Header Ads

ஆறு நமக்களித்த வரலாறு

எழில்மிகு முனைக்காடு கிராமத்தின் மேற்கு எல்லைப்பகுதியாக ஆறு வளைந்தோடுகின்றது. இவ்வாற்றிற்கு அடுத்தகரையில் கஞ்சிரங்குடா கிராமம் அமையப்பெற்றுள்ளது. இவ்வாற்றினை கடப்பதற்கு தோணிகளை பயன்படுத்தி சென்ற வரலாறுகளும், இதன்போது தோணி நீரில் மூழ்கி பாடசாலை மாணவர்கள் முதல், பொதுமக்கள் வரை மரணித்த நினைவுகளும் இருக்கின்றது.


ஆற்றினை கடந்து தோணியை உடைத்து காட்டுயானை ஊருக்குள் புகுந்த பதிவுகளும் இருக்கின்றது. 

வளைந்தோடும் ஆற்றிலே மீன்பிடியில் முனைக்காடு கிராமத்தினைச்சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்து வாழ்க்கையை கொண்டுசெல்லும் நிலையும், ஆலயங்கள் தீர்த்தமாடும் வாவிக்கரையாகவும், காலைவேளையிலே மீன் வாங்குவதற்கு ஆற்றாங்கரையிலே மக்கள் கூடிநிற்கும் அழகும்  சிறப்புபெற்றிருக்கின்றது.

வீடுகட்டுவதற்கு களியெடுக்க ஆற்றாங்கரையின் ஓரம் சென்று (கரச்சை என்று நம்மவர் அழைப்பர்) களியெடுத்து தோள்களிலே, தலையிலே வைத்து வரிசையாக சுமந்து சென்றதும், கூடி, கூச்சலிட்டு மகிழ்ச்சிகொண்ட மனப்பதிவும் பலரின் கண்முன்னே தெரிகிறது.

மண்ணாங்கட்டி உட்கொண்ட நினைவும், ஆற்றிலே ஓலைமட்டைகளை இழக வைத்து மரநிழலிலும், தென்னம்சோலைகளிலும் கூடியிருந்து போட்டிக்கு போட்டியாக ஓலைமட்டை இழைத்தமையும், கண்ணாப்பற்றைக்குள் விறகுஎடுத்து வரிசையாக வரும் நினைவுச்சுவடும், காலையிலும், மாலையிலும் காலைக்கடனில் ஒன்றை முடிக்கச்செல்லுதலும், சிறுவர்கள், இளைஞர்கள் கரச்சையிலே விளையாடும் நினைவுகளையெல்லாம் சுமந்து கொண்டதுதான் முனைக்காடு கிராமத்தின் மேற்கு புறத்தில் அமையப்பெற்றுள்ள வாவி.

நீச்சல் அடிக்க பழகுபவருக்கும் ஆறுதான் பயிற்சி நிலையமாய் இருந்தது.

- வ.துசாந்தன் -