கும்பம்
கள்ளம் கபடமில்லாத பேச்சால் கலங்கி நிற்கும் மனிதர்களை கலகலப்பாக்குபவர்களே! எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாது சந்தர்ப்ப சூழ்நிலையை உணர்ந்து சமயோஜித புத்தியுடன் செயல்படும், நீங்கள் அடங்கி எழுபவர்கள். கடந்த ஓராண்டு காலமாக சகடை வீட்டில் அமர்ந்து ஆறாக்கி, வேறாக்கி உங்களை கூறுபோட்டு பார்த்த குருபகவான் 5.7.2015 முதல் 1.8.2016 வரை உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை நேருக்கு நேர் பார்க்க இருப்பதால் உங்களுக்குள் அடங்கிக் கிடந்த ஆற்றலை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்ப, சூழ்நிலைகள் அமையும். குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் மருந்து, மாத்திரை இனி குறையும். எளிய உடற்பயிற்சி, இயற்கை உணவு மூலமாகவே ஆரோக்யம் கூடும்.
மற்றவர்களை குறை கூறும் போக்கை மாற்றிக் கொள்வீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். குருபகவான் லாப வீட்டை பார்ப்பதால் உங்களின் ஆளுமைத் திறன், நிர்வாகத் திறன் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும்.
மூத்த சகோதர, சகோதரிகளால் ஆதாயம் உண்டு. வேற்று மதத்தவர்களால் நன்மை உண்டு. புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். இயக்கம், சங்கம் இவற்றில் கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
உங்கள் ராசிக்கு 3ம் வீட்டை குரு பார்ப்பதால் எங்கு சென்றாலும் மதிக்கப்படுவீர்கள். தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். இளைய சகோதர வகையில் ஆதாயமடைவீர்கள். பழைய கடன் பிரச்னையை தீர்க்க புதுவழி பிறக்கும். வெளிநாட்டிற்கு செல்ல விசா கிடைக்கும். உங்களை தாழ்த்திப் பேசியவர்களெல்லாம் திருந்துவார்கள். வழக்குகள் சாதகமாக முடியும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்
5.7.2015 முதல் 6.9.2015 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்கால கட்டத்தில் தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். பால்ய நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். என்றாலும் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். யாருக்கும் சாட்சிக் கையெழுத்து போட வேண்டாம்.
7.9.2015 முதல் 16.11.2015 வரை மற்றும் 20.5.2016 முதல் 9.7.2016 வரை உங்கள் சுகபாக்யாதிபதியான சுக்கிரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் திடீர் யோகம், அதிரடி முன்னேற்றம் உண்டாகும். விலை உயர்ந்த செல்போன், லாப்டாப், டேப் வாங்குவீர்கள். ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தில் முதலீடு செய்வீர்கள். தாயார் மற்றும் தாய்வழியில் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். விலகியிருந்த மூத்த சகோதரங்கள் விரும்பி வந்து பேசுவார்கள். உங்கள் ரசனைக் கேற்ற வீடு, வாகனம் அமையும்.
17.11.2015 முதல் 20.12.2015 வரை மற்றும் 10.7.2016 முதல் 1.8.2016 வரை குருபகவான் உங்கள் சப்தமாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால் உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன்-மனைவிக்கு நெருக்கம் அதிகரிக்கும். மனைவி வழியில் செல்வாக்கு உயரும். புது வேலை அமையும். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும்.
21.12.2015 முதல் 19.1.2016 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பணப் பற்றாக்குறை, வீண் அலைச்சல், முன்கோபம், வாகன விபத்துகள், உறவினர் பகை வந்து செல்லும். சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும்.
குருபகவானின் வக்ர கால பயணம்
20.1.2016 முதல் 6.2.2016 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால் குழப்பங்கள் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். நட்பால் ஆதாயம் உண்டு. சொந்தபந்தங்கள் தேடி வரும். பிள்ளைகள் நீண்ட காலமாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். அயல்நாட்டிலிருப்பவர்களால் உதவிகள் உண்டு.
7.2.2016 முதல் 7.3.2016 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால் வீடுகட்ட வங்கிகளில் பணம் வாங்கியிருந்தவர்கள் சில தவணைகளை குறிப்பிட்ட நேரத்தில் செலுத்த முடியாத அளவிற்கு தர்ம சங்கடத்தில் மூழ்கக் கூடும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். மனைவிக்கு முதுகுவலி, தைராய்டு பிரச்னை, மாதவிடாய்க் கோளாறு வந்து செல்லும்.
8.3.2016 முதல் 19.5.2016 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால் பெற்றோரின் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள்.
வியாபாரிகளே! கடுமையான போட்டிகளும், சூழ்ச்சிகளும் நிலவியதே! சிலரின் தவறான வழிகாட்டுதலால் கடன் வாங்கி முதலீடு செய்தும் லாபம் பார்க்க முடியாமல் திணறினீர்களே! உங்களுக்குப் பின் கடையை தொடங்கியவர்களெல்லாம் உங்களைவிட அதிகம் சம்பாதித்தார்களே! இனி அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். புதிய முயற்சிகள் பலிதமாகும். வேலையாட்களுக்கு தொழில் ரகசியங்களை சொல்லிக் கொடுத்த உங்களையே பதம் பார்த்தார்களே! சில சமயங்களில் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு ஓடிப் போனார்களே! இனி உங்களைப் புரிந்துக் கொண்டு உங்களை மதிக்கும் வேலையாட்கள் அமைவார்கள். இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களை கவருவீர்கள். புது கிளைகள் தொடங்குவீர்கள். ஷேர், ஸ்பெகுலேஷன், இரும்பு, லாட்ஜிங், போர்டிங் வகைகளால் லாபமடைவீர்கள்.
உத்யோகஸ்தர்களே! வேலைச்சுமை குறையும். உங்களைவிட கல்வித் தகுதியில், வயதில் குறைவானவர்களிடம் எல்லாம் அசிங்கப்பட்டீர்களே! இனி அந்த அவல நிலை மாறும். அலட்சியம் நீங்கி இனி ஆர்வத்துடன் பணிப்புரிவீர்கள். மேலதிகாரியுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். மூத்த அதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். சக ஊழியர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். புது பொறுப்புகள், பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் இருந்து நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.
கன்னிப் பெண்களே! கசந்த காதல் இனிக்கும். தடைபட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். உங்கள் ரசனைக்கேற்ற நல்ல வாழ்க்கைத்துணைவர் அமைவார். உங்களுடைய தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். மாதவிடாய்க் கோளாறு நீங்கும்.
மாணவ மாணவிகளே! படிப்பில் ஆர்வமில்லாமல் இருந்தீர்களே! இனி லட்சியத்தோடு படிப்பீர்கள். நினைவாற்றல் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டு. ஆசிரியரின் பாராட்டைப் பெறுவீர்கள்.
கலைத்துறையினரே! உங்களைப் பற்றிய வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். பட்டிதொட்டியெங்கும் நீங்கள் பரவலாக பேசப்படுவீர்கள். உங்களின் யதார்த்தமான படைப்புகளால் மூத்த கலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள்.
விவசாயிகளே! விளைச்சல் பெருகும். பாதிப்பணம் தந்து பத்திரப்பதிவு செய்யப்படாமல் இருந்த நிலத்தை மீதிப் பணம் தந்து கிரயம் செய்வீர்கள். வீட்டில் தடைப்பட்டு வந்த விசேஷங்கள் நடந்தேறும்.
பரிகாரம்: குருபகவான் தன் மகன் கசனுக்காக தவம் புரிந்த தலம், குருவித்துறை. மதுரை பேருந்து நிலையத்திலிருந்து குருவித்துறைக்கு செல்ல பேருந்துகள் உள்ளன. இத்தலத்திற்கு சென்று தரிசித்து வாருங்கள்.




Post a Comment