Header Ads

மீனம்

கலகலப்பாக பேசிப் பழகினாலும் காரியத்தில் கறாராக இருப்பீர்கள். கலை இலக்கியங்களை வெகுவாக ரசிப்பீர்கள். அனுசரித்துப் போகும் குணம் கொண்ட நீங்கள், அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்படி எதையாவது சாதிப்பவர்கள். கொடுத்துச் சிவந்த கைகளை உடைய நீங்கள், நெஞ்சில் தோன்றுவதை முகத்துக்கு நேராகப் பேசுவீர்கள். உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு உங்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியதுடன், அடிப்படை வசதி, வாய்ப்புகளையும், பணப்புழக்கத்தையும் தந்த குருபகவான் இப்போது 5.7.2015 முதல் 1.8.2016 வரை உங்கள் ராசிக்கு ஆறாவது வீட்டில் அமர்ந்து பலன் தருவார். ‘சத்ய மாமுனி ஆறிலே இருகாலிலே தளைப்பூண்டதும்’ என்று பழைய பாடல் கூறுகிறது. சகட குருவாச்சே!


சங்கடங்களையும், சச்சரவுகளையும் தருவாரே! என்று கலங்காதீர்கள். அதன்படி எதிலும் சின்னச் சின்ன தடைகள் இருக்கத்தான் செய்யும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவினங்கள் இருந்து கொண்டேயிருக்கும். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட விவகாரத்தில் கோர்ட்டு, கேஸ் என்று நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்காதீர்கள். சிலர், உங்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வார்கள். உங்களது பெயருக்கும், புகழுக்கும் கலங்கம் விளைவிக்க சிலர் முயற்சி செய்வார்கள். கழிவுநீர் அடைப்பு, கூடுதல் அறை கட்டுவதற்காக வீட்டை இடித்து மாற்றுவீர்கள்.

குருபகவான் தனது 9ம் பார்வையால் உங்களின் குடும்ப ஸ்தானமான 2ம் வீட்டை பார்ப்பதால் இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணவரவு உண்டு. குரு தனது 5ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 10ம் வீட்டைப் பார்ப்பதால் வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். குருபகவான் தனது 7ம் பார்வையால் உங்களின் 12ம் வீட்டை பார்ப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும். அண்டை மாநில புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். தள்ளிப்போன உங்கள் மகளின் கல்யாணத்தை பிரபலங்களின் முன்னிலையில் நடத்துவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

5.7.2015 முதல் 6.9.2015 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலகட்டத்தில் உங்கள் பலவீனங்களையெல்லாம் பட்டியலிட்டு அவற்றையெல்லாம் மாற்றிக் கொள்வீர்கள். சில விஷயங்களில் பெருந்தன்மையான முடிவுகள் எடுப்பீர்கள். என்றாலும் அலைச்சலும், செலவினங்களும் வந்துபோகும்.

7.9.2015 முதல் 16.11.2015 வரை மற்றும் 20.5.2016 முதல் 9.7.2016 வரை சேவகாதிபதியும்அஷ்டமாதிபதியுமான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் திடீர் பயணங்களால் திணறுவீர்கள். இனந்தெரியாத சின்னச் சின்ன கவலைகள் வந்துபோகும். மனைவியைக் குறைகூறிக் கொண்டிருக்க வேண்டாம். இளைய சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். பழைய வீட்டை சீர் செய்வீர்கள்.

17.11.2015 முதல் 20.12.2015 வரை மற்றும் 10.7.2016 முதல் 1.8.2016 வரை குருபகவான் உங்கள் பூர்வ புண்யாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். பழைய கடன் பிரச்னையை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். அரசு விவகாரங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. யூரினரி இன்ஃபெக்சன், அலர்ஜி வந்து போகும். உறவினர்கள் விஷயத்தில் அத்துமீறி மூக்கை நுழைக்க வேண்டாம்.

21.12.2015 முதல் 19.1.2016 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால் உங்களுடைய திறமைகள் வெளிப்படும். தள்ளிப் போன அரசு காரியங்கள் விரைந்து முடியும். நட்பு வட்டம் விரிவடையும். மனைவி வழியில் உதவிகள் உண்டு. புதுவேலை கிடைக்கும். பழைய ஆபரணங்களை மாற்றிவிட்டு புது டிசைனில் நகை வாங்குவீர்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். 

குருபகவானின் வக்ர கால பயணம்

20.1.2016 முதல் 6.2.2016 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால் வீண் விரயங்கள், எதிலும் பிடிப்பற்றப் போக்கு, கணவன்-மனைவிக்குள் வாக்குவாதம், சின்னச் சின்ன ஏமாற்றங்கள், தாழ்வுமனப்பான்மை வந்து போகும்.

7.2.2016 முதல் 7.3.2016 வரை உள்ள கால கட்டத்தில் உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த சுற்றுலா தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.     

8.3.2016 முதல் 19.5.2016 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் சுயநலவாதிகள் யார் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். நீண்ட காலமாக பார்க்க வேண்டுமென்று நினைத்திருந்த நண்பர்கள், உறவினர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிறர், தன் வேலையாகும் வரை தன்னை பயன்படுத்திக் கொண்டு தூக்கி எரிகிறார்கள் என்றெல்லாம் அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள்.

வியாபாரிகளே! ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். போட்டிகள் இருக்கும். வேலையாட்களை நீங்கள் பாகுபாடு பார்க்காமல் சரிசமமாக நடத்துபவர்கள் தான். ஆனால், அதுவே சில நேரங்களில் தர்மசங்கடமாகும். பாக்கிகளை அலைந்து, திரிந்து வசூலிக்க வேண்டி வரும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளுங்கள். இரும்பு, உணவு, கன்ஸ்ட்ரக்சன் வகைகளால் ஆதாயம் உண்டு. மற்றவர்கள் சொல்கிறார்கள் என்று தெரியாத துறையில் இறங்க வேண்டாம். பங்குதாரர்களால் நெருக்கடிகள் வந்து நீங்கும். அக்கம் பக்கத்து கடைக்காரர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

உத்யோகஸ்தர்களே! மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டியது வரும். மூத்த அதிகாரிகளை திருப்திபடுத்த முடியாமல் திணறுவீர்கள். உங்களைப்பற்றிய விமர்சனங்கள் அதிகமாகும். சிலர் தங்களை அறிவாளியாக காட்டிக்கொள்ள உங்களை மட்டம் தட்டி மேலிடத்தில் சொல்லி வைப்பார்கள். பணியில் திடீர் இடமாற்றம் உண்டு. சகஊழியர்கள் உங்களை மதிக்காமல் போவார்கள். எதிர்பார்த்த சலுகைகளையும், சம்பள உயர்வையும் போராடி பெற வேண்டியது வரும். சிலர் உங்கள் மீது அவதூறு வழக்குகள் தொடர வாய்ப்பிருக்கிறது. 

கன்னிப் பெண்களே! மனதை அலைபாயவிடாமல் ஒருநிலைப் படுத்துங்கள். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி காதல் வயப்படாதீர்கள். எஸ்.எம்.எஸ்., இமெயிலை கவனமாக கையாளுங்கள். தோலில் நமைச்சல், அடிவயிற்றில் வலி வந்து போகும். பெற்றோரிடம் எதையும் மறைக்க வேண்டாம்.

மாணவ மாணவிகளே! மொபைல் போனில் பேசுவது, டி.வி. பார்ப்பதை எல்லாம் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்துங்கள். சின்னச் சின்ன உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. கூடாப்பழக்க வழக்கங்களை விட்டு விடுங்கள். தகாத நட்புகளையும் தவிர்ப்பது நல்லது. கூச்சமும், தயக்கமும் இல்லாமல் சந்தேகங்களை கேளுங்கள்.

அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டத்தைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். உட்கட்சிப் பூசல் அதிகரிக்கும். வழக்கால் அலைகழிக்கப்படுவீர்கள்.    

கலைத்துறையினரே! மறைமுக விமர்சனங்களும், எதிர்ப்புகளும் அதிகமாகும். படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும். சம்பள விஷயத்தில் விட்டுக் கொடுத்து போங்கள்.

விவசாயிகளே! அண்டை நிலத்தாருடன் அனுசரித்துப் போங்கள். வாய்க்கால், வரப்புச் சண்டையை பெரிதாக்கிக் கொள்ள வேண்டாம்.

பரிகாரம்: சென்னை பாடியில் உள்ளது திருவலிதாயம் திருக்கோயில். மிகவும் தொன்மையான இத்தலத்தில் வீராசன கோலத்தில் தட்சிணாமூர்த்தி அருள்கிறார். இயன்ற போதெல்லாம் சென்று வாருங்கள்.

கருத்துகள் இல்லை