Header Ads

கூத்து கலைக்கான சதங்கைகளை செய்ப்பவர் நாகசக்தி கலை மன்றத்தினால் கௌரவிப்பு

கூத்துக்கலைக்கான சதங்கைகளை செய்து சிறந்த பணியாற்றிக்கொண்டிருக்கும் போரதீவு முனைத்தீவு கிராமத்தினைச்சேர்ந்த கணபதிப்பிள்ளை வேதவனம் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று(09) முனைக்காடு நாகசக்தி கலை மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.


இவரது இல்லத்தில் வைத்து குறித்த கௌரவிப்பு நடைபெற்றது. இதன்போது பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து, நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 

தனது 18வயதில் இருந்து செம்பு, வெண்கலம் உருக்கு வேலைகளை ஆரம்பித்த இவர் தற்போது 81வயதுவரை இப்பணியினை முன்னெடுத்து வருகின்றார். 63வருடங்களாக மேற்கொண்டு வரும் குறித்த வேலையில் தமிழரின் பாராம்பரிய கூத்துக்கலைக்கான எண்ணிலடங்காத சதங்கைகளையும் உருவாக்கி கொடுத்து வருகின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போதும் கூத்தர்களின் கால்களில் ஒலிக்கும் சதங்கைகளை உருவாக்கிய பெருமை இவரையே சாரும். நவீனத்துவங்கள் பல முன்னேற்றம் அடைந்தாலும் தான் பாரம்பரியமாக பயன்படுத்திவருகின்ற உபகரணங்களை கொண்டே சிறந்த கலையம்சங்களுடன் பல பொருட்களை உருவாக்கி கொடுத்துள்ளார். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவரை தவிர  நுணுக்கங்களுடன் சதங்கை செய்வதற்கு எவரும் இல்லாமை மாவட்ட மக்கள் கலைசார்ந்து எதிர் நோக்கியுள்ள பாரிய சவாலாகும்.  தற்போது 81 வயதுகளை கடந்து செல்கின்ற போதும் அவருடய வேலைகளை செய்து கொண்டிருப்பது வியப்பை தரும் விடயமே தான் செய்கின்ற இந்த கலை வேலைப்பாடுகளை தங்கள் பிள்ளைகள் உட்பட பிறரும் முன்வரவில்லை என்று ஏக்கம் கொள்ளும். இவர் எதிர் காலத்தில் கூத்துக் கலையின் நிலையினயும் முன்நோக்கி சிந்திக்கின்றார். இவ்வாறான செயற்பாட்டாளர்களை தேடி கௌரவிக்கும் செயற்பாட்டில் நாகசக்தி கலை மன்றம் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.