ஒரு ஓலைப் பள்ளியில் இருந்து கொழும்பு பல்கலைக்கழகம் வந்த கதை.
ஒரு ஓலைப் பள்ளியில் இருந்து கொழும்பு பல்கலைக்கழகம் வந்த கதை.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மருதநிலம் என வருணிக்கப்பபடும் படுவான்கரைப் பெருநிலப்பபரப்பில் முதுபெரும் கிராமம் முனைக்ககாடு எங்கள் சொந்த ஊர். அதிலிருந்த பாடசாலையின் அப்போதைய நாமம் “முனைக்காடு மெதடிஸ்த மிஸன் தமிழ்க் கலவன் பாடசாலை” இன்றும் எனது பாடசாலை விடுகைப்பத்திரத்தில் இதே பெயர்தான் உள்ளது. அதில் இரண்டு சீமெந்துக் கட்டடங்களும் ஒரு ஓலைப்பள்ளியும் தான் இருந்தது. அப்போது தரம் 5 வரை தான் அங்கு கல்வி கற்கமுடியும். அதற்கு மேல் படிப்பதாயின் இங்கிலீஸ் பள்ளி என அழைக்கப்படும் முதலைக்குடா மகாவித்தியாலயத்துக்கு செல்லவேண்டும். அல்லது நகரப் பகுதி பாடசாலைகளை நாடவேண்டும். அதுவே அப்போதைய நிலை.
இன்று எங்கள் ஓலைப்பள்ளி நூற்றாண்டு விழாவுக்குத் தயாராகிறது. எங்கள் இளைஞர் குழாம் மும்முரமாக நூற்றாண்டு விழாவுக்கான கட்டியங்கூறுதலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். என்மனம் சற்று சிறகடித்து 70களின் கடைப்பகுதி மற்றும் 80களின் ஆரம்ப காலப்பகுதிக்கு செல்கிறது.
எங்கள் காலத்தில் நான்கு வாத்தியார்களும் ஒரு ஆசிரியையும் மட்டும் தான் கற்பித்தனர். பெரிய ஐயா என்று அழைக்கப்படும் கனகநாயகம் ஐயா வேட்டியும் நஷனலும் போட்டு வருவார். அவருடைய மேசையும் கதிரையும் மட்டும் ஒரு மேடையிலிருக்கும். அவரைக்கண்டாலே ஒரே நடுக்கம் மேசையில் எப்போதும் ஒரு பிரம்பு யாரையாவது பதம்பார்க்கக் காத்திருக்கும். அவர் இரண்டாம் வகுப்புக்கு வகுப்பாசிரியர். தக்கன பிழைக்கும் என்பது போல அவரிடம் தாக்குப்பிடிக்க முடியாத பலர் ஓடிப்போய் ஒழிந்த சம்பவங்களும் உண்டு.
பாலர் வகுப்புக்கு மட்டுமே ஒரு பெண் ஆசிரியர் இருந்தார். அவர் எல்லோரது உள்ளத்தையும் கொள்ளை கொண்டவர். அவரே பாலர் வகுப்புக்கும் ஆங்கிலப் பாடத்துக்கும் பொறுப்பாசிரியர். மெலிந்த தோற்றம், அழகிய கொண்டைபோட்டு அதற்கும் நெற் போட்டு நீற் அன்ட் கிளீனாக இருப்பார். அவரே தவமணி ரீச்சர்.
மற்றைய மூன்று ஆசிரியர்களும் வெள்ளை வேட்டியும் சேர்ட் உடனும் தான் வலம் வருவர். மயில்வாகனம் ஐயா நல்ல வெள்ளையான தோற்றம் கொண்ட சாந்தமான மனிதர். அவர் மூன்றாம் வகுப்பின் வகுப்பாசிரியர். தேவையான நேரத்தில் கண்டிப்பாகவும் செயற்படத் தவறமாட்டார்.
நான்காம் வகுப்பு கொஞ்சம் வித்தியாசமான அனுபவம். கோபாலபிள்ளை ஐயா வரும்போதே கொஞ்சம் நித்திரைக் கிறக்கத்திலேயே வருவார். இடைக்கிடையே கிடைக்கும் சின்ன இடைவெளிகளிலும் குட்டித்தூக்கம் அடிக்காமல் விடமாட்டார். மிகவும் கண்டிப்பானவர். தயவுதாட்சண்யம் கிடையாது. வீட்டுவேலை செய்யவில்லையா? தேவாரம் பாடமாக்கவில்லையா? சரமாரியாக அடிவிழும். அவருக்குப் பயத்திலேயே நாங்கள் தேவாரம் பாடமக்கிய அனுபவங்கள் உண்டு.
ஞாயிற்றுக் கிழமைகளில் பிள்ளைகள் கத்திரிக்கோலுடன் திரிந்தால் அவர்கள் ஐந்தாம் வகுப்பு என்று அர்த்தம். என்னவோ தெரியாது சிவப்பிரகாசம் ஐயாவுக்கு தூதுவளையிலை, வல்லாரையிலை என்பவற்றில் அலாதிப்பிரியம். எங்கள் வகுப்புப் பிள்ளைகள் எப்படியும் தேடியலைந்து தூதுவளையிலை, வல்லாரையிலையுடன் தான் பள்ளிக்குப் போவோம்.
ஐந்தாம் வகுப்பு என்பது ஒரு முள்வேலியில் நடப்பது போன்றது. அப்போது தமிழில் தேர்ச்சிபெறுவது என்பது தற்போதைய சாதாரண தரப் பரீட்சைக்கு தமிழ் இலக்கணம் படிப்பதற்குச் சமம். இன்றும் தழில் எழுத்துப்பிழை, இலக்கணப் பிழை இல்லாமல் எழுதுகிறோம் என்றால் அதற்கு சிவப்பிரகாசம் ஐயாவே காரணம். ல, ள, ழ உச்சரிப்புக்களின் போது அவரிடம் உள்ள அடித்தடி கைகளைப் பதம் பார்க்கும். ன, ண , ந மற்றும் ர, ற வேறுபாடு தெரியாது விட்டால் அதோ கதிகான். ஐயா அடித்தார் என்று யாரும் வீட்டில் முறையிடுவதும் இல்லை. காரணம் அதைவிடக் கூடுதல் அடி வீட்டில் விழும் என்ற பயமும் தான்.
இன்று எங்கள் பாடசாலை நான்காம் வகுப்பிலிருந்து ஐற்தாம் வகுப்புக்கு தரமுயர்ந்து பின் சாதாரண தரம் எட்டிப்பிடித்து உயர் தரம் வரை ஏறி இன்று தேசிய பாடகாலை என மிளிர்கின்றது. "மெதடிஸ்த மிஸன் பாடசாலை", "விவேகானந்தாவாக" மாறியதன் அல்லது மாற்றியதன் உள்நோக்கம் என் சிற்றறிவுக்கு விளங்காது போனாலும் எங்கள் பாடசாலை அன்னையின் வளர்ச்சியில் நாம் எப்போதும் பெருமிதமடைகிறோம்.
எங்கள் பாடசாலையில் இட்ட அத்திவாரமே கொழும்பு பல்கலைக்கழகம் வரை கொண்டு சென்றது.
எழுத்தறிவித்தவன் இறைவன்! எங்கள் ஆசிரியப் பெருந்தகைள் என்றும் எங்களில் வாழ்வர்!
#மங்களேஸ்வரி




Post a Comment