Header Ads

1960களில் இயற்றப்பட்ட ‘எங்கள் முனைக்காடு’ கும்மி


1960ம் ஆண்டுகளில் சிந்தாந்துரை ஆசிரியரால் எங்கள் முனைக்காடு எனும் தலைப்பில் கும்மிப் பாடல்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. இவர் முருகேசபிள்ளை உடையாரின் மகனாக 1918 தை 18இல் பிறந்தார். தமிழ் மொழி மூலம் கல்வி வழங்கிய மட்ஃஅரசடி மெதடிஸ்த மிஷன் வித்தியாலயமத்தில் கல்வி பயின்று,  பின்னர் மிஷன் ஆசிரியராக நியமனம் பெற்றார். தம்பிலுவில், குறுமண்வெளி, கொத்தியாபுலை ஆகிய இடங்களில் ஆசிரியப் பணியில் ஈடுபட்டதுடன், தனது சொந்த கிராமமான முனைக்காடு கிராமத்திலும் நீண்டகாலமாக ஆசிரியராக பணியாற்றி 1973 இல் ஓய்வுபெற்றார். 

வசந்தன், கும்மி பழக்குவதிலும், வாசிப்பிலும் ஆர்வம் செலுத்திய இவர். கிறிஸ்தவ வசந்தன் பாடல்கள், இயேசு பிறப்பு, வடமோடி கூத்து. போன்றவற்றை எழுதியுள்ளார்.  இதன் பிரதிகள் தற்போது கிடைக்கப்பெறாமை துரதிஸ்ட வசமே. 

இவரது தந்தையான முருகேசபிள்ளை உடையார் முனைக்காடு பாடசாலைக்கான காணியை மெதடிஸ்த மிஷனுக்கு அன்பளிப்பு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் மூத்த சகோதரர் முன்னாள் கிராமத் தலைவர் வாலசிங்கம் விதானையார் என்பதுடன், முனைக்காடு பாடசாலையின் ஸ்தாபக அதிபர் ஞானமுத்து இவரது தாய் மாமன். மணந்ததும் அவரது மகளையே. அதன் பின்னரும் பாடசாலையுடன் நெருங்கிப் பழகி உதவினார் என்பதுடன், இவரின் 33 ஆண்டு நினைவு தினம் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது.



எங்கள் முனைக்காடு 

தின திந்தின்னோ தின திந்தின்னோ 

தின திந்தின்னோ தின்னோ தின்னானோ 

தின்னோ தினனோ தின திந்தின்னோ 

மண்முனை தென்மேற்காக மும்மைல் தூரத்தில் 

செந்நெல் விளைநிலங்கள் பல சூழ்ந்ததெங்கள் நாடு 

தெங்கு பலா வாழையொடு தேமாவின் கனியும் 

எங்குமுயர் தேனுமுள தெங்கள் முனைக்காடு 

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் 

தொழுதுண்டு பின்செல்வார் என்று முன்னோர் சொன்ன 

பழுதில்லா உழவு தொழில் எங்கள் தொழி லாகும் 

பாரினுக்கே உணவூட்டும் பைந்தமிழர் நாங்கள் 

இந்து மதம் எங்கள் மதம் இயேசு மத முண்டு 

முந்து தமிழ் எங்கள் மொழி முறையுடனே கற்போம் 

வித்தை பல கற்றிடவே விளங்கு கலா சாலை 

வேண்டு முயர் அறிவு பெற விரும்பிடு நூற் சாலை 

ஐங்கரனார் கோவில் களும் ஆன மக மாரி 

அம்மையொடு கண்ணகியின் ஆலயமும் உண்டு.

 

தான்தோன்றீஸ்வரர் திருவிழாக் காட்சி 

தந்தனத  தானானா – தனந்தன 

தந்தனத தானானா தந்தனத் தானானா – தனந்தன 

தந்தனத தானானா 

வன்னப் பசுங்கிளிகாள் - அழகுள்ள 

மாமயில் காள் வருவீர் 

பொன்னின் கரங்குவித்தே – பரமனைப் 

போற்றிடவே வருவீர் 

கொக்கட்டிச் சோலை தன்னில் - குருபரன் 

கோவில் கொண்டே யிருந்து 

இக்கட்டெல்லாம் தீர்க்கும் - மகிமையை 

என்னென் றுரைத்திடுவேன் 

காவடி ஆட்டங்களும் - ஒளிதரு 

கற்பூர தீபங்களும் 

தேவடியார் நடமும் - நமக்கே 

தேடரும் காட்சியடி 

அம்மை உமையவளும் - அரனிடப் 

பாகம தாகவேதான் 

செம்மையு டனேதிருச் - சப்ரமதில் 

சென்றிடல் காண்போமடி 

(காலஞ்சென்ற மு.சிந்தாத்துரை ஆசிரியர் அவர்களால் 1960களில் இயற்றப்பட்ட கும்மிப்பாடல்கள்)



கருத்துகள் இல்லை