முனைக்காடு மண்ணின் ஆளுமை : சிந்தாத்துரை வரதசீலன் - முன்னாள் வடக்கு கிழக்கு மாகாணக் கல்வியமைச்சின் பிரதிக்கல்விப் பணிப்பாளர்
மட்டக்களப்பு முனைக்காட்டைச் சேர்ந்த காலஞ்சென்ற ஆசிரியர் திரு.சிந்தாத்துரை மற்றும் திருமதி.நவமணி சிந்தாத்துரை ஆகியோரின் மகனாக 1957 ஆகஸ்ட் 19ம் திகதி பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை மட்/முனைக்காடு மெதடிஸ்த மிஷன் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை மட்/புனிதமிக்கேல் கல்லூரியிலும் கற்றார். தற்போது முனைக்காடு விவேகானந்தா வித்தியாலயமாகத் திகழும் மட்ஃமுனைக்காடு மெதடிஸ்த மிஷன் பாடசாலையின் ஸ்தாபகத் தலைமை ஆசிரியரான ‘பெரியவாத்தியார்’ என அழைக்கப்பட்ட ஞானமுத்து ஆசிரியர் அவர்கள் இவரது பாட்டனார் ஆவார். ஆங்கில ஆசிரியராகத் தனது பணியை ஆரம்பித்த திரு.வரதசீலன் பலாலி ஆசிரியர் கலாசாலையில் பயிற்சி பெற்று மட்டக்களப்பு, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் ஆசிரியப் பணிபுரிந்தார். அனைத்திலங்கை ரீதியான போட்டிப் பரீட்சையில் சித்திபெற்று இலங்கைகல்வி நிர்வாகசேவைக்குத் தெரிவானார். அதைத் தொடர்ந்து அதிபர், உதவிக்கல்விப் பணிப்பாளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஆகிய பதவிகளை வகித்தார். வடக்கு-கிழக்குமாகாணக் கல்வி அமைச்சில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றும் போது ஜீ. ரீ. இசற் நிறுவனத்தின் அனுசரணையுடன் செயற்படுத்தப்பட்ட ‘ஆசிரியர் சேவைக்காலப் பயிற்சிச் செயற்றிட்டத்தின்’ செயற்றிட்ட அலுவலராகப் பணிபுரிவதற்காக விடுவிக்கப்பட்டார்.
பின்னர் அரசசேவையிலிருந்து விலகி ;சேவ் த சில்ரன்’ எனும் பன்னாட்டு அரசசார்பற்ற நிறுவனத்திலும் தொடர்ந்து யுனிசெவ் நிறுவனத்திலும் கல்வித்துறைசார் பதவிகளிலிருந்து சமூகப் பணியாற்றினார். ‘றூம் டு றீட்’ எனும் அரசசார்பற்ற நிறுவனத்தில் கல்வித்துறைசார் செயற்றிட்டமொன்றின் நிபுணத்துவ ஆலோசகராக மலையகப் பகுதிகளிலும் பணியாற்றியுள்ளார். அதன் பின் யுனிசெவ் நிறுவனத்தின் நிபுணத்துவ ஆலோசகராக ‘இசுறுபாய’ கல்வியமைச்சிலும் பணிபுரிந்துள்ளார். பின்னர் கிழக்கு மாகாணக் கல்வியமைச்சின் முன்பள்ளிக் கல்விப் பணியகத்தின் திருகோணமலை மாவட்டச் செயலாற்றுப் பணிப்பாளராகச் சேவையாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
முனைக்காட்டில் வசித்த காலப்பகுதியில் பல்வேறு கல்வி கலாசார அமைப்புகள் மூலம் சமூகப் பணியாற்றியுள்ளார். பேராசிரியர் மா. செல்வராசாஅவர்களால் நிறுவப்பட்ட ‘ஒளிக்கல்லூரி’யின் தாபக உறுப்பினர்களில் ஒருவராக இருந்துள்ளதுடன் அதன் அதிபராகவும் சிலகாலம் பணிபுரிந்துள்ளார். ஒளிக்கல்லூரியால் வெளியிடப்பட்ட ‘ஒளி’ எனும் கலை, இலக்கியச் சிற்றேட்டின் ஆசிரியராக இருந்து தொடர்ந்து ஐந்து இதழ்கள் வெளிவரச் செய்துள்ளார். 80 களில் படுவான்கரை மண்ணிலிருந்து மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சி அக்காலப்பகுதியில் பலராலும் பாராட்டப்பட்டதுடன் இம்மண்ணின் பெருமைகளை வெளிப்படுத்துவதாகவும் இருந்தது. 1986 தொடக்கம் 1990 வரை முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் பிரதி அதிபராகவும் தொடர்ந்து அதிபராகவும் பணிபுரிந்த இவரது மாணவர்கள் பலர் இன்று படுவான்கரைப் பிரதேசத்தின் முக்கிய பிரமுகர்களாகவும் அரசபதவிகளை வகிப்போராகவும் உள்ளனர். பாடசாலையிலும் கூட தமிழிலும் ஆங்கிலத்திலும் நாடகங்களைப் பயிற்றுவித்து மாணவர்களின் ஆளுமை விருத்திக்கு அரும்பணியாற்றியுள்ளார்.
70 – 80 காலப் பகுதிகளில் முனைக்காட்டில் இயங்கிய கலைக்கதிர் கலாமன்றத்திலும் உறுப்பினராக இருந்து நாடகம் மற்றும் நாட்டுக் கூத்துத் துறைகளிலும் ஈடுபாடு கொண்டு உழைத்துள்ளார். இவர் பங்குபற்றிய ‘இந்திராணியின் இலங்கைக் காதல்’ என்ற கூத்துபற்றி இன்றும் ஊரில் பேசப்பட்டு வருகின்றது. அக்காலத்தில் கலைக்கதிர் கலாமன்றம் வசந்தன் ஆட்டத்தை மாவட்ட மட்டத்தில் பிரபலப்படுத்திப் புகழ் பெற்றது. எழுபதுகளில் மட்டக்களப்பில் நடைபெற்ற பிரதேசத் தமிழாராய்ச்சி மாநாட்டில் முனைக்காடு கலைக்கதிர் கலாமன்றத்தின் வசந்தன் ஆடல் மேடையேற்றப்பட்டது. அவ்வாறே 1978இல் ஜனாதிபதி பதவியேற்பை முன்னிட்டு கண்டியில் இடம்பெற்ற விசேட பெரகராவில் மட்டக்களப்பின் பாரம்பரியகலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலைக்கதிர் கலாமன்றத்தின் வசந்தன் ஆடல் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும். இந்நிகழ்வுகளிலும் திரு. வரதசீலன் அவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
1982 இல் முனைக்காட்டில் பாரதி நூற்றாண்டு விழா பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. ஒளிக்கல்லூரியினால் நடத்தப்பட்ட இவ்விழாவில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. நாடகம், வழக்காடு மன்றம், கவியரங்கம், உரைச்சித்திரம் போன்ற பல்வேறு நிகழ்வுகளுக்கூடாக பாரதியைப் பற்றி மாணவர்கள் பல்வேறு கோணங்களில் கற்றறிந்துகொள்ளச் சந்தர்ப்பம் கிடைத்தது. அதே ஆண்டில் தமிழ் நாட்டில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் மட்டக்களப்பிலிருந்து சென்று கலந்து கொண்ட காலஞ்சென்றவித்துவான் எவ். எக்ஸ். சி. நடராஜா மற்றும் அருட்தந்தை ஜோசப் மேரி அடிகளார் ஆகியோரை வரவேற்று முனைக்காட்டில் ஒருகருத்தரங்கை நடத்தி அவர்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளச் செய்வதில் முன்னின்று உழைத்தார்.
மெதடிஸ்த திருச்சபையைப் பொறுத்தவரையில் பலமட்டங்களில் பணிபுரிந்த அனுபவம் இவருக்குண்டு. வடக்கு-கிழக்கு திருமாவட்ட அவையில் ஞாயிறு பாடசாலைகளுக்குப் பொறுப்பான செயலாளராகவும் மாவட்ட அவையின் உதவிச் செயலாளராகவும் கடமைபுரிந்துள்ளார். 1989 முதல் கொழும்பில் நடைபெறும் அநேகமானஅனைத்திலங்கை திருப்பேரவைக் கூட்டத்தொடர்களில் பங்குபற்றியுள்ளார். 2015இல் திருப்பேரவையின் உதவிச் செயலாளராகவும் இருந்துள்ளார்.
திருகோணமலை நிலாவெளியைச் சேர்ந்தகாலஞ்சென்ற திரு,திருமதிவேல் முருகு ஆசிரியர் தம்பதிகளின் மகளான இவரது மனைவி சுகந்தினி வரதசீலன் அவர்கள் தற்போது கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றுகின்றார். இலங்கைமெதடிஸ்த திருச்சபையின் வடக்கு-கிழக்கு திரு மாவட்ட அவையின் முன்னாள் தலைவர் அருட்திரு. எஸ்.டி. தயாசீலன் அவர்களின் இளைய சகோதரர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் 175 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 1989 இல் இவரால் எழுதப்பட்ட கட்டுரைகள் தினபதி, தினகரன் ஆகிய தேசிய தமிழ் நாளேடுகளிலும் 200ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு எழுதப்பட்ட கட்டுரை 2014 இல் வீரகேசரியிலும் பிரசுரமாகியுள்ளன.
இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் பொதுநிலையினருக்கு வழங்கப்படும் அதியுயர் கௌரவமான உபதலைவர் நியமனத்தையும் பெற்றுக்கொண்டார். மதகுரு அல்லாத பொதுநிலையினர் ஒருவருக்கு இலங்கை மெதடிஸ்த திருச்சபையில் கிடைக்கின்ற அதியுயர் கௌரவம் இதுவாகும். இலங்கை முழுவதிலுமுள்ள மெதடிஸ்த சபைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 350 இற்குமேற்பட்ட பிரதிநிதிகள் பங்குபற்றும் திருப்பேரவை மாநாட்டில் ஆண்டுதோறும் அடுத்த ஆண்டுக்கான உபதலைவர் தெரிவு சனநாயகரீதியில் வாக்கெடுப்பு மூலம் நடைபெறும். அதற்கமைய கடந்த 2015 ஆகஸ்டில் நடைபெற்ற மாநாட்டில் 2016 – 17 காலப்பகுதிக்கான உபதலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட இவர் ஒருவருடகாலத்திற்குப் பதவிவகித்தார். அக்காலப் பகுதியில் வடக்குகிழக்கில் மட்டுமன்றி இலங்கையின் ஏனைய பகுதிகளிலுள்ள மெதடிஸ்த திருச்சபைகளும் இவரை அழைத்து வரவேற்றுக் கௌரவித்தன.
முனைக்காடு மண்ணின் மைந்தனாக பிறந்து அளப்பரிய சேவையாற்றிக்கொண்டிருக்கும் வரதசீலன் அவர்களை வாழும் போதே வாழ்த்தி அவரின் சேவை சிறக்க பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது முனைமண்.
Post a Comment