Header Ads

ஆசிரியர்கள் கற்கண்டைப் போன்றவர்கள் - திரு.க.சத்தியநாதன் (வலயக்கல்வி பணிப்பாளர்)

பொதுவாக ஆசிரியர்களை மூன்று வகையாகப் பிரித்துப்பார்க்கலாம்.
 1.கருங்கல்லை போன்றவர்கள் - கருங்கல் நீருக்குள் எவ்வளவு நேரத்திற்கு ஊறவிட்டாலும் தன்னையும் மாற்றாது நீரையும் மாற்றாது.

2.களிமண்ணைப் போன்றவர்கள். - களிமண் நீருக்குள் அமிழ்த்தி வைத்தால் தானும் கரைந்து நீரையும் குழப்பிவிடும்.


3.கற்கண்டைப் போன்றவர்கள். - கற்கண்டை நீருக்குள் இட்டு வைத்தால் தன்னை கரைத்து நீருக்கு சுவையை கொடுக்கும்.

இதனால் ஆசிரியர்களை கற்கண்டு எனக்கூறமுடியும் என நேற்றைய தினம் முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் நடைபெற்ற ஆசிரியர்தின விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையில் குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில் இந்தப் பாடசாலையில் ஏற்கனவே நிகழ்த்தப்பட்ட சாதனைகளை பார்க்கின்ற போது இங்கிருக்கின்ற ஆசிரியர்கள் 3ம் நிலையில் வைத்துப்பார்க்க முடியும். எனவே இப்படிப்பட்ட ஆசிரியர்களை சந்தோசப்படுத்த இவ்வாறான நிகழ்வுகளை நடாத்தினால் மட்டும் போதாது மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை ஈட்டிக்கொடுக்க வேண்டும். தற்காலத்தில் மாணவர்களை நவீன மாற்றத்திற்கு ஏற்றவகையில் புத்தகத்துடன் மட்டும் வைத்திருக்காமல் புதிய தொழிநுட்பத்துடனான வகையில் தேடி கற்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

பழைய மாணவர் தலைவர் கு.செல்வராச அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிபர் மா.குணேசலிங்கம் உட்பட சகல ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டதுடன் நினைவு சின்னங்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. வலயக்கல்வி பணிப்பாளர் திரு.க.சத்தியநாதன் பிரதம அதிதியாகவும், கோட்டக்கல்வி பணிப்பாளர் ந.தயாசீலன் சிறப்பு அதிதியாகவும்,ஒளிக்கல்லூரி அதிபர் மா.சத்தியநாயகம்,கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள்,கிராம உத்தியோகத்தர்கள், ஆகியோர்கள் கலந்து சிறப்பித்தனர்.
















கருத்துகள் இல்லை