Header Ads

பாரம்பரியத்துடன் நடைபெற்ற நாகசக்தி கலை மன்றத்தின் பட்டிப்பொங்கல் நிகழ்வு

முனைக்காடு நாகசக்தி கலை மன்றத்தின் ஏற்பாட்டில், இன்று(15) திங்கட்கிழமை மாலை முனைக்காடு ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலய முன்றலில்  பட்டிப்பொங்கல் விழா நடைபெற்றது.



இதன்போது, கோ பூசையும் அதனைத்தொடர்ந்து பட்டிக்காரர்கள் கௌரவிப்பும் நடைபெற்றன. மேலும் பழமையாக படுவான்கரைப்பிரதேசத்திலே வளர்க்கப்பட்டுவந்த மாட்டினங்கள், கோ பூசை, நாட்டு இன மாடுகளினால் கிடைத்த பயன்கள், பட்டிக்காரர்கள் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. அத்துடன் நாட்டார் பாடல்களும் பாடப்பட்டன.



குறித்த பட்டிப்பொங்கல் நிகழ்வில், களியினால் சுவரும், ஓலையினால் கூரையும் வேயப்பட்ட வீடொன்றும் அமைக்கப்பட்டிருந்ததுடன், வீட்டு வாசலில் சிராம்பி, கலப்பை, வண்டிச்சில், மரைக்கால், வேலைக்காரன் கம்பு என பல விவசாயத்திற்காக பயன்படும் உபகரணங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.



கலை மன்றத்தின் தலைவர் ந.சுவாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற, இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ், கலாசார உத்தியோகத்தர் எஸ்.ருபேசன், கிராமசேவை உத்தியோகத்தர் இ.சாந்தலிங்கம், பட்டிக்காரர்கள், ஊர்பெரியார்கள், ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.