கணபதிப்பிள்ளைக்கு கலைத்தீபம் பட்டமும், சமூகமாமணி விருதும் வழங்கி வைப்பு
லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க் ஸ்ரீ லங்கா, இமயம் கலைக்கூடல் மன்றம், இலங்கை தமிழ் எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து அண்மையில் நடாத்திய கலைஞர் கௌரவிப்பு நிகழ்வில் முனைக்காடு கிராமத்தினைச் சேர்ந்த வெள்ளத்தம்பி கணபதிப்பிள்ளைக்கு கலைத்தீபம் பட்டமும், சமூகமாமணி விருதும் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.
மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் உள்ள முனைக்காடு கிராமத்தில் 1957ல் பிறந்த வெள்ளத்தம்பி கணபதிப்பிள்ளை முனைக்காடு பாடசாலையில் கல்வி பயின்றார்.
நாடகம், நாட்டுக்கூத்து, வசந்தம், கும்மி, கரகம், காவடி ஆட்டம் போன்ற கலைப்பணிகளிலும், பொதுப்பணிகளிலும் ஆர்வம் கொண்டவராக செயற்பட்டார்.
முனைக்காடு கிராமத்தில் ஆடி அரங்கேற்றிய காத்தான்மாரி வசந்தம், கந்தன் வள்ளி கரகம், கந்தன் வள்ளி திருமண காவடிஆட்டம் ஆகியவற்றில் பாடகராகவும், பின்னணிப் பாடகராகவும் செயற்பட்டுள்ளார். 1973 – 1974 ஆண்டு காலப்பகுதிகளில் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட போட்டிகளிலும் பங்கேற்று குறித்த நிகழ்வுகள் முதலிடத்தினைப் பெற்றன.
முனைக்காடு கிராமத்தில் 1975 – 1976 ஆண்டு காலப்பகுதியில் நடிக்கப்பட்ட , திருவிளையாடல், மனைவி அதிசயம், மாப்பிள்ளை பயில்வான் என்னும் நாடகங்களில் ஏமநாதன், வேலைக்காரன் போன்ற பாத்திரங்களை ஏற்றும் நடித்துள்ளார்.
1996ம் ஆண்டு தொடக்கம் 2008ம் ஆண்டு வரை முனைக்காடு ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலய பரிபாலனசபையின் உறுப்பினராகவும், செயலாளராகவும், பொருளாளராகவும், கிராம அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
முனைக்காடு கிராமத்தில் 2012ம் ஆண்டு அரங்கேற்றப்பட்ட பகாசூரன் சண்டை, 2014ல் அரங்கேற்றப்பட்ட பவளக்கொடி, 2015ல் அரங்கேற்றப்பட்ட நச்சுப்பொய்கை, சத்தியவான் சாவித்திரி போன்ற கூத்துக்களின் ஏட்டண்ணாவியாராகவும், பின்ணணி பாடகராகவும் இருந்துள்ளார்.
Post a Comment