Header Ads

முனைக்காட்டிலிருந்து எண்பதுகளில் எழுந்த இலக்கிய முயற்சி ஓளிக்கல்லூரியின் இலக்கியச் சிற்றேடு – ‘ஒளி’

1978 இல் சூறாவளியால் கல்வி வளங்கள் சிதைக்கப்பட்;டு நம்பிக்கையிழந்து நின்ற படுவான்கரை மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டிப் பாடசாலைக் கல்விக்கு மேலதிகமாக இலவச வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்திப் பொதுப்பரீட்சைகளில் அவர்களை வெற்றி பெறச்செய்ய வழிகாட்டவென ஆரம்பிக்கப்பட்ட கல்வி நிறுவனமான ‘ஒளிக்கல்லூரி’ காலப்போக்கில் தனது நடவடிக்கைளைப் பல்வேறு துறைகளில் வியாபிக்கச் செய்தது. 1980களில் மாணவர்களின் பல்துறை சார்ந்த ஆளுமை விருத்திக்கு உதவுமுகமாகக் கலை, இலக்கிய நடவடிக்கைளிலும் கால்பதிக்க ஆரம்பித்தது. கட்டுரை, பேச்சு, நாடக, கவிதைப் போட்டிகள் கிரமமாக நடத்தப்பட்டு வெற்றி பெறும் மாணவர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர். 



1982 இல் உலகெங்கிலும் தமிழர்களால் பாரதி நூற்றாண்டு கொண்டாடப்பட்டபோது முனைக்காட்டிலும் அது ஒரு பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது பெருமையுடன் நினைவுகூரப்படவேண்டியதாகும். நாடகம், கவியரங்கம், பட்டிமன்றம், பாடல்கள் என எல்லா நிகழ்வுகளும் ‘ஒளிக்கல்லூரி’ மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் ஆற்றல்களை வெளிப்படுத்த அரங்கமைத்துக் கொடுத்தன. இவ்வாறு கலை, இலக்கிய நிகழ்வுகளின்பால் ஈர்க்கப்பட்ட ‘ஒளிக்கல்லூரி’ ஆசிரிய குழுவினர் இலக்கியச் சிற்றேடு ஒன்றை வெளியிடும் முயற்சியை 1984இல் ஆரம்பித்தனர். திரு.சி.வரதசீலன் அவர்களை ஆசிரியராகக்கொண்டு முதலாவது இதழ் பரீட்சார்த்தமாக 1984 பெப்ரவரியில் றோணியோ தட்டச்சுப் பதிப்பாக வெளியிடப்பட்டது. அது படுவான்கரைப் பிரதேச எல்லைகளைத் தாண்டி மட்டக்களப்பு மாவட்டமெங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது. எனவே இரண்டாவது இதழ் அதிக பக்கங்களுடன் கூடுதலான ஆக்கங்களைத் தாங்கியதாக 1984 மே மாதத்தில் வெளிவந்தது. இதில் காணப்பட்ட முன்னேற்றகரமான விடயம் என்னவெனில் அதன் பக்கங்கள் றோணியோ தட்டச்சுப் பதிப்பாகவும் அட்டை அச்சுப் பதிப்பாகவும் அமைந்திருந்தமையாகும்.  


தொடர்ந்து வந்த மூன்றாம், நான்காம், ஐந்தாம் இதழ்கள் முழுமையாக அச்சுப் பதிப்பாக வெளிவந்தன. அவை வெளியான காலப்பகுதிகள் கீழ்வருமாறு:

3ம் இதழ்: செப்ரெம்பர் 1984
4ம் இதழ்: பெப்ரவரி 1985
5ம் இதழ்: சனவரி 1986

‘ஒளி’ இதழ்கள் தொடர்ந்து வெளிவர முடியாமற் போனமை பெரும் துர்ப்பாக்கியமே. அதற்குக் காரணம் நிதிப் பற்றாக்குறையோ அல்லது ஆக்கங்களுக்கான தட்டுப்பாடோ அல்ல. மாறாக, 1986இலும் தொடர்ந்து வந்த ஆண்டுகளிலும் எமது பிரதேசத்தில் நிலவிய சவால்கள் பல நிறைந்த சூழ்நிலையே காரணமாக அமைந்நது. குறிப்பாக 1987 சனவரியில் நிகழ்ந்த மாபெரும் துன்ப நிகழ்வான இறால் வளர்ப்புப் பண்ணைப் படுகொலைகள் ஒளிக்கல்லூரி நடவடிக்கைகளைப் பெரிதும் பாதித்தன. ஒளிக்கல்லூரியின் ஆசிரியர்கள் உட்பட அன்பர்கள், அனுதாபிகள் பலரை இழக்க நேர்ந்தமை ‘ஒளி’ யின் தொடர்ச்சியான வருகைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. 

வெளிவந்த ஐந்து இதழ்களுக்கும் தனித்தனியே வெளியீட்டு விழாக்கள் நடத்தப்பட்டன. அவற்றின்போது கிடைத்த அன்பளிப்புகளும், விளம்பரதாரர்கள் ஆர்வத்துடன் வழங்கிய ஒத்துழைப்பும் அத்தோடு விற்பனை மூலம் கிடைத்த வருமானமும் ‘ஒளி’ இதழ்களை வெளியிடுவதற்குப் போதுமானவையாக இருந்தன. 

‘ஒளி’ யின் இதழ்கள் ஒவ்வொன்றும் அக்கால தேசிய இலக்கியப் பரப்பில் கணிசமான கவனிப்பைப் பெற்றன. வீரகேசரி, தினகரன், மித்திரன் போன்ற தேசிய தமிழ் நாளிதழ்களில் இலக்கியச் செய்திகளாக ;ஒளி;’ பற்றிய குறிப்புகள் இடம்பெற்றமை இதற்குச் சான்றாகும். அவற்றுள் சில பகுதிகள் கீழ்வருமாறு: 



1984 ஒக்டோபர் 28 ஞாயிறு தினகரன் வார மஞ்சரி “அறுவடை” பகுதியில் ‘எஸ்தி’ அவர்கள் எழுதிய குறிப்பு

“ ஏற்கனவே றோணியோ தட்டச்சுப் பிரதிகளாக இரண்டு இதழ்கள் வெளிவந்த ‘ஒளி’ சஞ்சிகையின் மூன்றாவது இதழ் அச்சுப் பதிப்பாக வெளிவந்துள்ளது. கிழக்கிலங்கையின் மிகப் பின்தங்கிய பிரதேசங்களில் ஒன்றான மட்டக்களப்பின் கொக்கட்டிச்சோலையிலுள்ள முனைக்காடு என்ற இடத்தில் ‘ஒளி’ பட்டொளி வீச ஆரம்பித்துள்ளது. பிரதேசப் பார்வையே கூடுதலாகத் தென்படும் ஒளியை இங்குள்ள ஒளிக்கல்லூரி அமைப்பாளர்கள் மிகுந்த பிரயாசத்தின் மத்தியில் வெளியிடுகின்றனர் என்பது ஒவ்வொரு எழுத்திலும் புலனாகின்றது.


“நாங்கள் பெரும் இலக்கியப் பணிக்கெனப் புறப்பட்டவர்களல்ல. இலக்கிய வானில் அதி உயர்தொலைவிற்குச் சென்று சாதனைகள் நிகழ்த்த நாம் வரவில்லை. அந்த அளவுக்கு நாம் விற்பன்னர்களுமல்ல” என்ற அடக்கமான ஆசிரிய தலையங்கம் ஒளி வெளியீட்டாளர்களின் தன்னடக்கமான பணியை நிரூபிக்கின்றது. காலாண்டுச் சஞ்சிகையாக வெளிவரும் ஒளியின் அடுத்த இதழ் ஓராண்டு மலராக வெளிவரும்போது மேலும் பல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

14. 10. 1984 வீரகேசரி வாரவெளியீடு ‘இலக்கியச் செய்திகள்’ பகுதியில்:

ஓளிக்கல்லூரியின் ஒளி

‘ஆகுக ஆக்குக’ என்ற குறிக்கோளுடன் கிழக்கிலங்கையின் கொக்கட்டிச்சோலையில் முனைக்காட்டிலிருந்து வெளிவரும் ஒளி இதழின் 3வது கதிர் வந்துள்ளது. ஒளியின் முதலிரு கதிர்களும் தட்டச்சு ரோனியோ பிரதிகளாக வெளிவந்தன. மூன்றாவது கதிர் அச்சுப் பிரதியாகவே 40 பக்கங்களுடன் வரத் தொடங்கியதன் மூலம் அதன் அமைப்பு வளர்ச்சியை இனம் காண முடியும். திருநாவுக்கரசு, சாருமதி, செல்வவேல், துரைராசசிங்கம், பரமேஸ்வரன், மகிழை மகேசன், ஆறுமுகம், வரதன், ஏரம்பமூர்த்தி, கணேசலிங்கம் ஆகியோர் எழுதியுள்ளனர். சில கவிதைகளும் பிரசுரமாகியுள்ளன. 

ஓளி இதழ் விலை 4 ரூபா. பெற விரும்புவோர், மேலும் தகவல் அறிய விரும்புவோர் ஓளிக்கல்லூரி, முனைக்காடு, கொக்கட்டிச்சோலை என்னும் முகவரியுடன் தொடர்பு கொள்ளலாம். 

23.12.1984 மித்திரன் வாரமலர் ‘முத்துக் குளியல்’ பகுதியில்:

முனைக்காடு ஒளிக்கல்லூரியிலிருந்து வெளிவரும் காலாண்டுச் சஞ்சிகை ஒளி. முதல் ஆறு மாதத்துக்கான இரண்;டு இதழ்களும் தட்டச்சு றோனியோ பிரதிகளாகவும் மூன்றாவது இதழ் அச்சுப் பிரதியாகவும் வெளிவந்துள்ளன.

ஓளியை வெளியிடும் ஒளிக்கல்லூரியின் சேவைகள் பன்முகப்பட்டவை. தேவையுள்ள இடத்துக்குச் சேவைபுரியும் கடமைப்பாடுள்ள இந்நிறுவனம் தன் பணிகளை ஒரு பிரதேச எல்லைக்குள்ளேயே ஆற்றி வருகின்றது. அதன் சேவைகளில் ஒன்றாகவே ஒளி வெளியீடும் இருப்பதால் பிரதேசப் பார்வை கூடுதலாக இருக்கலாம் என்று ஆசிரியர் தலையங்கம் கூறுகின்றது. 

ஓளியின் இலக்கிய இலக்குகளைப் பின்வருமாறு வகைப்படுத்திக் காணமுடிகிறது. 

1. படுவான்கரைப் பகுதியில் இலக்கிய எழுச்சியை ஏற்படுத்தல் 
2. தமிழ் இலக்கியப் பரப்பில் படுவான்கரைப் பிரதேசத்தின் தனித்துவங்களைப் பதித்தல்.

3. படுவான்கரைப் பிரதேசத்தின் சமூகத்துறை அபிவிருத்திகளுக்கு இலக்கியத்தையும் ஒரு  சாதனமாக்குதல் 
இவைகளிலிருந்து ஒளி சஞ்சிகையின் தனித்துவம் புலப்படுகிறது.

12.3.1985 வீரகேசரி வாரவெளியீடு ‘இலக்கியச் செய்திகள்’ பகுதியில்:
‘ஓளி’ 4 ஆவது இதழ்

எங்கும் சோகக் குரல்களும் ஏக்கப் பெருமூச்சுக்களுமாய் இருக்கையில் இலக்கியம் ஒரு கேடா? இப்படிச் சில குரல்கள் கேட்கவும் கூடும். விரக்தியின் விளிம்பில் வேதனையின் வெளிப்பாட்டால் வரும் அக்குரல்களையும் நாம் மதிக்காமலில்லை. ஆனால் இன்றைய நிலையில் நம் எல்லோரையும் உசுப்பி விடுகின்ற அந்தச் சமூகப் பொறுப்புணர்வு எம்மை இந்த வழியில் உந்தித் தள்ளுகிறது- என்று முனைக்காடு கொக்கட்டிச்சோலையின் ஒளிக்கல்லூரியின் இதழான ஒளி தனது 4ஆவது கதிரில் தெரிவிக்கின்றது. 

20.4.1986 வீரகேசரி வாரவெளியீடு ‘இலக்கியப் பலகணி’ பகுதியில்:
‘ஓளி’ 5 ஆவது இதழ்

‘கிராமத்துக்குத் திரும்புங்கள்” என்றார் மகாத்மா காந்தி அடிகள். அவரது வேண்டுகோளில் ஆயிரம் உண்மைகள் பொதிந்துள்ளன. நகரப்புறச் சூழலினால் நிம்மதியிழந்து தவிப்பவர்களின் மனதுக்கு கிராமங்களே இதமளித்துள்ளன. இது அனுபவத்தின் வெளிப்பாடு. கிழக்கிலங்கையின் கொக்கட்டிச்சோலையில் முனைக்காட்டில் அமைந்துள்ள ஒளிக்கல்லூரியின் ‘ஒளி’ சஞ்சிகையின் 5ஆவது இதழைப் படித்தபோது கிராமங்களின் அருமை பெருமையை உணர முடிந்தது. 

‘ஆகுக ஆக்குக’ என்ற குறிக்கோளுடன் வெளிவரும் ஒளி இதழில் மேலும் பல சுவையான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 

ஓளியின் பயணம் 5 இதழ்களோடு தடைப்பட்டு விட்டாலும் அது பதித்த தடங்கள் வரலாற்றுப் பதிவுகளாகி விட்டன. ஒளிக்கல்லூரிக்கும் குறிப்பாக அது தனது இயங்குதளமாகக் கொண்ட முனைக்காடு கிராமத்திற்கும் பெருமை சேர்க்கும் பல்வேறு விடயங்களுள் ‘ஒளி’ பிரதானமானது.

- சி.வரதசீலன்