Header Ads

முனைக்காடு கிராமமும் விளையாட்டும்

பா. இன்பராசா
சிரேஷ்ட ஊடகவியலாளர்
முனைக்காட்டின் விளையாட்டு வளர்ச்சி -வரலாற்றுப்  பாதையை இரு கட்டங்களாகப்பிரித்து நோக்குவது பொருத்தமானது.

1. முனைக்காட்டின் கிராமிய விளையாட்டு பாரம்பரியம்.

2. முனைக்காட்டின் நவீன விளையாட்டு 

அறிமுக தொடர்ச்சி.

சுதேசிய கிராமிய விளையாட்டு பாரம்பரியம்.!

ஏறக்குறைய 1960 வரையான காலப்பகுதியில் முனைக்காட்டின் அன்றைய  மெதடிஸ்த மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையின் வகுப்பறைக்கல்விக்கு வெளியே கிராமிய விளையாட்டுக்களே எங்களுக்கு தெரிந்தவையாகவும், வாழ்வியல் சுற்றாடல் சூழலுக்கு பொருத்தமானவையாகவும் இருந்தன. பிள்ளையார்கட்டை,  தட்டுக்கோடு - கிளித்தட்டு, உத்துக்கம்பு, சில்லடித்தல்- குவியல் எறிதல், காடுகளுக்குள் கள்ளன் -பொலிஸ் விளையாட்டு, வாவியில் குளித்தல் , வார் ஃ பார் விளையாட்டு, நொண்டியடித்தல், வட்டத்தாச்சி, ..புத்தம்புதிய... இப்படி பலவற்றைக்குறிப்பிட  முடியும்.

 “மாலை முழுவதும் விளையாட்டு....” 

என்ற பாரதியின் கனவுகளை நனவாக்கிய காலம் அது. உப்புக்கரைச்சையும், குளவெளிகளும், வயல்வரவைகளும், வீதிகளும், பாழ் வளவுகளும் , கோயில்வளவுகளும் எங்கள் மைதானங்கள்.

ஈச்சங்காடு, காயாங்காடு,சவக்காலை வெம்புமணல்காடுகளில் விளையாடும் போது காட்டுப்பழங்கள், காய்கள், கிழங்குகள் எங்கள் இடைவேளை உணவுகள். நாவல்பழம்(நாவல்) கொடிப்பழம்(சிவப்பு) மருங்கைப்பழம்  (வெள்ளை) ஈச்சம்பழம்( கருஞ்சிவப்பு) போன்றவை நினைவில் நிற்கின்றன. இன்றைய இளம்சந்ததி இந்தப் பழங்கள் பற்றி அறிந்திருக்கிறதா ....? இன்று முனைக்காட்டின் பெயரில்தான் “ காடு” இருக்கிறது ஊரில் இல்லை. 

காடுகள் இருந்த இடங்களில் “கட்டிடக்காடு” முளைத்து இருக்கிறது. இந்த சுதேசிய விளையாட்டுகளை நாங்கள் கழகங்கள் அமைத்து விளையாடிய வர்கள் அல்ல . அதாவது ஒழுங்கமைக்கப்படாத  நிறுவனமயப்படுத்தாத இயல்பான செயற் பாடுகள். பின்னேரங்களில் சுயவிருப்பில் சந்திக்கு , கோயிலடிக்கு வருபவர்கள் ஒன்று சேர்ந்து குழுக்களாகப் பிரிந்து விளையாடிய அலாதியான காலம் அது. பெற்றோர்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடும் மேசை/தரை விளையாட்டுக்களை அறிந்து இருக்கவில்லை. இதன் முக்கியத்துவம் உணர்ந்து நேரம் ஒதுக்கும் நிலையிலும் அவர்கள் இருக்கவில்லை. கடதாசி  விளையாடுவது சூதாட்டம் ஆகக் கருதப்பட்டது. மரண வீடுகளிலும், மற்றும் ஓய்வு நேரங்களிலும் வளர்ந்தவர்கள் மட்டும் விளையாடினார்கள்.

அதற்காக விளையாட்டு ஒழுங்குகள் அற்று, விளையாட்டிற்கான விதிமுறைகள் அற்று விளையாடினோம் என்று அர்த்தப்படாது. எழுத்தில் இல்லாத மரபு ரீதியாக பேணப்பட்டு வந்த ஒழுங்கு விதிமுறைகளாக அவை இருந்தன. இவற்றை மூத்தவர்களிடம் இருந்து இளையவர்கள் அனுபவம் ஊடாக கற்றுக் கொண்டார்கள். 

“நீ விளையாடினால் பாடங்களை நன்கு கற்க முடியும்” என்று எந்தப் பெற்றோரும் ஏன் ஆசிரியர்கள் கூட எங்களுக்கு சொல்லித்தரவில்லை. பெற்றோர்கள் எழுதுவதற்கு, கூட்டல், கழித்தல் கணக்கு செய்வதற்கு வரையறுக்கப்பட்ட வகையில் அவர்களின்  தகுதிக்கேற்ப உதவினார்கள் என்று சொல்லலாம். ஆனால் இந்த வாய்ப்பு பெரும்பாலானவர்களுக்கு கிடைத்திருக்க வாய்ப்பில்லை. உடற்பயிற்சி நேர பாடசாலை அட்டவணையில் இடம்பெற்ற போதும் அதன் முக்கியத்துவம் உணரப்படவில்லை.மாறாக “ இவன் விளையாடித்திரிகிறான் படிக்கிறான் இல்லை” என்றுதான் திட்டினார்கள். 

இந்த நிலையில் தான் ஆசிரியர்களும் இருந்தார்கள் என்று சொல்லமுடியும். வயல் , வீட்டுத்தோட்டம், சிறிய கைவேலைகள், வீட்டுவேலைகளில் பிள்ளைகள் ஈடுபடுவதை பெற்றோர்கள் விரும்பினார்கள். பள்ளிக்கு செல்லாது இந்த வேலைகளைச் செய்விப்பது பெற்றோர்களுக்கு பிரச்சினையாக இருக்கவில்லை. இது விதைப்பு, வெட்டுக்காலங்களில் அதிகமாக இருந்தது. கோடைகால பாடசாலை விடுமுறையை “வேளாண்மை வெட்டு விடுமுறை” என்றே அழைக்கப்பட்டது.

முனைக்காட்டில் நவீன விளையாட்டு அறிமுகம்

முனைக்காடு மெதடிஸ்த மிஷன் பாடசாலையின் பழையமாணவர்கள் க.பொ.த. சாதாரண/உயர்தர கற்கையை நகரப்பாடசாலைகளில் முடித்து ஊருக்கு திரும்பியிருந்த காலம். அப்போது அவர்களின் சிந்தனையில் பிறந்ததே முனைக்காட்டின் நிறுவனமயப்படுத்தப்பட்டதும், ஒழுங்கமைக்கப்பட்டதுமான முதலாவது விளையாட்டுக்கழகம். பெயர் என்ன தெரியுமா? “லூதர் கிங்”.! 1968 ஏப்ரல் நான்காம் திகதி அமெரிக்க கறுப்பின மக்களின் தலைவர் மார்ட்டின் லூதர்கிங் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி காட்டுத் தீயாக பரவிக்கொண்டிருந்தவேளை. முனைக்காடு இளைஞர்கள் 1968 ஏப்ரல் ஐந்தாம் திகதி விளையாட்டுக்கழகம் ஒன்றை அமைக்க கூடியிருந்தார்கள். உலகின் கறுப்பின மக்கள் மட்டும் அல்ல இனவாதத்திற்கு எதிரான வெள்ளையர்களும் அதிர்ச்சியிலும், அழுகையிலும்,அச்சத்திலும் மூழ்கியிருந்த நிலையில் உலகவரைபடத்தில் - இந்து சமுத்திரத்தில் ஒரு மூலையில் ஒரு “நீர்த்துளி “வடிவில் கிடந்த இலங்கைத்தீவில் இந்த அதிசயம் நடந்தது. 

மட்டக்களப்பின் - படுவான்கரையின் - முனைக்காட்டின் சில இளைஞர்கள் கூடி மார்ட்டின் லூதர் கிங்கின் மரணச்சடங்கிற்கு முன்னரே அவர் பெயரில் ஒரு விளையாட்டு கழகத்தை அமைத்தார்கள் என்றால் இந்த  சிந்தனையின் அத்திவாரம் எது? அதுதான் முனைக்காடு மெதடிஸ்த மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலை இட்ட கல்விச் சிந்தனை வித்து. இதன் முன்னோடிகள் யார் என்பதை  அறிய இப்பாடசாலையின் நூற்றாண்டு விழா  எமக்கு ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது.  இந்தப் பெயரை சூட்டுவோம் என்று அன்றைய கூட்டத்தில் பா.தணிகாசலம் கூறியது தான் தாமதம் அடுத்த வினாடி அனைவரும் ஏற்றுக்கொண்டனர். ஆபிரிக்க அமெரிக்கர்களுக்கு எதிரான இனவாத அடக்குமுறைக்கும், சமூகநீதியின் மைக்கும், சம உரிமை , மற்றும் சமத்துவமின் மைக்கும் எதிரான போராட்டத்திற்கு உளரீதியாக முனைக்காடு பங்காளியாகி மார்ட்டின் லூதர் கிங்குக்கு செலுத்திய அஞ்சலி இது. 

முனைக்காட்டின் வரலாற்று பதிவு .சமூக நீதிக்கான போராட்ட உணர்வு இந்த மண்ணில் இன்னும் இருக்கிறது. “ “I HAVE A DREAM “ “ என்று மார்ட்டின் லூதர் கிங் கூறிய வார்த்தைகளை முனைக்காடும், அதன் இளைஞர்களும் தங்கள் இதயங்களில் ஏந்தி செயற்பட்ட, செயற்படுகின்ற மகிமை என்பதை உணர்த்துகின்றது. லூதர் கிங் கழகத்தை ஆரம்பித்து முனைக்காட்டில் நவீன விளையாட்டை அறிமுகப்படுத்திய பெருமை இவர்களைச்சாரும். பா.திருநாவுக்கரசு , பா.இன்பராசா, பா.தணிகாசலம், சி.லோகநாயகம், சி.ஜெயசீலன், செ. பாலசுந்தரம். இரண்டு குழுக்களாக ஆடிய  லூதர்கிங்கில் இவர்கள் “A” குழுவைச் சேர்ந்தவர்கள். கப்டன் திருநாவுக்கரசு,உதவி கப்டன் இன்பராசா. ரிசர்வ் வீரர் செ.பாலசுந்தரம். மற்றைய அணியான “B” குழுவின் வீரர்களாக பா.அமரசிங்கம், நா.சிவநேசதுரை,க.சண்முகம்,சி.வாலநாதன், ச.சத்துருக்கப்போடி, சி.கேதாரபிள்ளை , ரிசர்வ் வீரர் க.சிவஞானம். அணிக்கு அமரசிங்கம் கப்டனாகவும் , வாலநாதன் உதவி கப்டனாகவும் இருந்தார்கள்.

பிரதேச, மாவட்ட மட்டத்தில் பல போட்டிகளில் லூதர்கிங் பங்குபற்றியது, பல சுற்றுப்போட்டிகளை ஏற்பாடு செய்து நடாத்தியும் உள்ளது. கொக்கட்டிச்சோலை பிரதேச மட்டப்போட்டி ஒன்றிற்கு அன்றைய பட்டிருப்பு எம்.பி. சோ.உ. தம்பிராசா பிரதம அதிதியாக கலந்து கொண்டார். 

இறுதியாட்டம் முதலைக்குடா - முனைக்காடு கழகங்களுக்கு இடையே இடம்பெற்றது. இறுதியில் முதலைக்குடா இளைஞர்கள் சிலர் நிகழ்வை குழப்பமுயற்சித்ததால் ஒரு புதிய திருப்பம் லூதர்கிங்கில் ஏற்பட்டது.

அன்றைய முனைக்காடு மெதடிஸ்த மிசன் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு முன்னால் இருந்த மு.சிந்தாத்துரை ஆசிரியர் குடும்பத்திற்கு சொந்தமான வளவில் குறுகிய கால அவகாசத்தில் கரப்பந்தாட்டதிடல் அமைக்கப்பட்டது. முனைக்காடு பாடசாலையின் இரண்டாவது அதிபர் ஞானமுத்து ஐயா 1973. 02. 01 ம் திகதி மரணித்தார். அவரின் நினைவாக ஞானமுத்து வெற்றிக்கேடயத்திற்கான மாவட்ட மட்ட கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஒன்றை நடாத்தினோம். இப்போட்டியில் வெளிக்கள ஒழுங்குகளைச் செய்வதில் மா.குமாரசாமி, தா.சிதம்பரபிள்ளை, ச.சிந்தாத்துரை ஆகியோரின் பங்கு குறிப்பிடத்தக்கது. இதற்கான கேடயத்தை ஞானமுத்து குடும்பத்தினர் வழங்கி இருந்தார்கள்.

நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்லடி உப்போடை இராமக்கிருஷ்ணமிஷன் தலைவர் சுவாமி ஜீவானந்தா ஜீ அவர்கள் கலந்து கொண்டார். அப்போதும் முதலைக்குடா இளைஞர்கள் அவரின் வாகனத்தை மறித்து குழப்பம் செய்தார்கள். “இவர்களும் எங்கள் பிள்ளைகள் தான் மகன்” என்று சுவாமி ஜீ சொன்னது எனது காதுகளில் இன்னும் ஒலிக்கிறது.1973 பெப்ரவரி 10 ம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் பா. இன்பராசாவின் ஆலோசனையின் பெயரில் இன்றைக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இன்றைய இராமக் கிருஷ்ண விளையாட்டுக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. இராமக்கிருஷ்ண விளையாட்டுக் கழகம், விவேகானந்தா தேசியக் கல்லூரி, சாரதா வித்தியாலயம்.... இந்த வரிசையில் முனைக்காடு, இராமக்கிருஷ்ணமிஷனுடன் கட்டிப்போடப்பட்டுள்ளது.

இலங்கையில் 1971 ஏப்ரல் கிளர்ச்சி ஏற்பட்டது. திட்டமிடப்பட்டிருந்த சித்திரைப் 

புத்தாண்டு/ வேளாண்மை வெட்டு விடுமுறைக்கு முன்பாக பாடசாலைகள், விடுதிகள் இழுத்து மூடப்பட்டன. நகரப்பாடசாலைகளில் கல்வி கற்ற முனைக்காடு இளைஞர்கள் பெட்டியைக் கட்டிக்கொண்டு ஊர் திரும்பினர். அவசரகாலச் சட்டம்...! ஊரடங்குச் சட்டம்....! இந்தச் சட்டங்கள் எப்போதும் போன்றே அப்போதும் பாதுகாப்பு அகழியாக அமைந்த வாவியால் படுவான்கரையை முழுமையாக எட்டவில்லை - கட்டுப்படுத்தவில்லை . இதன் அர்த்தம் அந்தச் சூழலிலும் விளையாடினோம்.., மாதக்கணக்காக விளையாடித்தீர்த்தோம்.

இந்தச் சூழலில்தான் கரப்பந்தாட்டத்தோடு, முனைக்காட்டில் காற்பந்தாட்டம் விரைவாக இடம்பிடிக்கிறது. எனக்கு நன்றாக நினைவில் நிற்கிறது. கணேசன், சிதம்பரபிள்ளையும், ராஜனும், சாந்தனும் காற்சட்டைப் பையன்களாக காற்றுப்போன பந்தொன்றை தூக்கிக்கொண்டு காற்றடிக்க சைக்கிள் கடைகளைத்தேடி அலைவார்கள். பின்னர் காற்று நிறைத்த பந்தை எடுத்துக் கொண்டு ஆலையடிச் சந்தியில் இருந்து உப்புக்கரைச்சை வரை சென்று அங்குவிளையாடுவார்கள். இந்த பந்துப்பவனி பிள்ளைகளை இலகுவாக கவர்ந்து விளையாட்டுக்கு தேவையானவரகளை இலகுவாக சேர்க்க அவர்களுக்கு உதவியது.

மில்லுக்கார சோமண்ணையின் ஆலையடிச்சந்தி வயல் வேளாண்மை வெட்டி, அடிகட்டைகள் மடிந்தபின்னர் ஆலையடிச்சந்தி பெரிய வரவையில் தான் காற்பந்து விளையாடப்பட்டது. சி.லோகநாயகம், சி.வாலநாதன், மற்றும் விஜயரெட்ணம் ஆகியோரும் இளையவர்களோடு இணைந்து விளையாடுவார்கள். களுவாஞ்சிக்குடி, மண்டூர், பழுகாமம் மற்றும் கொக்கட்டிச்சோலைபிரதேச கிராமங்களுக்கு இடையிலும் போட்டிகளுக்காக சென்றிருக்கிறார்கள். கிரிக்கெட் அவ்வப்போது விளையாடப்பட்டபோதும் கரப்பந்தாட்டம், காற்பந்தாட்டம் போன்று அன்று முனைக்காட்டில் முதன்மை பெற்றிருக்கவில்லை.


கருத்துகள் இல்லை