Header Ads

முனைக்காடு பாடசாலையின் உருவாக்கத்திற்கு வித்திட்ட தலைமை வாத்தியார் ஞானமுத்து நினைவு நாள்


மீன்மகள் பாடுகின்ற மட்டக்களப்பு மாவட்டத்தில் பரந்து விரிந்த பகுதிதான் படுவான்கரைப்பிரதேசம். அப்பிரதேசத்தில் உள்ள பழமையான கிராமங்களில் முனைக்காடு கிராமமும் ஒன்று. இக்கிராமத்தைச் சேர்ந்த பலர் கல்வி, அரசியல், விவசாயம் போன்ற துறைகளில் இலக்கணபுருசர்களாக இருந்திருக்கின்றமையும் வரலாறு. படுவான்கரைப்பிரதேசத்தினை கல்வியின் ஊடாக எழுச்சியடைய செய்ய வேண்டும் என்பதை நோக்காக கொண்டு இக்கிராமத்தவர்கள் செயற்பட்டவர்கள் என்பதற்கு ஒளிக்கல்லூரி அமைப்பு தக்கசான்றாகும். 

இவ்வாறானதொரு கிராமத்தில் பிறந்து வளர்ந்து கல்விக்காக பங்காற்றிய அமரர் சி.சா.ஞானமுத்து நினைவுகூரப்பட வேண்டியவர். இவர் மரணித்து 48வருடங்கள் நிறைவுபெற்றாலும், அவர் வித்திட்ட கல்விக்கூடம் இன்றும் உயர்ச்சியோடு நிமிர்ந்து நிற்கிறது. 

12.03 .1888 இல் பிறந்த இவர் 01 .02 . 1973  அன்று இயற்கையெய்தினார். அவர் வாழ்ந்த 85வருடங்களில் கல்விக்காக ஆற்றிய பணி அளப்பெரியதொன்றே. தற்போதுள்ள முனைக்காடு விவேகானந்த வித்தியாலயம் 1923இல் மெதடிஸ்த மிசன் பாடசாலை என்ற நாமத்துடனே உருவாக்கப்பட்டது. இதன் அதிபராக  செயற்பட்டவர்தான் சி.சா.ஞானமுத்து. ஆரம்பத்தில் ஆரம்பக்கல்வி புகட்டும் பாடசாலையாகவே இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில்  இப்பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்தும், வெளிப்பிரதேசங்களில் இருந்தும் வருகைதந்து இப்பாடசாலையில் தங்கியிருந்து பலர் கல்வி கற்றும் உள்ளமையை அறியமுடிகின்றது. இதற்கு வித்திட்டவராக ஸ்தாபக தலைமை ஆசிரியர் செயற்பட்டமையும் நினைவுகூரப்பட வேண்டியதே. 


இவரின் நினைவாக பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள கட்டிடம் ஒன்றிற்கு ஞானமுத்து மண்டபம் என்ற நாமம் பொறிக்கப்பட்டுள்ளது. படுவான்கரையில் இருந்து கச்சேரி வரைக்கும் நீர்மூலமான போக்குவரத்து நிலவிய காலத்தில் முனைக்காடு கிராமத்தில் இருந்த பலரை உயர்கல்விகளை தொடர்வதற்காக மட்டக்களப்பு நகரில் காணப்பட்ட பாடசாலையிலும், கல்முனைப் பாடசாலையிலும் மாணவர்களை கற்பதற்கு வழிப்படுத்துவதிலும், இணைப்பதிலும் ஆர்வம் காட்டினார். இதன்பயனாக கல்வித்துறையில் இக்கிராமத்தினைச்சேர்ந்த பலர் முன்னேறினர். 

அமரர் ஞானமுத்து மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் மெதடிஸ்த திருச்சபை உருவாவதற்கு காரணமாகவும் இருந்துள்ளார்.  மகிழடித்தீவு சந்தியிலுள்ள மெதடிஸ்த தேவாலயம் இவரால் நிறுவப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.  'பெரிய வாத்தியார்' எனப் பிரதேச மக்களால் அழைக்கப்பட்ட இவர், நாடகத்துறையிலும் ஆர்வம் காட்டினார். இதற்கு சான்றாக அவரால் 1930களில் பழக்கப்பட்ட கிருஸ்ணா லீலா என்ற நாடகம் விளங்குகின்றது. கல்வி, கலை போன்ற துறைகளில் அதிக பங்களிப்பு செய்த ஞானமுத்து அவர்களை நினைவுகூருவதில் முனைமண் பெருமை கொள்கிறது.


- வ..துசாந்தன் - 


கருத்துகள் இல்லை