முனைக்காடு மண்ணில் இருந்து 36வருடங்களுக்கு முன்பு பிரசவமான முதல் 'ஒளி"
1979ல் ஆரம்பித்த ஒளிக்கல்லூரி, தனது ஒளியை மேலும் பிரகாசிக்க செய்யும் நோக்கில் 1984 மாசி மாதத்தில் தனது, முதலாவது பிரசவமான ஒளி என்ற சஞ்சிகையை வெளியிட்டிருக்கின்றது. அப்போதைய காலத்தில் கிடைத்த வசதி வாய்ப்புக்களைக் கொண்டு அச்சுப்பிரதியாக தனது ஒளியினை ஒளிர விட ஆரம்பித்திருக்கின்றது. முன் அட்டை தொடக்கம் பின்னட்டை வரையான 20பக்கங்களை கொண்ட வகையில் இதனது பிரசவம் அமைந்துள்ளது.
முதன் முதலாக மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் வெளிவந்த சஞ்சிகையாகவும் ஒளி உள்ளதென்பது, ஆய்வுகளின் மூலமாக வெளிப்படுகின்றது. பல்வேறு காலகட்டங்களில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக தொடர்ச்சியாக ஒளி வெளிவரா விட்டாலும், ஆறு பிரசவங்களை சமூகத்திற்கு கொடுத்துள்ளது.
இதன் முதல் பிரசவம், முனைக்காடு கிராமத்தினைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற வடக்கு, கிழக்கு மாகாண பிரதிக்கல்விப் பணிப்பாளர் சிந்தாத்துரை வரதசீலன் அவர்களை ஆசிரியராக கொண்டே இச்சஞ்சிகை வெளிவந்துள்ளது. கணித சமன்பாடுகளையும், கணித உபகரணங்களையும், மனித உருவங்களையும், மனஅழுத்தங்களையும் வெளிக்காட்டும் வகையில் இதனது முகப்பு அட்டை காணப்படுகின்றது.
இரண்டாவது பக்கத்தில், 'உள்ளத்தில் உண்மை ஒளி பிறக்குமாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்" என்ற பாரதியின் சிந்தனையை முன்னிறுத்தி ஒளியை பிரகாசிக்க செய்கின்றது. முனைக்காடு ஒளிக்கல்லூரியின் வெளியீடாக வெளிவந்த 'ஒளி" தனது அமைப்பின் மகுட வாசகத்திற்கும் விளக்கம் கொடுக்கின்றது. 'ஆகுக ஆக்குக" என்பதனை குறிக்கோள் வாக்கியமாக கொண்டு அதற்கு கீழ்வருமாறு விளக்கம் அளிக்கப்படுகின்றது.
கற்றவன் ஆகு, கற்றவனை ஆக்கு,
பண்பாளன் ஆகு, பண்பாளனை ஆக்கு
சிந்திப்பவன் ஆகு, சிந்திப்பனை ஆக்கு
மொத்தத்தில் மனிதன் ஆகு, மனிதனை ஆக்கு
இச்சிந்தனைக்கேற்ப படுவான்கரைப் பிரதேசத்தில் அதிக கல்விமான்களை உருவாக்கிய பெருமை ஒளிக்கல்லூரிக்கு இருக்கின்றது என்பதனையும் அறிய முடிகின்றது.
முதலாவது பஎன இலக்கமிடப்பட்டுள்ள பக்கத்தில் ஒளிக்கல்லூரி அமைப்பின் ஸ்தாபகர் பேராசிரியர் மா.செல்வராசா ஆசியுரை அமைகிறது. கால, தேச, வர்த்தமானங்களைக் கடந்து பிரகாசிக்க வேண்டுமென்பதும், இதன்மூலம் இலக்கிய கர்த்தாக்களும், எழுத்தாளர்களும் உருவாக வேண்டுமென்பதும், இதில் வெளிவரும் ஆக்கங்கள் நாட்டு முன்னேற்றத்திற்கு உறுதுணையாக அமைய வேண்டும் என்பதும் அவரது அவாவாக கூறி தனது ஆசிகளை வழங்கியிருக்கின்றார்.
இரண்டாவது பக்கத்தில்தான் ஆசிரியரின் ஒளியின் ஒலி எழுதப்பட்டிருக்கின்றது. நாம் வாழும் சமூகம், அதன் பல்துறைப் பின்னணிகள், எதிர்நோக்கும் சவால்கள், எதிர்காலப் பிரச்சினைகள் என்பன பற்றிய தெளிவான, நிதானமான, அறிவுபூர்வமான சிந்தனை எல்லோரிடத்தும் ஏற்படுவது அவசியம். இந்த அடிப்படையில் முனைப்பாக பணியாற்றி வரும் ஒளிக்கல்லூரியின் கூட்டுழைப்பின் பெறுபேறே இந்த ஒளியென்பதனை ஆசிரியர் சுட்டிக்காட்டுக்கின்றார். இவ்வாறு ஆசிரியர் குறிப்பிட்டிருக்கின்ற குறைந்தளவிலான கருத்துக்கள், ஆழமானதும், அகலமானதுமான விடயங்களை சுட்டிச்செல்கின்றன.
ஆசிரியரின் கருத்தினை அடுத்து, மாணவர்களுக்கும், மற்றவர்களுக்கும் பயனுள்ள வகையில் அப்போதைய காலத்தில் அவசியமாக உணரப்பட்ட, நவீன வருகையின் தயாரிப்பில் உருவான ஒலிப்பதிவு நாடாக்கள் (க்சேட் டேப்கள்) பற்றியதான விடயங்களை உள்ளடக்கிய கட்;டுரையாக அமைந்துள்ளது. இக்கட்டுரையை ராஜன் எழுதியுள்ளதுடன், இதில் ஒலிப்பதிவு நாடா அமையப்பெற்றுள்ள விதம், அதில் உள்ள பாகங்கள், அதனுடைய இயக்கம், நாடக்களில் பதிவினை மேற்கொள்ளல், அவை அழிந்தால் அதற்கான மாற்றுவழி, அதனை பாதுகாப்பதற்கான வழிபோன்ற பல்வேறு விடயங்களை இக்கட்டுரை கொடுத்திருக்கின்றது. இப்போதைய காலத்தில் அதனது பயன்பாடு இல்லாது போயினாலும், குறித்த ஒளி சஞ்சிகை வெளிவந்த காலத்தில் அதனது பயன்பாடு மிகவும் அவசியமாக உணரப்பட்ட சூழலாக அமைந்திருக்கின்றது என்பதை அறியமுடிகின்றது. அதனடிப்படையில், இக்கட்டுரை அக்கால மாணவர்களுக்கும், இத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கும் மிகவும் அவசியமானதொன்றாகவே அமைந்திருக்கும். புதிய புதிய கண்டுபிடிப்புக்கள் வெளிவருகின்ற போது, அதனை கையாளும் விதம், அதிலிருக்கின்ற விடயங்களை எல்லோரும் அறிந்து கொள்வதுமில்லை. அதற்கான சந்தர்ப்பங்கள் கிடைப்பதுமில்லை. தற்காலம் எதனையும் இணையமூலமாக அறியக்கூடிய வாய்ப்பிருக்கின்றது. அப்போது அவ்வசதிகள் இல்லாமை இருந்தமையினால், இக்கட்டுரை மிகமிக அவசியமான கட்டுரையாக பார்க்கப்பட்டிருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
இக்கட்டுரையின் இறுதியில்,. 'நாடு முன்னேற வேண்டுமானால் ஜாதகத்தையோ, சோதிடத்தையோ நம்பிப்பயனில்லை. நட்சத்திரங்களை அண்ணாந்து பார்த்தும் பயனில்லை. கடின உழைப்பு அதுதான் தேவை" என ஜவஉறர்லால் நேரு குறிப்பிட்ட சிந்தனையொன்றும் அச்சிடப்பட்டிருக்கின்றது.
சஞ்சிகையின் ஏழாவது பக்கத்தில், கல்வியும் கருத்துக்களும் என்ற தலைப்பில் க.யோகநாதன் எழுதிய கட்டுரை பிரசுரமாகியுள்ளது. இக்கட்டுரை கல்வி பற்றி சமூகத்தில் உள்ள நான்கு விடயங்களை சுட்டிக்காட்டுகின்றது.
1. கல்வி என்பது கடவுளின் கொடை
2. கல்வி பிறப்பு வழி வருவது
3. பெண்ணறிவைவிட ஆணறிவு உயர்ந்தது
4. மனனஞ்செய்தற் திறனே கல்வியின் சிறப்பு
போன்ற நான்கு கருத்துக்கள் சமூகத்தில் நிலவுகின்றன. இக்கருத்துக்கள் நான்கும் தவறானது என்பதனை கட்டுரை ஆசிரியர் கூற விழைகின்றார். கல்வி என்பது கடவுளால் கொடுக்கப்பட்டதல்ல. நாம் வாழும் சூழலில், நமக்கான வசதி, வாய்ப்புக்களுக்கேற்ப பயன்படுத்தி முன்னேறிச் செல்வதே தவிர இது கடவுளால் தரப்படுவதில்லையென்றும், பிறக்கும் போதே கல்வி வருவதில்லை. பிறந்ததன் பின்பு கற்கும் போதே பெறப்படுவதென்றும், பெண்கள் பல்வேறு துறைகளில் ஆண்களைவிட முன்னிலையில் நிற்கின்றனர் என்பதனையும், மனனஞ்செய்தற்திறனே கல்வியின் சிறப்பு என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்பதனை இக்கட்டுரையின் ஊடாக கூறி, ஊக்கமும், உள்வலியும் பெற்று முன்னேற வேண்டும் என்பதனை சுட்டிக்காட்டுகின்றார். இக்கட்ரையாசிரியர் கூறுகின்ற விடயங்கள் தற்போதும் சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றன. அவ்வகையில் இக்கட்டுரை இக்காலப்பகுதிக்கும் முக்கியமானதொன்றே.
சஞ்சிகையின் 11வது பக்கம் ஒளிக்கல்லூரியின் தோற்றுவாய், அதன் செயற்பாடுகளை கூறிநிற்கின்றது. 13வது பக்கத்தில் மதங்கள் கூறுவதென்ன? என்ற தலைப்பில் கணேஸ், கிருஸ்ணா எழுதிய கட்டுரை பிரசுரிமாகியிருக்கின்றது. இக்கட்டுரை, மனிதனுக்காகவேதான் மதங்களே தவிர, மதங்களுக்காக மனிதனல்ல என்ற விடயத்தினைச் சுட்டிக்காட்டுவதுடன், மதங்கள் வழங்குகின்ற அன்னதானம் பற்றியும், அதன் அவசியம் குறித்தும் கூறுவதுடன், மனிதர்கள் எல்லோரும் ஒன்று என்பதையும், ஒருமித்து செயற்பட வேண்டும் என்ற விடயத்தினையும் இக்கட்டுரை கூறி நிற்கின்றது. பல் இடங்களில் இன்றும், மத ரீதியான வன்முறைகள் மேலெழுகின்றமையை அவதானிக்க கூடியதாகவே இருக்கின்றன. மதம் என்பது மதம்(வெறி) என்ற சிந்தனை கொண்டவர்களாக உருவாகக்கூடாதென்பதே இக்கட்டுரையின் சாரம்சமாகும்.
கட்டுரைகளை தொடர்;ச்சியாக கொண்ட இச்சஞ்சிகையின் 15ம் பக்கத்தில் சீலன் எழுதிய அக்கரைப்படாதே என்ற கவிதை இடம்பிடித்திருக்கின்றது. இக்கவிதை படுவான்கரை எப்போது எழுச்சிபெறும் என்பதனை ஆதங்கத்துடன் கவிஞர் வினவுகின்றார். கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை வரை இப்பகுதியில் கல்வி கற்றாலும், உயர்தரம் கற்கமுடியாத நிலை, இந்நிலை எப்போது மாறும், ஆற்றினைக்கடந்து எழுவான்கரைப் பக்கம் சென்று கற்பது என்றாலும் அதற்கு வசதி வாய்ப்பில்லாத ஏழை என்பதனை தனது கவி வரிகள் ஊடாக கவிஞர் எடுத்துக்காட்டுகின்றார்.
ஏஎல் நீபடிக்க எனக்கும் விருப்பந்தான்
என்றாலும் என்மகனே எண்ணிப்பார் நம் நிலையை
ஏழை அம்மா நான் இதை நீ அறியாயோ
எந்நாளும் டவுணுக்கும் போய்வாற செலவுக்கு
என்னவழி செய்வேன் ஏலுமோ ஏழை என்னால்
போர்டிங் கில் நிற்பாட்டிக் காசுகட்ட நீ என்ன
போடி மகனோ ஏழை பொன்னி மகன்தானே.
இவ்வரிகள், படுவான்கரை மக்களின் குடும்ப வறுமையினை எடுத்துரைக்கின்றன. ஓஎல் வரை படிப்பதற்கு பாடசாலையில் வசதிகள் இல்லாது போனாலும், ஒளிக்கல்லூரி அமைப்பும் உதவி செய்து, நீ சிறந்த பெறுபேற்றினை பெற்றிருக்கின்றாய். ஆனால் இங்கு ஏஎல் படிக்க வசதி இல்லையே என்பதனையும் கவிஞர் சிறப்பாக குறிப்பிடுகின்றார்.
நன்றாகப் படித்து நாலுடீ, மூணு சீ
என்றே றிசல்ட் எடுத்தாய். எடுத்தும் என்செய்ய
ஏஎல் நீ படிக்க இங்கே வசதியில்லை.
இவ்வரிகள் அதனை எடுத்துக்காட்டுகின்றன.
சமகல்வி, சமவாய்ப்பு, சமத்துவம் என்று குறிப்பிட்டாலும், இன்னமும் படுவான்கரைப்பிரதேசத்தில் அவ்வாறான சமகல்வி கிடைக்கவில்லை என்பதனையும் கவிஞர் கூறுகின்றார். தற்போதும் எவ்வாறான நவீன வசதி வாய்ப்புக்கள் இருந்தாலும், படுவான்கரையில் உள்ள பாடசாலைகள் பல்வேறு அடிப்படை வசதிகள் இன்றியே காணப்படுகின்றன. இதனால், ஏனைய இடங்களுக்கு கல்வியை தேடி ஓட வேண்டியதும், வறுமையினால் கல்வியை விட வேண்டியதுமான நிலை காணப்படுகின்றது. இக்கவிதை இக்காலத்திற்கும் பொருத்தமான வகையிலேயே அமைந்துள்ளதெனலாம்.
சஞ்சிகையின் 16ம் பக்கத்தில் கூவான்கோழியும், கொட்டைப்பாக்கான் குருவியும் எனும் தலைப்பில் அமைந்த உரையாடல் பாங்கிலான ஆக்கம் இடப்பட்டுள்ளது. இவ்வாக்கத்தினை வரதன் எழுதியிருக்கின்றார். இரண்டு ஐந்து அறிவு படைத்த உயிரனங்கள், சமூகப் பிரச்சினையொன்றினை பேசுவதாக இது அமைந்துள்ளது. இங்குள்ள மக்கள் தமது பயணங்களை ஆற்றின் வழியாகவே பயணிக்க வேண்டிய சூழல் அக்காலத்தில் அதிகமாகவே இருந்தது. இதற்காக தோணி, படகு போன்றவற்றினைப் பயன்படுத்துவண்டு. பாடசாலை செல்லும் மாணவர்களும், பரீட்சை எழுத செல்லும் மாணவர்களும் இதனால் பெரிதும் பாதிப்பர். மழை காலங்களில் இப்பாதிப்பினை அதிகம் எதிர்கொள்வர். இதனால் இறப்பினையும் சந்திக்கும் நிலையேற்படும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் மாத்திரம் அவ்விடங்களுக்கு ஊர்த்தலைவர்களும் ஏனையவர்களும் வருகைதந்து அது செய்வோம், இது செய்வோம் என பேசுவதுண்டு. ஆனால் நிறைவேறுவதில்லை.
இக்காரியத்தினை நிறைவேற்ற வேண்டும், உரியவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதனை நோக்காக கொண்டுதான், இரு ஐந்து அறிவுள்ள ஜீவன் கவலை கொள்வதும் போன்று ஆறு அறிவுள்ள மனிதர்கள் சந்தர்ப்பத்தினை சூழல்நிலைக்கு மாத்திரம் பேசிக்கொள்வது பிறகு பேசதில்லை என்பதனை வெளிகாட்டும் வகையில் இவ்வுரையாடல் அமைந்துள்ளது. இதன் மூலமாக ஓஎல் பரீட்சை நிலையமொன்று குறித்த பகுதியில் அமைக்கப்பட வேண்டும் என்பதனையும் சுட்டிக்காட்டுகின்றது. குறித்த சஞ்சிகை வெளிவந்த காலப்பகுதியில் மண்முனை துறையை கடந்துள்ள இடங்களுக்கே பொதுப்பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கு செல்லவேண்டியிருந்தது. அதனை எடுத்துச்சொல்வதாகவே இவ்வுரையாடல் அமையப்பெற்றுள்ளது.
இவ்வுரையாடல், வித்தியாசமான முறையில் எழுதப்பட்டிருக்கின்றமை, அவருக்கேயுரியதான பாங்காக அமைகிறது. இது வாசகர்கள் பலரை வாசிப்பதற்கு தூண்டியிருக்கும், தூண்டும் என்பதில் ஐயமில்லை.
இறுதியாக ஒளி சஞ்சிகை பற்றிய கருத்துக்களையும், அடுத்த சஞ்சிகையில் பிரசுரிக்க ஆக்கங்களையும் அனுப்புங்கள் எனவும் கூறப்பட்டுள்ளன.
இற்றைக்கு 36வருடங்களுக்கு முன்னிருந்து வெளிவர தொடங்கிய ஒளி 6இதழ்களுடன் நிறைவுற்றிருக்கின்றன. அவற்றில் முதலாது பிரசவமாக வெளிவந்த கற்றை 1, கதிர் 1 பற்றிய விடயங்களை அவதானித்தோம். அடுத்த கட்டுரையில், ஒளி 2பற்றிய விடயங்களை கொண்டு சேர்ப்போம்.............
"ஒளி என்றும் ஒளியேற்றட்டும்."
- வ.துசாந்தன் -



Post a Comment