மிதுனம்
காசு பணத்திற்கு விலை போகாமல் தன்மானத்துடன் சுதந்திரக் காற்றை சுவாசிப்பவர்களே! வலுவான கொள்கை, கோட்பாடுகளுடன் வாழும் நீங்கள் வழுக்கி விழுபவர்களை வாழ வைப்பவர்கள். நல்லதே செய்து நலிந்த நீங்கள் நாலுபேர் நாலுவிதமாகப் பேசினாலும் கலங்க மாட்டீர்கள். இதுவரை உங்களின் தன வீடான 2ம் வீட்டில் அமர்ந்துகொண்டு ஓரளவு பணப் புழக்கத்தையும், சமூகத்தில் அந்தஸ்தையும், கௌரவத்தையும், குடும்பத்தில் நிம்மதியையும் தந்த குருபகவான் 5.7.2015 முதல் 1.8.2016 வரை உங்கள் ராசிக்கு தைரிய ஸ்தானமான மூன்றாவது வீட்டில் அமர்வதால் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கப் பாருங்கள். உங்களின் 7ம் வீட்டை குரு தனது 5ம் பார்வையால் பார்ப்பதால் உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பமும் சூழ்நிலையும் உருவாகும்.
பிரபலங்கள் நண்பர்களாவார்கள். கணவன்-மனைவிக்குள் சண்டை, சச்சரவுகள் வந்தாலும், அன்பும், அன்யோன்யமும் குறையாது. குருபகவான் தனது 7ம் பார்வையால் உங்களின் 9ம் வீட்டைப் பார்ப்பதால் வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகளும் கிடைக்கும். உங்களது லாப வீடான 11வது வீட்டை குரு தனது 9ம் பார்வையால் பார்ப்பதால் உங்களின் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். உங்களை இழிவாகவும், ஏளனமாகவும் பேசியவர்களெல்லாம் வலியவந்து நட்பு பாராட்டுவார்கள். தள்ளிப்போன காரியங்களெல்லாம் முடிவுக்கு வரும்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்
5.7.2015 முதல் 6.9.2015 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலகட்டத்தில் பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். பணம் வரும். ஆனால், செலவினங்களும் துரத்தும். குடும்பத்திலும் சண்டை, சச்சரவுகள் வரக்கூடும்.
7.9.2015 முதல் 16.11.2015 வரை மற்றும் 20.5.2016 முதல் 9.7.2016 வரை உங்களின் பிரபல யோகாதிபதியும்-பூர்வ புண்யாதிபதியுமான சுக்கிரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் முன்கோபம் குறையும். சாந்தமாவீர்கள்.
17.11.2015 முதல் 20.12.2015 வரை மற்றும் 10.7.2016 முதல் 1.8.2016 வரை குருபகவான் உங்கள் சேவகாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால் நெருக்கடிகளை சமாளிக்கும் சக்தி உண்டாகும். தைரியம் கூடும். அரசு காரியங்கள் விரைந்து முடிவடையும். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும்.
21.12.2015 முதல் 19.1.2016 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால் கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்க்கப் பாருங்கள். தாயாருக்கு முதுகு வலி, மூட்டு வலி, சின்னச் சின்ன அறுவை சிகிச்சைகள் வரக்கூடும். தாய்வழி உறவினர்களாலும் அலைச்சல், செலவுகள் இருந்து கொண்டேயிருக்கும். உங்கள்மீது சிலர் வீண்பழி சுமத்த முயல்வார்கள்.
குருபகவானின் வக்ர கால பயணம்
20.1.2016 முதல் 6.2.2016 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால் பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.
7.2.2016 முதல் 7.3.2016 வரை உள்ள காலகட்டத்தில் உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால் அரசு காரியங்கள்
இழுபறியாகும். உங்களைப்பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். வருங்காலம் பற்றிய பயம், தாழ்வுமனப்பான்மை வந்துசெல்லும்.
8.3.2016 முதல் 19.5.2016 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ரகதியில் செல்வதால் இக்கால கட்டத்தில் வாகன விபத்துகள், மின்னணு, மின்சார சாதனப் பழுது, தொண்டைப் புகைச்சல், சளித் தொந்தரவு, சைனஸ் இருப்பதைப்போல் லேசான தலைவலி வந்துபோகும்.
வியாபாரிகளே! ஆழம் தெரியாமல் காலை விட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். புது முயற்சிகளோ, பெரிய முதலீடுகளோ வேண்டாம். ஒருவாரம் நன்றாக இருந்தால் மறுவாரம் வருமானம் இல்லாமல் போகிறதே என்று நினைத்து கலங்குவீர்கள். வியாபாரத்தை நம்பி லோன் வாங்கலாம் என்று நினைத்தால் கூட முடியாமல் போகிறதே நிலையற்ற வருமானமாகி விட்டது என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். அவ்வப்போது மாறி வரும் சந்தை நிலவரத்தை தெரிந்து கொள்ளுங்கள். வாடிக்கையாளர்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட வேலையாட்களை பணியிலிருந்து நீக்கு வீர்கள். பழைய பாக்கிகளை போராடித்தான் வசூலிக்க வேண்டி வரும். அண்டை மாநில வேலையாட்களை பணியில் அமர்த்தும்போது சிபாரிசு இல்லாமல் வேலையில் சேர்த்துக் கொள்ளாதீர்கள். அரசாங்க விஷயங்களில் அலட்சியமாக இருந்து விட வேண்டாம். வரிகளை முறையாகச் செலுத்தி விடுங்கள். ஹோட்டல், லாட்ஜ், வாகன உதிரி பாகங்கள், கமிசன் வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பிரச்னைகள் வரும்.உங்களை புரிந்து கொள்ள மாட்டார்கள். விட்டுக் கொடுத்துப் போங்கள்.
உத்யோகஸ்தர்களே! மேலதிகாரிகளால் ஒதுக்கப்படுகிறோமோ என்ற ஒரு சந்தேகம் உள்ளுக்குள் இருந்து கொண்டேயிருக்கும். சக ஊழியர்களில் ஒருசிலர் இரட்டை வேடம் போடுவதையும் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். அவர்களிடம் உஷாராகப் பழகுங்கள். மேலதிகாரிகள் வற்புறுத்தினாலும், நீங்கள் நேர்ப் பாதையில் செல்வது நல்லது. உயரதிகாரிகளை விமர்சிக்க வேண்டாம். விடுப்பு எடுக்க முடியாதபடி வேலைச்சுமையும் அதிகரிக்கும். எதிர்பாராத இடமாற்றம் உண்டு. புதிய வாய்ப்புகள் வந்தால் தீர யோசித்து முடிவெடுங்கள். புதிய சலுகைகளும், சம்பள உயர்வும் சற்று தாமதமாகும்.
கன்னிப் பெண்களே! கெட்டவர்கள் அன்பாகப் பேசினாலும் ஒதுக்கித் தள்ளுங்கள். இரும்பு, கால்சியச் சத்து உடம்பில் குறையும். மேலை நாட்டு உணவை தவிர்த்துவிட்டு பாரம்பரிய உணவை உட்கொள்ளுங்கள். தள்ளிப்போன திருமணம் கூடிவரும். ஃபேஸ் புக், இ.மெயிலை எல்லாம் கவனமாகப் பயன்படுத்துங்கள். வேலை கிடைத்தாலும் தக்க வைத்துக் கொள்ள போராட வேண்டியது வரும்.
மாணவ-மாணவிகளே! மொத்தமாக படித்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடாமல் அன்றைய பாடங்களை அன்றே படித்துவிடுவது நல்லது. வகுப்பறையில் முன்வரிசையில் அமருங்கள். போட்டித் தேர்வுகளில் போராடி வெற்றி பெறுவீர்கள். நல்லவர்களுடன் நட்பு வைத்துக் கொள்ளுங்கள்.
அரசியல்வாதிகளே! தொகுதி மக்களை மறக்காதீர்கள். உங்களுடன் இருந்து கொண்டே உங்களுக்கு எதிராக செயல்படுபவர்களை இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். உட்கட்சிப் பூசல் வெடிக்கும். மேலிடத்தை அனுசரித்துப் போங்கள். சகாக்கள் மத்தியில் சின்னச் சின்ன சலசலப்புகள் இருக்கத்தான் செய்யும்.
கலைத்துறையினரே! பெரிய வாய்ப்புக்காக காத்திருக்காமல் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளப் பாருங்கள். சக கலைஞர்களால் போட்டிகள் அதிகரிக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும். உங்களுடைய படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள்.
விவசாயிகளே! விளைச்சலில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். அக்கம்-பக்க நிலத்துக்காரர்களை அனுசரித்துப் போங்கள். சின்ன சின்ன வாய்க்கால், வரப்புச் சண்டைக்காக கோர்ட், கேஸ் என்று நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்காதீர்கள். காய்கறி, தானிய வகைகளால் லாபமடைவீர்கள்.
பரிகாரம்: வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம்-பேரம்பாக்கம் வழியில் தக்கோலம் உள்ளது. தலையைச் சற்றே வலதுபுறம் சாய்த்த நிலையில் ‘உத்கடி’ ஆசனத்தில் அமர்ந்த தட்சிணாமூர்த்தியின் திருவுருவை தரிசித்து வாருங்கள்.




Post a Comment