பாரதியை நிறுத்தி வழக்காடு மன்றம் நடாத்திய ஒளிக்கல்லூரி
1982 இல் பாரதி நூற்றாண்டு விழா உலகமெங்கும் தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டது. படுவான்கரைப் பிரதேசத்திலும் ஒளிக்கல்லூரியினரால் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
அக்காலத்தில் கல்வி பயின்ற மாணவர்களைத் தனியே ஏட்டுக்கல்வியுடன் மட்டுப்படுத்தி விடாமல் பல்துறை ஆளுமை கொண்டவர்களாய் வளர்த்தெடுக்கும் உயரிய நோக்குடன் செயற்பட்ட ஒளிக்கல்லூரி இவ்விழாவின் வழியாகவும் மாணவர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கியது.
இவ்விழாவை முன்னிட்டு பேச்சு, கட்டுரை, கவிதை மற்றும் தனிநடிப்பு போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு இறுதி நாள் நிகழ்வின்போது முதலிடம் பெற்ற நிகழ்ச்சிகள் மேடையேற்றப்பட்டுப் பரிசளிப்பும் இடம்பெற்றது.
கவிதைப்போட்டிக்கு வழங்கப்பட்ட தலைப்பு ‘பாரதி படுவான்கரைக்கு வந்தால்’ என்பதாக ஞாபகம். இதில் பாடப்பட்ட கவிதைகள் சபையில் பெரும் வரவேற்பைப் பெற்றன.
வித்தியாசமான வழக்காடுமன்றம் ஒன்றும் இவ்விழாவில் இடம்பெற்றது. பாரதியைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி இருதரப்பு வழக்குரைஞர்கள் வாதிட்டனர். தலைப்பு “பாரதியின் முரண்பாடுகள்”. உதாரணமாக “ஜாதிகள் இல்லையடி பாப்பா” என்று பாடும் பாரதி இன்னொரு இடத்தில் “ஆயிரம் உண்டிங்கு ஜாதி, எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி?” என்றும் பாடுகிறான். இத்தகைய முரண்பாடுகள் வாதிகளால் முன்வைக்கப்பட, பிரதிவாதிகள் அவற்றை வெட்டிப்பேசினர். பாரதியாராக வேடமிட்டு குற்றக்கூண்டில் நின்றவர் கோ.துரைராசசிங்கம் (பொறியியலாளர்) அவர்கள். வழக்குரைஞர்களில் ஒருவராக வந்து திறம்பட வாதிட்டவர் அமரர் திரு. செ. ரவிநாதன் அவர்கள். ஏனையவர்கள் பற்றி நினைவுக்கு வரவில்லையெனினும் எல்லோரும் சிறப்பாகவே செயற்பட்டனர்.
விழாவில் பலரையும் கவர்ந்த இன்னுமொரு அம்சம் “இது ஒரு தொடர்கதை” எனும் நாடகம், அரசியல்வாதிகளால் படுவான்கரைப் பிரதேச மக்கள் ஏமாற்றப்படுவதையும் அதை உணர்ந்து செயற்பட ஆரம்பிக்கும்போது அடுத்த தேர்தல் வந்து விட மீண்டும் கட்சிகளின் பின்னால் கொடி பிடித்துக் கூச்சலிட்டுத் திரிவதையும் கருப்பொருளாகக் கொண்டமைந்த நாடகம் இது. ஆரம்பத்தில் இரண்டு கட்சி ஆதரவாளர்கள் கொடி பிடித்து வருவர். ஒரு கட்சியின் சின்னம் ‘தும்புக்கட்டு’. மற்றது ‘செருப்புக்கூட்டம்’. தொடர்ந்து மோதல்கள். தேர்தல் முடிந்நதும் ஐயாவைத் தேடிப் போனால் கணக்கெடுக்க மாட்டார். எனவே விரக்தி ஏமாற்றம். இனி இவர்கள் பின்னால் போவதில்லையெனத் தீர்மானம். பின்னர் அடுத்த தேர்தலுக்கான அறிவிப்பு. மீண்டும் உணர்;ச்சிக் கோஷங்கள். எனவே ‘இது ஒரு தொடர்கதை என நாடகம் முடியும். பாரதி நூற்றாண்டு என்பதால் பின்னணியில் ஒலிக்கும் பாடல்களனைத்தும் பாரதி பாடல்களே. உதாரணமாகத் தலைவர் நடந்துவரும்போது “ஒளி படைத்த கண்ணினாய் வா வா”. அது போன்று “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்” போன்ற பல பாடல்கள் காட்சிகளுக்குப் பொருத்தமாகப் பின்னணியில் பாடப்பட்டன. தவைராகத் திரு.ந. கணேசலிங்கம் சிறப்பாக நடித்தார். திரு.கோ.துரைராசசிங்கம், திரு.மா.குமாரசாமி, திரு அழகு குணசீலன், திரு. பா.ஏரம்பமூர்த்தி, திரு ந. தயாசீலன் ஆகியோர் உட்பட அனைவரும் பெரும் பங்களிப்புச் செய்தனர்.பாரதியைத் தயாரித்துப் பின்னணியில் பாடல்கள் பாடி இயக்கும்பொறுப்பை நான் ஏற்றிருந்தேன். எனினும் அனைத்திலும் அனைவரும் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கிக் கூட்டாகச் செயற்பட்டோம்.
விழா மேடை இராமக்கிருஷ்ணா விளையாட்டுக் கழக கரப்பந்தாட்ட மைதானத்தில் அமைக்கப்பட்டது. அது தற்போது பாடசாலையின் தென்புறக் கட்டிடங்கள் அமைந்துள்ள காணி ஆகும். நாட்டுப் பிரச்சினைகள் தீவிரமடையும் முன்பு இருந்த அமைதிச் சூழலில் சிறப்பாக இடம்பெற்ற இவ்விழா வரலாற்றில் பதிவுசெய்யப்பட வேண்டியதாகும்.
அனுபவப்பகிர்வு : சி.வரதசீலன்




Post a Comment