இழுபறியில் இருந்து வந்த வழக்குகள் சாதகமாக முடியும். அரசாங்க விஷயங்களில் இருந்து வந்த பின்னடைவு விலகும். உங்களைக் கண்டு ஒதுங்கிச் சென்றவர்களெல்லாம் இனி வலிய வந்து உறவாடுவார்கள். அடிக்கடி தொந்தரவு தந்த பழைய வாகனத்தை மாற்றிவிட்டு, புதிய வண்டியில் வலம் வருவீர்கள். திடீர் பயணங்களால் உற்சாகமடைவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

5.7.2015 முதல் 6.9.2015 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலகட்டத்தில் ஒரு பக்கம் அலைச்சல் இருந்தாலும் முன்னேற்றமும் உண்டு. சிறுசிறு விபத்துகள், பொருள் இழப்புகள் வந்து நீங்கும். ஆனால், பணவரவு குறையாது. புகழ், கௌரவம் கூடும். அரசால் ஆதாயம் உண்டு. முக்கிய பதவிகள், பொறுப்புகள் தேடிவரும். பூர்வீகச் சொத்துச் சிக்கல் ஒரு முடிவுக்கு வரும். 

7.9.2015 முதல் 16.11.2015 வரை மற்றும் 20.5.2016 முதல் 9.7.2016 வரை உங்கள் பூர்வ புண்யாதிபதியும் ஜீவனாதிபதியுமான சுக்கிரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்தில் சீர்த்திருத்தம் செய்வீர்கள்.

17.11.2015 முதல் 20.12.2015 வரை மற்றும் 10.7.2016 முதல் 1.8.2016 வரை குருபகவான் உங்கள் அஷ்டமாதிபதி சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால் சிறுசிறு விபத்துகள், வீண் அலைச்சல், முன்கோபம், காரியத் தடைகள் வந்துசெல்லும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். அரசாங்க விஷயம் தாமதமாகி முடியும். நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும்.

21.12.2015 முதல் 19.1.2016 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். பிரபலங்களின் உதவியால் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சொந்தபந்தங்கள் மத்தியில் இருந்து வந்த சலசலப்புகள் நீங்கும்.

குருபகவானின் வக்ர கால பயணம்

20.1.2016 முதல் 6.2.2016 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால் உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்துவார்கள். வீண் சந்தேகத்தை தவிர்க்கப் பாருங்கள்.

7.2.2016 முதல் 7.3.2016 வரை உள்ள காலகட்டத்தில் உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால் பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனசை வாட்டும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் இருக்கும். அவ்வப்போது தூக்கம் குறையும். எந்த ஒரு காரியத்தையும் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும். அதற்காக அலுத்துக் கொள்ளாதீர்கள்.   

8.3.2016 முதல் 19.5.2016 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால் மின்னணு, மின்சார சாதனங்களை கவனமாக கையாளுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். அவ்வப்போது அவர்களின் குறைகளை கண்டுபிடித்து வருத்தமடைவீர்கள். நிறைகளையும் பாராட்டத் தயங்காதீர்கள்.

வியாபாரிகளே! போராடி லாபம் ஈட்டுவீர்கள். சிலர் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். வேலையாட்களிடம் அதிக கண்டிப்பு காட்ட வேண்டாம். பழைய வாடிக்கையாளர்களை மனங்கோணாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சந்தை நிலவரங்களை உற்றுக் கவனியுங்கள். மற்றவர்கள் பேச்சை கேட்டு அதிகளவில் முதலீடுகள் செய்ய வேண்டாம். இருப்பதை வைத்து லாபம் சம்பாதிக்கப் பாருங்கள். பங்குதாரர்களிடம் இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது. சிலர் தங்கள் பங்கை கேட்டுத் தொந்தரவு தருவார்கள். இரும்பு, அழகு சாதனங்கள், ரசாயனம், மருந்து வகைகள் மூலம் லாபம் அதிகரிக்கும்.

உத்யோகஸ்தர்களே! பொறுப்புகள் அதிகமாகும். அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொள்வார்கள். மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டியது வரும். பணிகளை சற்றுப் போராடி முடிக்க வேண்டியது வரும். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். உங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சலுகைகள், உரிமைகளை கூட போராடி பெற வேண்டி வரும். உயர்மட்ட அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். எவ்வளவு உழைத்தாலும் உங்களைப்பற்றி குறை கூறத்தான் செய்வார்கள். கவலைப்படாதீர்கள், கடமையைச் செய்யுங்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பாக சட்ட நிபுணர்களை கலந்தாலோசிப்பது நல்லது. சிலர் உங்கள் மீது தவறான வழக்குகள் போட வாய்ப்பிருக்கிறது.

கன்னிப் பெண்களே! சிலரின் ஆசை வார்த்தை களை நம்பி ஏமாறாதீர்கள். காதல் கசந்து இனிக்கும். முகப்பரு, கனவுத் தொல்லை வந்துபோகும். கல்யாணம் கூடி வரும். பெற்றோரின் ஆலோசனையை புறக்கணிக்காதீர்கள்.

மாணவ-மாணவிகளே! நீங்கள் மிகவும் திறமையானவர்கள்தான். ஆனால், தேர்வு நெருங்கும் நேரத்தில் மட்டும் படிக்காமல் அன்றன்றைய பாடங்களை உடனுக்குடன் முடியுங்கள். அலட்சியப்போக்கு, வீணாக வகுப்பறையில் அரட்டை அடிப்பது என நேரத்தை வீணடிக்காதீர்கள். கணிதம், அறிவியல் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

அரசியல்வாதிகளே! தொகுதியில் நடக்கும் நல்லது கெட்டதில் கலந்து கொண்டு மக்களின் அனுதாபத்தைப் பெறுவீர்கள். சகாக்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். கலைத்துறையினரே! பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். மனந்தளராமல் இருங்கள்.

விவசாயிகளே! அரசாங்கத்தால் சில சலுகைகள் கிடைக்கும். இரவு நேரத்தில் வயலுக்கு செல்லும் போது கைவிளக்குடன் செல்லுங்கள். பாம்பு குறுக்கிட வாய்ப்பிருக்கிறது.

பரிகாரம்: தஞ்சாவூருக்கு அருகிலுள்ள திருவையாறு பஞ்சநதீஸ்வரர் திருக்கோயிலில் அருள்புரியும் தட்சிணாமூர்த்தி திருவடியின் கீழ் ஆமையுடன் திருக்காட்சியளிக்கிறார். இவரை இயன்றபோதெல்லாம் தரிசித்து வாருங்கள்.

கருத்துகள் இல்லை